ஒருமுறை ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு எழுத்தாளர் எஸ்.செந்தில்குமார் அளித்த பேட்டியில் தமிழ் இலக்கியச் சூழலை நொந்துகொள்ளும் விதமாகச் சில விஷயங்களைப் பேசினார். “ஆர்.சிவகுமார் மொழிபெயர்த்த ‘வெறும் நுரை மட்டும்தான்’ கதைபோல தமிழில் ஏன் எழுத முடியவில்லை? இந்தக் கதையில் வரக்கூடிய அதிகாரிபோல நிறைய பேரை நாம் பார்த்திருப்போம். சாதிச் சான்றிதழ் வாங்கும்போது, ரேஷன் கடைகளில், பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளைச் சேர்க்கும்போது என நாம் சந்தித்த அதிகாரிகளில் ஒருவரைக்கூட ஏன் கதைகளில் கொண்டுவரவில்லை?” என்று பேசினார். இந்த ஆதங்கம் ஒருவகையில் நியாயமானது. தமிழ் இலக்கியப் படைப்புகள் பெரும்பாலும் தனிநபரின் அகவுலகைப் பேசுவதையே பிரதானமாக வரித்துக்கொண்டது இந்த அவலத்துக்கு மிக முக்கியக் காரணம்.
தலித் இலக்கியங்கள், ஈழ இலக்கியங்களில் பெரும்பாலானவை அகவுலகிலிருந்து வெளியேறி சமூகத்துடனான முரண்பாடுகளைக் கையாண்டன. சாதி, மதம் கடந்த பொதுச் சமூக நிறுவனங்களுடனான முரண்பாடுகள் இலக்கியத்தில் மிகச் சொற்பமாகவே வந்திருக்கின்றன. தீவிர இலக்கியத்துக்கான கூறுகளின் வெளிப்பாட்டோடு புறவுலக முரண்களைப் பேசும் தமிழ் நாவல்கள் அபூர்வம். அந்த அபூர்வங்களின் பட்டியலில் இணைந்திருக்கிறது, அழகிய பெரியவன் எழுதி சமீபத்தில் வெளியான ‘யாம் சில அரிசி வேண்டினோம்’ நாவல்.
அன்றாடப் பிழைப்பை ஓட்டவே தடுமாறும் ஏழை தலித் குடும்பத்தின் மூத்த மகன் கவசிநாதன்தான் நாவலின் பிரதானப் பாத்திரம். பிஎஸ்சி பிஎட் முடித்துவிட்டு, அரசு வேலைக்காகப் பதிந்து வைத்துவிட்டுப் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் குடும்பஸ்தன். வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரியிடம் ஒன்றிரண்டு கேள்விகள் கூடக் கேட்டதற்காக அவனை அவமானப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவன் மேல் வழக்கு தொடுத்துவிடவும் செய்கிறார் அந்த அதிகாரி. பாதிக்கப்பட்டவன் மீதே வழக்கு. வழக்கை எதிர்கொள்ள கவசிநாதனுக்கு உதவும் பெரியவர் செங்குட்டுவன் கொடுக்கும் உத்வேகத்தில் அந்த அதிகாரி மீதும் வழக்கு தொடுக்கப்படுகிறது. இரண்டு வழக்குகளையும் காவல் துறையும் நீதித் துறையும் எப்படிக் கையாள்கின்றன என்பதைப் பேசுவதுதான் நாவலின் மையச்சரடு.
வேலைவாய்ப்பு அலுவலர்களின் பணியானது கிட்டத்தட்ட சேவை மனப்பான்மையோடு இயங்க வேண்டியது. அவர்களுடைய பொறுப்பு வெறுமனே பணி நிமித்தமானது மட்டுமல்ல; உணர்வுபூர்வமானதும்கூட. ஆனால், யதார்த்தம் வேறாக இருக்கிறது. காலையிலிருந்து அதிகாரி எவ்வளவோ பேரைப் பார்ப்பதால் அவர் வெறுப்பாகப் பேசினால்கூட பதில் பேசக் கூடாது என்று அதிகாரிக்கு ஆதரவாகப் பேசுகிறார் ஆட்சியர். இது வழக்கமாக வைக்கப்படும் வாதம்தான். ஆனால், அவர்கள் எதிர்த்தரப்பை ஏறிட்டுப் பார்க்க மறுக்கிறார்கள். அதிகாலையில் எழுந்து தயாராகி, நெடுந்தூரம் பயணித்து, பல மணி நேரம் காத்திருந்து அதிகாரியைப் பார்க்கும்போது அவர் முழுதாக ஒரு நிமிடம்கூட செலவிடுவதில்லை; பல வருடங்களாக அரசு வேலைக்காகக் காத்திருப்பவர்கள் ஒருசில கேள்விகளைக் கூடுதலாகக் கேட்பதைக்கூட அதிகாரிகளால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. அதிகாரி தன்னுடைய அதிகாரத்தைப் பிரயோகிப்பவராக நடந்துகொள்கிறார். இது ஏன்?
