இலக்கியம்

ஒரு சமூகத்தின் வரலாறு

செய்திப்பிரிவு

நாகர்கோவிலின் ஒரு பகுதியான கோட்டாரில் வாழும் ஒரு சமூகத்தினர் பற்றிய ஆய்வு நூல் இது. தென் திருவிதாங்கூர் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் சி. மாணிக்கவாசகம் இந்த நூலின் ஆசிரியர்.

கோட்டார் இன்று நாகர்கோவில் நகரின் ஓர் அங்கமாக ஆகிவிட்டது. என்றாலும் இந்த ஊருக்குப் பல நூற்றாண்டு வரலாறு உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளாகவே இந்நகரம் ஒரு வணிகத் தலமாகச் செயல்பட்டுவருகிறது. இந்த வணிகத் தலம்தான் இந்த ஏழூர் செட்டுகளின் வாழிடமாக இருந்துவருகிறது. இவர்கள் பல்லாண்டுகளாக ஒரே குடியிருப்பில் வாழ்ந்துவருகிறார்கள். இவர்கள் சோழ நாட்டைச் சேர்ந்தவர்கள். கடல் கோள் காரணமாகத் தென் தமிழகத்துக்கு இடம்பெயர்ந்த இவர்கள் இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏழு இடங்களில் தங்கள் குடியிருப்பை நிலைநிறுத்திக்கொண்டார்கள். இதிலிருந்துதான் ஏழூர் செட்டு என்னும் பெயர் உருவாயிற்று. அந்த ஊர்களில் ஒன்றுதான் கோட்டார். மற்ற ஊர்களும் கன்னியாகுமரி மாவட்டத்திலேயே உள்ளன என்கிறார் ஆய்வாளர்.

ஆசிரியர் குறிப்பிடும் இந்தச் சமூகத்தினரின் எண்ணிக்கை வெறும் ஐந்தாயிரம்தான். இவ்வளவு சிறிய சமூகமாகத் தேங்கிவிட்டாலும் இவர்களது பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள் தனித்துவமானவை என நூலசிரியர் ஆதாரங்களுடன் எடுத்துரைக்கிறார். இவர்கள் சோழநாட்டிலிருந்துதான் வந்தார்கள் என்ற தகவல் கதைகளாக அந்தப் பகுதியில் உலவும் நிலையில் இவர் அதற்கான ஆதாரங்களை முன்வைக்கிறார். இதுபோல நகரத்தார் சமூகத்தினருக்கும் ஒரு கதை வழக்கத்தில் உண்டு. மேலும் நகரத்தார், சைவப் பிள்ளைமார், ஏழூர் செட்டு சமூகத்தினர் இந்த மூன்று சமூகத்தினருக்கும் உள்ள ஒற்றுமையையும் ஆசிரியர் பதிவுசெய்துள்ளார்.

இந்தச் சமூகத்தினரின் தெய்வமான சிங்க விநாயகர், நாகரம்மன், தேசிக விநாயகர் ஆகிய வழிபாட்டுத் தலங்கள் குறித்தும் ஆசிரியர் ஆய்வு செய்துள்ளார். இந்த தெய்வச் சிலைகளெல்லாம் சோழ நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதெனச் சொல் கிறார். தமிழ்நாட்டில் வாழ்ந்துவரும் ஒரு பழமையான சமூகத்தின் பன்முகத்துடன் பதிவுசெய்வதன் மூலம் இந்நூல் தமிழ் மானுடவியலுக்கு ஒரு முக்கியமான பங்களிப்பைச் செய்திருக்கிறது.

செட்டு கப்பலுக்குச் செந்தூரான் துணை
விலை ரூ.495
டாக்டர் சி. மாணிக்கவாசகம்
உமா பதிப்பகம், 67, செட்டி தெரு, கோட்டாறு 692 002
தொலைபேசி: 97894 52557

- விதின்

SCROLL FOR NEXT