இலக்கியம்

இடம் - பொருள் - இலக்கியம்: வாசித்தேன்... நேசித்தேன் 

மானா பாஸ்கரன்

கரோனா நாட்களின் வீடடங்கி இருத்தலை…. எனக்கு இனிமையாக்குவதில் முதல் இடத்தைப் பிடிப்பவை புத்தகங்கள்தான். ஒவ்வொரு புத்தகமும் ஒரு பறவைதான்… வாசிக்கும்போது உள்ளங்கைகளில் உட்கார்ந்திருக்கும் அந்தப் பறவை… வாசிக்க வாசிக்க இதய வானத்தில் சிறகசைத்துப் பறக்க ஆரம்பித்துவிடுகின்றன.

இதுவரை அறிந்திராத ஒரு உலகத்தை நமக்கு அறிமுகம் செய்கிற புத்தகங்கள்… தனது பச்சையங்களை நினைவின் இலைகளில் பூசிச் சென்றுவிடுகின்றன. அப்படி ஒரு புத்தகம்தான் நேற்று எனக்கு வாசிக்கக் கிடைத்தது.

வானம் – தனது புன்னகைத் தூறலால் முன்காலைப் பொழுதில் சுபலாலி பாடிக்கொண்டிருந்த வேளையில்… அந்தப் புத்தகம் எனது விரல்கிளையில் பூத்தது.

கி.மணிவண்ணன் எழுதிய ‘செம்மை மாதர்’ என்கிற புத்தகம்தான் அது. கலைஞர் தொலைக்காட்சியில் ‘ரசிகன்’ தொடர் மூலம் ஏற்கெனவே தமிழ் வாசகப் பரப்பை சென்றடைந்திருந்தவர் இவர். ஊடகத் துறையில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் மணிவண்ணன் படித்தது – பொறியியல் கல்வி. ரசனையும் தமிழும் காட்சிக்கனவும் இவரை கலையின் பக்கம் மேய வைத்திருக்கிறது.

காட்சி ஊடகம் கைவரப்பெற்றதனால் இந்நுலை வாசிப்பவரின் மனத்திரையில் மொழிவழியே காட்சிகளை விரியும் வகையில் நெய்திருக்கிறார்.

நீண்ட உரையாடல்களில் வார்த்தைகளின் நெரிசலை உருவாக்கிவிடக் கூடாது என்கிற கவனத்துடன் இக்கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

ஒரு கருத்தையொட்டிய நேர்காணலை படிக்கிறபோது…. கேள்வியும் பதிலுமாக பதியன் போடப்பட்டிருக்கும். இந்த உத்தியில் சில கேள்விகள் சுவாரஸ்யமாக இல்லாவிட்டால் வாசகன் அந்தக் கேள்வியையும் அதற்குரிய பதிலையும் ஒரே பாய்ச்சலாக பாய்ந்து தாண்டிச் சென்றுவிடுவான். ஒரு புத்தகம் முழுவதுமே நேர்காணல் உத்தியில் எழுதப்பட்டால்… அந்தப் புத்தகம் தனது கவுரவத்தை இழந்து சோகை படிந்து நிற்கும்.

ஆனால் – மணிவண்ணன்… இப்புத்தகத்தில் தமிழகத்தின் புகழ்பெற்ற 13 ஆளுமைகளைச் சந்தித்துள்ளார். அவர்கள் வாயைக் கிண்டிக் கிளறித் தகவல் திரட்டியிருக்கிறார். அவர்களைச் சுதந்திரமாகப் பேச வைத்திருக்கிறார். அவர்கள் வாயிலிருந்து உருகும் வார்த்தை மெழுகை தனது உள்ளங்கையில் சுடச் சுட ஏந்தியிருக்கிறார். ஒரு வாக்கியத்துக்கும் இன்னொரு வாக்கியத்துக்கும் இடையில் அவர்கள் விரித்த மவுன வலையை… இவர் தனக்குச் சாதகமாக விரித்து… அந்த ஆளுமை பேசும் தருணத்தின் பொழுதை… சூழலை… நறுமணத்தைப் புகுத்தியிருக்கிறார். காட்சி – உரையாடல் – மவுனம் – இசை எல்லாம் கூட்டி ஒரு திரைப் படைப்பாளி தனது கலைப் படைப்பை வடிப்பது மாதிரி…. காட்சி ஊடகத்தில் இருக்கிற மணிவண்ணன் இக்கட்டுரைகளைத் தந்திருக்கிறார். இதை ஒரு புது உத்தியாகவே நான் பார்க்கிறேன்.

வாசிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் இளைத்துக்கொண்டே வருகின்ற இந்த நாட்களில் மணிவண்ணன் பயன்படுத்தியிருக்கிற இந்தத் திரை உத்தியை… வார, மாத இதழ்கள் கைக்கொண்டால் எல்லாப் படைப்புகளும் வசீகரத் தன்மையைப் பெற்றுவிடும். நான் மிகைப்படுத்திச் சொல்வதாக நினைப்பவர்கள் இப்புத்தகத்தை வாசித்தால் நிச்சயம் நான் சொல்வதில் இருக்கும் ஈரத்தில் நனைவார்கள்.

