இலக்கியம்

வரலாற்று பொக்கிஷங்கள் - தி. வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி

செய்திப்பிரிவு

எங்கள் ஊரில் இருந்த வானொலி அறையில் நான்கு அடுக்குகள் கொண்ட சிறிய நூலகம் ஒன்று இருந்தது. அப்பாவுக்குப் புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டு. எங்கள் சுற்றுவட்டத்திலுள்ள 50 கிராமங்களிலேயே முதல் பட்டதாரிப் பெண் என் அக்கா. அவரும் புத்தகங்கள் படிப்பார். நூலகத்துக்குச் சென்று இருவருக்கும் புத்தகங்களை எடுத்துவந்து தருவதோடு நில்லாமல், நானும் அந்தப் புத்தகங்களை வாசிப்பேன்.

எங்கள் பள்ளிச் சுவர்களில் வ.உ.சி, கட்டபொம்மன், சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங் போன்றோரின் படங்களை ஒட்டியிருந்தார்கள். அவர்களைப் பற்றி அறிந்துகொள்ளும் நோக்கில் இந்திய வரலாறு மற்றும் உலக வரலாற்று நூல்களைப் படிக்கும் ஆர்வம் வந்து படித்தேன். ஒரு வலுவான சமூகத்தைக் கட்டமைப்பதில் புத்தகங்களுக்கு மிக முக்கியமான பங்குண்டு என்று உறுதியாகச் சொல்லலாம். அப்படி நான் படித்து பிரமித்த நூல் மாவீரன் செங்கிஸ்கான் பற்றியது.

கட்டுரை, சமூக வரலாறு, வாழ்க்கை வரலாற்று நூல்களையே அதிகம் படித்திருக்கிறேன். கவிதை நூல்கள் படிப்பதும் எனக்குப் பிடித்தமானது. காசி ஆனந்தன், அறிவுமதி, புதுவை இரத்தினதுரை, அப்துல் ரகுமான், நா. முத்துக்குமாரின் கவிதைகளை படித்து ரசிப்பேன்.

இயற்கை வேளாண் அறிஞர் மசானபு ஃபுகோகா எழுதிய ‘ஒற்றை வைக்கோல் புரட்சி - இயற்கை வேளாண்மை’ எனும் நூல் என்னை ரொம்பவும் பாதித்த நூல். நல்ல புத்தகங்கள் என்று என் கண்ணில் படுகிற நூல்களை நான் தவறவிடுவதில்லை. புத்தகக் காட்சிகள் என்றால் ஓடிவிடுவேன். சமீபத்தில் வாங்கியதில், பெண் கல்விக்காக போராடிவரும் மலாலா யூசுஃப்ஸையின் ‘நான் மலாலா’ நூலும், சுற்றுச்சூழல் ஆர்வலர் நக்கீரன் எழுதிய ‘உயிரைக் குடிக்கும் புட்டிநீர்’ நூலும் மிக முக்கியமான நூல்கள்.

- கேட்டு எழுதியவர் மு.முருகேஷ்

SCROLL FOR NEXT