இலக்கியம்

அறம் காக்கும் நாயகி!

செல்வ புவியரசன்

முன் பொருநாள் புகார் வணிகன் தன் மாசறு பொன்னி வீட்டில் இருக்க, கலைமகள் ஒருத்தியிடம் அவள் திறம்வியந்து தன் செயல்மறந்து கிடந்திருந்தான். பேதம் தெளிந்தவன் மறுவாழ்க்கை தேடிச் சென்றது மதுரைக்கு. கொலையுண்டான். வையைநகர் எரிந்தது. புகாரைக் கடல்கொண்டபோது பட்டினத்தின் வணிகர் கூட்டமும் மதுரையை நோக்கித்தான் இடம்பெயர்ந்தது. ஆனாலும், கொலையுண்டு இறந்துபோன தனது குல மூதாதையர்களின் வழியிலிருந்து அது விலகிவிடவில்லை. திரைகடல் ஓடி தென்கிழக்காசிய நாடுகளில் தேடிய திரவியத்தை இயன்ற அளவு அங்கேயே பற்றுக்கணக்குகளை எழுதிவிட்டுத்தான் மிச்சத்தை ஊருக்கு அனுப்பியது. மேலாள், கணக்கு, பெட்டியடி என்று படிநிலைகள் எதுவென்றாலும், விதிவிலக்குகள் அரிது என்பதை தி.சே.சௌ.ராஜனின் ‘ரங்கூன் நினைவு அலைகள்’ சொல்கிறது. தற்கொண்டானைப் பேண முடியாவிட்டாலும் தற்காத்து, சொற்காத்து சோர்விலாளாய்ப் பெண்கள்தான் குடிகாக்கிறார்கள்.

ப.சிங்காரத்தின் விசாலாட்சி, வள்ளுவரின் வழியில் அறம் காக்கும் நாயகி. ‘என்னென்ன ஆட்டம் எல்லாமோ ஆடிப் பணங்காசை இறைத்தாலும்’ விடாக்கண்டன் தீனாமூனாரூனா வீட்டில் திருமகள் உறைந்துநின்றதற்குக் காரணம், விசாலாட்சிதான். ‘வந்தவன் போனவன் வழிப்போக்கனுக்கெல்லாம் நளபாகச் சாப்பாடு. லெச்ச லெச்சமாய்ப் பணம் குமிஞ்சுக் கிடந்தாலும் ஊரானுக்கு ஆக்கிக்கொட்ட மனது வேணுமுல..’ அடுத்தாளு ஆண்டியப்பன் கடற்பயணத்தின் நடுவே நினைவுகூரும் அந்த அம்மையின் தரிசனம் மீண்டும் ஜெயமோகனின் ‘அறம்’ கதையில் கிடைத்தது. கணவனின் பிழையை நேர்செய்து ஊழியனின் மனக்குறையைத் தீர்த்துவைக்கும் அதே கருணை உள்ளம்.

ஆண்டியப்பனுக்கு ‘ஜப்தி’ என்றால், வெங்கட்ராமுக்குத் தன் பெண்ணின் திருமணம். எதிர்பார்த்த உதவி கிடைக்கவில்லையே என்ற ஏமாற்றம் மட்டும்தான் ஆண்டியப்பனுக்கு. வெங்கட்ராமுக்கோ மெய்வருந்த உழைத்தும் உரிய கூலி கொடுக்காமல் ஏமாற்றியதோடு அவமானப்படுத்தியும் அனுப்பிவிட்டார்களே என்ற இயலாமையும் கோபமும். ஏற்கெனவே புனைவில் வார்க்கப்பட்ட ஒரு குணச்சித்தரிப்பை, மீண்டும் எழுதுவது சவாலானதுதான். அதை வெற்றிகொள்ளக் கதையின் நாடகத் தருணம் இன்னும் உணர்வுபூர்வமானதாக மாற்றப்படுகிறது. கவிதைகள் எழுதுவதில் விருப்பமில்லாதிருந்த வெங்கட்ராம், ஆசுகவியாய் மாறி தளைபிறழாமல் வெண்பா பாடுகிறார். அறம் வளர்த்த நாயகியோ, கணவனுக்குப் பாடம் புகட்ட சாலையில் அமர்ந்து சூட்டில் வேகிறாள். எழுத்தையும் ஆளனையும் வியக்கிற வேளையில், கதையின் மீது வாசகன் நம்பகத்தன்மையை இழக்கும் அபாயமும் நேரிட்டுவிடுகிறது. திருச்சி களத்தைவிட புதுக்கோட்டையே நம்பகம் கொள்ளச்செய்கிறது.

கடலுக்கு அப்பால், வணிகப் போட்டியில் தம்மைவிட வலுவாக இருக்கும் எதிர்த்தரப்பைப் பற்றிய எதிர்மறைச் சித்தரிப்புகள் என்ற குற்றச்சாட்டு எழாதவண்ணம், விசாலாட்சி என்ற ஒற்றைப் பாத்திரத்தை எதிர்த்தட்டில் வைத்து ஈடுசெய்துவிடுகிறார் ப.சிங்காரம். அவரின் சித்தரிப்பில் பாண்டியனின் சாகசங்கள் மட்டுமில்லை, விசாலாட்சி போன்ற வேறுசில பாத்திரங்களின் குணநலன்களும் நெஞ்சைவிட்டு அகலாதவை.

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

SCROLL FOR NEXT