கவசிநாதனிடம் அதிகாரி, “அடுத்த வேல சோத்துக்கு ஒரு வேல இல்ல. வந்துட்டான் பெரிய இவன் மாதிரி. எப்படியெப்பிடியோ படிச்சிட்டு வந்துட்றது. ஒன்னும் தெரியிறதில்ல. இங்க வந்து துள்றது” என்கிறார். இங்கே சாதி வந்துவிடுகிறது. அதிகாரியின் சாதியைச் சேர்ந்தவர் கவசிநாதனின் இடத்தில் இருந்திருந்தால் அவர் எப்படி நடந்துகொண்டிருப்பார்? இது மிக முக்கியமான பிரச்சினை. அந்த அதிகாரியின் குடும்பத்திலும், குடும்பத்துக்கு வெளியே சாத்தியமாகக்கூடிய இடங்களிலும் அவர் அதிகாரத்தைப் பிரயோகிக்கக்கூடியவராக இருக்கக்கூடும். அது சாதி கொடுக்கும் அதிகாரம். அந்த அதிகாரம் அவருடைய வேலை வரை நீள்கிறது. அதோடு கூடவே வேலைச் சூழல் கொடுக்கும் அதிகாரமோ ஒரு சாதிபோல இயங்கத் தொடங்குகிறது.
ஒரு அரசு அலுவலகம் அங்கே இருக்கும் நபருக்கு ஏற்ப அதன் பண்பு வெளிப்படும் என்றாலும் அந்த நபர் அப்படித் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதற்கான சூழல் அங்கு சாத்தியப்படுகிறது என்பதுதான் நாம் கவனிக்க வேண்டியது. அது காலங்காலமாகத் தொடர்ந்து ஒரு கலாச்சாரமாகப் படிவது. சாதி கொடுக்கும் அதிகாரத்தோடு அதிகாரமும் ஒரு சாதியாக இயங்குவதை அழுத்தமாகச் சொல்கிறது இந்நாவல்.
அதிகாரி ஏன் தாக்கினார் என்பதைப் புரிந்துகொள்வது கவசிநாதனுக்கு சிரமமாக இருக்கிறது. அவன் அவ்வளவு காலம் வாசித்த புத்தகங்களால் தொலைத்த தாழ்வுணர்ச்சியை அந்த ஒரு சம்பவம் மீண்டும் உணரவைக்கிறது. “உலகம் முழுக்க இருக்கிற எளியவங்க எங்கோ ஒரு எடத்துல, எதோ ஒரு நேரத்துல தெனந்தோறும் வாங்கிட்டிருக்கிற அடியில ஒன்னு உங்க மேலையும் விழுந்திருக்கிறது” என்கிறார் பெரியவர் செங்குட்டுவன். அவர்தான் அவனை அரசியல்மயப்படுத்துகிறார். கவசிநாதன் இதை அவனுடைய தனிப்பட்ட பிரச்சினையாகப் பார்க்கும்போது, “உங்கள ஏன் தனிமனிதரா நினைக்குறீங்க?” என்று கேட்கிறார். அதிகாரிக்கும் கவசிநாதனுக்குமான உரையாடல்களும் மோதல்களும் இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கானதாக வெளிப்படவில்லை; இரண்டு சமூகங்களுக்கு இடையேயானதாகவே வெளிப்படுகிறது. அதை உணர்த்தித்தான், அவன் அரசியல்மயப்படுவதன் முக்கியத்துவத்தைப் பெரியவர் புரியவைக்கிறார். அது வாசகர்களுக்கானதும்கூட. நாம் எதிர்கொள்ளும் அதிகார மனோபாவத்தைக் கண்டும்காணாமல் கடந்துபோகும் எண்ணத்தை இந்நாவல் பரிசீலிக்கச் சொல்கிறது. அது இலக்கியத்துக்கே உரிய பிரத்யேகப் பண்போடு உணர்வுபூர்வமாக வெளிப்படுகிறது.
வழக்குகளை எதிர்கொள்ளும் வெவ்வேறு அரசுத் துறைகள் செயல்படும் விதம் மிகுந்த நுட்பத்தோடு இந்த நாவலில் கையாளப்பட்டிருக்கிறது. காவல் துறையின் முதல் கட்ட நடவடிக்கை தொடங்கி, வழக்கு விசாரணை, நீதிமன்ற வழக்காடுகள், இன்ன பிற அரசுத் துறைகளின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் அதன் வெளிப்படையான அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு பூடகமாக எப்படித் தங்கள் அதிகாரத்தை வெளிப்படுத்துகின்றன என்பதைச் சொல்வது நாவலின் முக்கியமான அம்சம். சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு அதற்கான இடங்கள் சாத்தியமாவதை இந்நாவல் ஆவணப்படுத்தியிருக்கிறது எனலாம்.
எஸ்.செந்தில்குமாரின் பேட்டி இந்த வரிகளோடு முடியும்: “நாம் ரேஷன் கடையில் வரிசையில் நிற்கிறோம். நம் முன்னால் நிற்பவர் வரைக்கும் எல்லாமே கிடைக்கிறது. நம்மிடம் ‘நாளைக்கு வாங்க’ என்று சொன்னால் வரத்தான் போகிறோம், ‘தீர்ந்துவிட்டது’ என்று சொன்னால் திரும்பிப்போகத்தான் போகிறோம். அடுத்த மாதம் சீக்கிரமாகச் சென்று அவருக்கு முன்பாக வாங்கிவிட வேண்டுமென்று நினைப்போமே தவிர, கேள்வி கேட்க மாட்டோம். இதுதான் எழுத்திலும் பிரதிபலிக்கிறது.” அழகிய பெரியவனின் இந்நாவல் இந்தக் கூற்றைப் பொய்த்துப்போகச் செய்திருக்கிறது. இப்படியான நாவல்கள் நிறைய வர வேண்டும்.
- த.ராஜன்,
தொடர்புக்கு: rajan.t@hindutamil.co.in
-------------------------------
யாம் சில அரிசி வேண்டினோம்
அழகிய பெரியவன்
நற்றிணை பதிப்பகம் , திருவல்லிக்கேணி, சென்னை-5. விலை: ரூ.250
தொடர்புக்கு: 044 – 2848 1725