கொடிக்கால், ஸ்டான் லூர்துசாமிக்கு வி.ஆர்.கிருஷ்ணய்யர் விருது
மதுரை சோக்கோ அறக்கட்டளை ஆண்டுதோறும் வழங்கிவரும் நீதிநாயகம் வி.ஆர்.கிருஷ்ணய்யர் விருது, இந்த ஆண்டு மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான கொடிக்கால் ஷேக் அப்துல்லா, ஸ்டான் லூர்துசாமி இருவருக்கும் வழங்கப்பட உள்ளது. கிராமப் பகுதிகளில் சட்ட உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் சிறந்த செயற்பாட்டாளர்களைக் கௌரவிப்பதற்காக 1985-ல் தேசிய அளவில் தொடங்கப்பட்ட இவ்விருது, தற்போது மனித உரிமைச் செயற்பாட்டாளர்களையும் உள்ளடக்குவதாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் முன்னாள் நீதிபதிகள் ரத்னவேல் பாண்டியன், எஸ்.சிவசுப்பிரமணியன், அமைதி அறக்கட்டளை நிறுவனர் பால்பாஸ்கர், தேசிய பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் ஆணையர்
பி.டி.சர்மா, உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன், அரசியலரும் கொத்தடிமை மீட்பு இயக்கத் தலைவருமான சுவாமி அக்னிவேஷ், ‘ப்ரன்ட்லைன்’ இதழாசிரியர் விஜயசங்கர் உள்ளிட்ட பலரும் இந்த விருதால் கௌரவிக்கப்பட்டுள்ளனர். தமிழக எல்லைப் போராட்ட வீரரும் இடதுசாரி இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கொடிக்கால் ஷேக் அப்துல்லா, சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடிவரும் இயேசுசபை ஊழியரான ஸ்டான் லூர்துசாமி இருவரும் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானது.
அமெரிக்க விருதுப் பட்டியலில் பெருமாள்முருகன்
எழுத்தாளர் பெருமாள்முருகன் எழுதிய ‘பூனாட்சி’ நாவல், ஆங்கிலத்தில் ‘தி ஸ்டோரி ஆஃப் அ கோட்’ எனும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது.
என்.கல்யாணராமனின் மொழிபெயர்ப்பில் வெளியான இந்தப் புத்தகம், இப்போது மொழிபெயர்ப்பு நூல்களுக்கான ‘யூ.எஸ். நேஷனல் புக் அவார்ட்ஸ்’ விருதின் நெடும் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. இந்தப் பட்டியலிலுள்ள 10 எழுத்தாளர்களில் பெருமாள்முருகன் மட்டும்தான் இந்த விருதுக்கு இதற்கு முன்பாகவும் பரிந்துரைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு புத்தகக்காட்சிகள்
காரைக்குடி: 100 அடி சாலையிலுள்ள சரஸ்வதி மஹாலில் புத்தகக்காட்சியை நடத்துகிறது மீனாட்சி புத்தகக் கடை. செப்டம்பர் 17 அன்று தொடங்கிய புத்தகக்காட்சி செப்டம்பர் 27 வரை நடக்கிறது. 10% தள்ளுபடி உண்டு.
சென்னை: குரோம்பேட்டை சிஎல்சி வொர்க்ஸ் சாலையிலுள்ள எஸ்.கே. மினி ஹாலில் புத்தகக்காட்சியை நடத்துகிறது மக்கள் வாசிப்பு இயக்கம். 18 அன்று தொடங்கிய புத்தகக்காட்சி செப்டம்பர் 28 வரை நடக்கிறது. 10% தள்ளுபடி உண்டு.
சிவகாசி: சிஎஸ்ஐ ஞானபாக்கியம் பள்ளிக்கு எதிரேயுள்ள பாரதி நூல் நிலையத்தில் செப்டம்பர் 1 அன்று தொடங்கிய புத்தகக்காட்சி செப்டம்பர் 30 வரை நடக்கிறது. இந்தப் புத்தகக்காட்சியில் ‘இந்து தமிழ் திசை’ வெளியீடுகள் மட்டும் கிடைக்கும். 10% தள்ளுபடி உண்டு.
கிருஷ்ணகிரி: சூளகிரியிலுள்ள வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புத்தகக்காட்சிக்கும், திருக்குறள் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இன்றும் நாளையும் (செப்டம்பர் 19 & 20) நடைபெறும் இந்தக் கண்காட்சிகளை பாரதி புத்தகாலயம் ஒருங்கிணைக்கிறது. நான்கு புத்தகக்காட்சிகளிலும் ‘இந்து தமிழ் திசை’ வெளியீடுகள் கிடைக்கும்.