அய்யா நல்லகண்ணு, கவிஞர்கள் வாலி, பழநிபாரதி, இயக்குநர்கள் மகேந்திரன், மணிவண்ணன், எழுத்தாளர்கள் பிரபஞ்சன், வண்ணதாசன், பாஸ்கர் சக்தி, அரசியல்வாதிகள் தமிழருவி மணியன், திருச்சி சிவா, வெ.இறையன்பு, ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, கிரேஸி மோகன் ஆகியோரைச் சந்தித்து… ‘உங்கள் வாழ்க்கையில் எப்ப்போதும் நினைவில் நீந்திக்கொண்டே இருக்கும் ஒரு பெண்மணியைப் பற்றி நீங்கள் பேச வேண்டும். அதேவேளையில் – அவர்கள் உங்கள் தாயாகவோ, மனைவியாகவோ, மகளாகவோ இருக்கக்கூடாது என்பது கண்டிஷன் அப்ளை. அந்தச் சட்டகத்துக்குள் 13 பேரும் புகுந்துப் புறப்பட்டுள்ளனர்.

பாப்பம்மாள் என்கிற பெண்மணியைப் பற்றி அய்யா நல்லகண்ணு சொல்லியிருப்பதை வாசிக்கும்போதே உள்ளுக்குள் நெகிழ்வு நிகழ்வு. தூக்குத் தண்டனையை எதிர்பார்த்துக் காத்திருந்த வேலாயுதம் என்கிற முடிதிருத்தும் தோழரின் மனைவிதான் இந்த பாப்பம்மாள்.

தனக்கு தூக்குத் தண்டனைதான் கிடைக்கும் என்று காத்திருந்த தனது கணவர் வேலாயுதத்தைப் பார்த்து ‘’நாலு வீட்டுக்கு நடந்து ஊர்ச்சாப்பாடு வாங்கியாவது எங்க வயித்தக் கழுவிக்குவோம். பீடி சுத்தியாவது நம்ம பிள்ளையள கரையேத்திடுவேன். கூடவே நம்ம தோழர்களும் இருக்காங்க… நீ எங்களப் பத்தி கவலைப்படாம தைரியமா இரு…’’ என்று பாப்பம்மாள் சொல்லியதை சிறை வளாகத்தில் அருகில் இருந்து அன்று கேட்டிருக்கிறார் நல்லகண்ணு. நெஞ்சுரமிக்க அந்த மனுஷியின் திடம்- மணம் - ருசி… அனைத்தும் வாசிக்கிற நமக்குள் தேயிலைத் துளிராய் நிமிர்கிறது.

ராமநாதபுரம் இளையான்குடியில் நிகழ்ந்த நிஜம் இது. தனது தாயின் தொப்புள்கொடியை அவசர அவசரமாக துண்டித்துக்கொண்டு குறைப் பிரசவச் சிசுவாக ஒரு குழந்தை பிறந்தபோது…. இந்தக் குழந்தையின் உயிரின் ஒளி சீக்கிரம் அணைந்துவிடும் என உற்றாரும் உறவினர்களும் சொன்ன அந்தத் தொட்டில் நாட்களில்… இன்குபேட்டர் வசதி மலராத அந்தக் காலத்தில் ஒரு பெண் மருத்துவர்…. அந்தச் சிசுவை எடுத்து, தனது அடிவயிற்றில் கட்டிக்கொண்டு தனது அடிவயிற்றுச் சூட்டைத் தொடர்ந்து சில நாட்களுக்கு அந்திப்பகல் பாராமல் அந்தச் சிசுவுக்கு மடைமாற்றி…. அந்த உடற்சூட்டிலேயே அக்குழந்தைக்கு உயிரூட்டியிருக்கிறார். அந்த மருத்துவ கருணையின் பெயர்: டாக்டர் சாரா.

''இப்போதும் எனது குருதி சூடாக இருக்கிறதென்றால் அது அந்த டாக்டர் சாராவின் அடிவயிற்றுச் சூடுதான்'' என்று உற்சாக உதிரிபூக்களால் நன்றியில் நனைந்த மாலையைத் தொடுப்பவர் இயக்குநர் மகேந்திரன்.

வண்ணதாசனை மணிவண்ணன் சந்தித்து சரம் தொடுக்க முனைகிறார். ‘’நான் நாகம்மக்காவைச் சந்தித்துவிட்டு வந்தபிறகு இதுபற்றி உங்களுடன் பேசுகிறேனே என்கிறார் அவர். காத்திருக்கிறார். ஒரு வழியாக வண்ணதாசன் தான் இளம்வயது முதல் இன்று வரை அன்பால் பின் தொடரும் நாகம்மக்காவைப் பற்றி பூத்தொடுத்துள்ளார்.

‘’நாகம்மக்கா எப்போதும் இப்படித்தான். மிக இயல்பாக எல்லா இடத்திற்கும் எல்லோரிடமும் முதல் ஆளாகப் போய்ச் சேர்ந்துவிட அவளுக்கு முடியும். எல்லா இடத்துக்கும் எல்லோரிடமும் போய்ச் சேர்ந்துகொள்வதைவிட உலகத்தில் கூடுதலாக ஒன்று இருக்கிறதா என்ன?” என்கிற வண்ணதாசனின் நாகம்மாக்கா நம் நினைவுத் தெருக்களிலும் ஒரு ஓவியமாய் அசைகிறாள். ரசனை மிதக்கும் இந்தப் புத்தகத்தை எல்லோரும் வாசிக்க வேண்டும் என்பதை கோரிக்கை ஆணையாகவே இங்கு விருப்பமுடன் வைக்கிறேன்.

செம்மை மாதர் – கி.மணிவண்ணன்

புத்தக வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்

கே.கே.நகர் மேற்கு,

சென்னை 600 078.

தொலைபேசி: 8754507070

விலை ரூ.160

SCROLL FOR NEXT