தமிழ்ப் படைப்புலகத்துக்கும் கல்விப் புலத்துக்கும் இடையிலான சேர்ந்தியக்கம் அருகிவரும் இந்நாட்களில், அதைச் சரிசெய்யும் ஒரு முன்னெடுப்பில் இறங்கியிருக்கிறது தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம். ‘கணையாழி’ ம.ராசேந்திரன், துணைவேந்தராகப் பொறுப்புவகித்தபோது, ‘புது எழுத்து’ இலக்கிய இதழுக்கு விருது வழங்கிப் பாராட்டினார். தற்போது துணைவேந்தராகப் பதவிவகிக்கும் கோ.பாலசுப்பிரமணியம், கடந்த ஆண்டு ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியம், கவிஞர் வண்ணதாசன் இருவருக்கும் மதிப்புறு முனைவர் பட்டங்களை வழங்கிக் கௌரவப்படுத்தினார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நவீன நாடக விழாவும் சிறப்பாக நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டில், கவிஞர் ரவிசுப்பிரமணியன், எழுத்தாளர்கள் பாமா, சி.எம்.முத்து, கீரனூர் ஜாகீர் ராஜா, ஸ்ரீதர கணேசன் ஆகிய ஐவரும் வருகைதரு இலக்கிய ஆளுமையாகப் பணிநியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆய்வாளர்கள், மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் இந்தப் பணிநியமனங்கள் அமையும் என்று கருத்துதெரிவித்திருக்கிறது தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம். அதன் முயற்சிகள் மற்ற கல்வி நிறுவனங்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமையட்டும்!