வேதங்கள், உபநிடதங்கள் உள்ளிட்ட இந்து மதத் தத்துவங்ளையும் அவற்றின் வளமான சிந்தனைகளையும் பிரச்சினைகளையும் மனந்திறந்த மார்க்சியக் கண்ணோட்டத்தில் இதில் ஆராய்கிறார் கோவை ஞானி. புத்த மதத்தில் உள்ள உண்மைக்கான தேடுதலையும் ஆராய்ந்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவர் எம்.என்.ராய். ஐரோப்பியத் தத்துவங்களையும் இந்தியத் தத்துவங்களையும் மார்க்சிய நோக்கில் ஒப்பிட்டு விவாதித்த மிகச் சிலரில் ஒருவர். அவரது ‘மார்க்சியமும் அறவியலும்’ எனும் கட்டுரையை முன்வைத்தும் ஞானி ஒரு விவாதத்தை நடத்துகிறார்.
‘இந்தியாவில் பாசிசம் இந்து மத வடிவில்தான் வரும்’ என எம்.என்.ராய் தனது ‘பாசிசம்’ நூலில் 1950-களிலேயே முன்னறிவித்தவர். எம்.என். ராயின் பார்வைக்கு மாறாக, நமது முன்னோர்களின் இந்தியத் தத்துவங்களை ஒரு கொள்ளுப்பேரனின் பாசம் கலந்த மார்க்சியப் பார்வையோடு ஞானி தனது நூலில் பார்க்கிறார். நுணுக்கமான தத்துவப் பார்வையாக அது நமது வேர்களை மிகவும் நெருங்கி ஆராய்கிறது.
மார்க்சியம் மனிதனை வரலாற்றின் நீள அகலத்துக்கு விரித்திருக்கிறது. ஆனால், அதை வெட்டி, வெட்டி வயிறு அளவுக்குச் சுருக்கிவிட்டார்கள். மார்க்சியத்தில் இருக்கும் அறம்தான் அதன் தூக்கலான அம்சமாக இருக்க வேண்டும் என்கிறார் ஞானி. இன்று அந்த நிலை இல்லை என்கிறார்.
இந்திய மரபின் வழியாகப் பரிணமித்துள்ள ஒரு மரபு மார்க்சியவாதியின் வாதம். கேட்கச் சுவையாகத்தான் இருக்கிறது. தத்துவக் காதலர்களுக்கான புத்தகம்.
- த.நீதிராஜன்