நாட்டார் வழக்காற்றியலின்மீது விழுந்த வரலாற்றுப் பிம்பங்களின் உண்மை உருக்களைத் தேடிக் கண்டடைவதிலேயே தனது உழைப்பை வாழ்நாள் முழுவதும் செலவிட்டுவருபவர் அ.கா. பெருமாள். தமிழகத்தின் இசை, கூத்து, நாடகம், ஓவியம், சிற்பம் முதலான கலைகளும், கூடவே சமயங்களும் காட்டும் பண்பாடு என்று ஒன்று இருக்கிறது. அந்தப் பண்பாட்டைக் குறித்து நம் வரலாற்றின் நீரோட்டத்தில் நாம் அறிந்தவற்றிலிருந்து அதற்கு இணையாக உள்ள அறியாத பல செய்திகளையும் களஆய்வு செய்து தந்திருக்கிறார் ஆசிரியர்.
தமிழகத்தின் முக்கியக் கலையான தெருக்கூத்தின் வேரைத் தேடிச் செல்கிறார். இவர் கூற்றுப்படி ஏறுதழுவல் நிகழ்ச்சிக்குப் பின் வெற்றி பெற்றவரைப் பாராட்டும் நிலையில் சங்க காலத்தில் குரவைக் கூத்து ஆடப்பட்டது. அப்போது தும்பைப் பூ மார்பில் அசைய பனந்தோட்டை அணிந்து ஆடினார்கள்.
இப்படியாகக் கூத்துக் கலையின் வேர்களைப் பற்றிச் சொல்லும் அ.கா. பெருமாள் பிற்காலத்தில் தென்னகத்திற்கு வந்த கிறித்தவ மதத்தின் பின்புலத்தில் நாடகம் நடத்தப்பட்ட விவரங்களையும் தெரிவிக்கிறார்.
சிற்பக் கலையைப் பற்றிப் பேசும்போது, குறிப்பாக நடராஜரின் ஆனந்தத் தாண்டவ சிற்பத்தைப் பற்றிப் பேசும்போது, இந்தியக் கலைகளில்-தமிழரின் கலைகளில் குறிப்புப் பொருட்கள் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன எனும் ஆனந்த குமாரசாமி யின் கருத்தை அ.கா. பெருமாள் முன்வைக்கிறார். பிரபஞ்சத்தில் நடக்கும் செயல்கள் எல்லாவற்றுக்கும் மூலாதாரமாக ஒன்றுகிறது என்றும், ஞானத்தின் உட்பொரு ளாக விளங்குவது என்றும், சிதம்பரம் பேரண்டத்தின் மத்தி என்றும் குறிப்பிடப்படுகிறது.
இந்த நூலில் பெரும்பங்கு வகிக்கும் கட்டிடக் கலைப் பிரிவில் சோழர்களின் சாதனைகளையும் வளர்ச்சியையும் பற்றி நூலாசிரியர் பேசத் தவறவில்லை. ஆனால், அவை யாவும் சமஸ்கிருத பாதிப்போடு இருப்பதையும் நாம் காணலாம்.
இன்று நாம் வாழும் தமிழகமும், நமது தமிழ் மொழியும் அதன் பண்பாடும் ஒரே ஒரு முகத்தை மட்டும் கொண்டவையல்ல என்பது குறித்து விரிவாகப் பேசுகிறார் அ.கா. பெருமாள். பல்வேறு இனத்தவரின், மொழியினரின் வருகை, படையெடுப்புகள் வழியாகவே இந்தப் பன்முகத்தன்மை உருவாகியிருக்கிறது. மராட்டியர் ஆட்சிக் காலத்தில் தஞ்சையில் தெலுங்கு பேச்சு மொழியாக இருந்திருக்கிறது.
மராட்டியர் காலத்தில் பாகவதமேளா, தோல்பாவை நிழல்கூத்து, பொம்மலாட்டம் போன்றவை பரவலாக நடைபெற்றன. அதே காலத்தில் தஞ்சாவூர் பேண்ட் வாத்தியம், சாரங்கி, ஆர்மோனியம் போன்றவை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டன எனக் கூறும் ஆய்வாளர் அந்த மன்னர்கள் ஒவ்வொருவரும் 40 மனைவிகள் கொண்டிருந்ததையும், கணவர் இறந்தால் மனைவியர் உடன்கட்டையும் ஏறும் கொடுமையையும் சொல்லத் தவறவில்லை.
அதேபோல முகலாயரின் வருகைக்கு முன்னதாகவே அரேபியர் வருகை தமிழகத்தில் நிகழ்ந்ததைப் பற்றியும் அ.கா. பெருமாள் பேசுகிறார். ஆரம்ப காலத்தில் வணிகத்திற்காகத் தமிழகம் வந்த அரேபியர் தமிழகத்திலும் இன்றைய கேரளத்திலும் குடியிருப்புகளை அமைத்துக்கொண்டனர். கி.பி. 7-ம் நூற்றாண்டில் இஸ்லாம் மதம் நிறுவப்பட்ட பின்பு இந்தத் தொடர்பு நீடித்தது. நபிகள் நாயகத்தின் தோழரான தமீமுல் அன்சாரி, அபிவக்காஸ் ஆகியோர் தமிழகம் வந்தனர் என்ற நம்பிக்கை நிலவியதையும் இந்நூல் தெரிவிக்கிறது. ஹாஜி அப்துல்லா பின் அன்வர் என்பவர் உறையூரில் கி.பி. 735-ல் ஒரு பள்ளி வாசலைக் கட்டினார் என்ற தகவலும் வியப்பூட்டுவது.
இப்படியாக வரலாறு நெடுகிலும் பல்வேறு இனங்களுடனும் கலாச்சாரங்களுடனும் மொழிகளுடனும் உறவாடிய தமிழ்க் கலாச்சாரத்தை ஒற்றைத் தன்மை கொண்ட கலாச்சாரமாகக் கற்பிதம் செய்துகொள்வது ஆபத்தானது. ப. சிங்காரம் தனது ‘புயலிலே ஒரு தோணி’ நாவலில், ‘(இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில்) சிங்கப்பூரில் தமிழர்கள் பழிவாங்கப்பட்டபோது, கங்கை கொண்டான், கெடாரம் கொண்டான் எல்லாம் சரி தமிழர்கள் அடிவாங்கும்போது உதவிசெய்ய எவ்வளவு பேர் வந்தாங்க?’ என்கிற கேள்வியின் யதார்த்தத்துடன் 2009-ல் ஈழத் தமிழர் பாதிக்கப்பட்ட சோகத்தையும் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
ஆக, விருப்புவெறுப்பின்றி நம் கலைச் சின்னங்களையும் நமது மரபார்ந்த தமிழ்ச் செல்வங்களைப் போற்றிப் பேண வேண்டும். அதைப் போலவே வரம்பு கட்டிக்கொள்ளாத மானுட நேயத்தின் மூலமாகவே நம் தமிழ் இலக்கியங்கள் முன்வைக்கும் அறச் செயல்பாடுகளை நிலைநிறுத்த முடியும். இந்தக் கருத்தைப் புத்தகத்தின் முழுவதும் விரவியுள்ள வரலாற்றுத் தரவுகளின் வழியே நம்மால் உணர முடிகிறது.
முன்முடிவுகளும் மனத்தடைகளும் இன்றி அ.கா. பெருமாளின் ஆய்வுகளை நோக்குவது இன்றைய தமிழ் வாழ்வில் பின்னியிருக்கும் பல்வேறு போக்குகளோடு இணக்கமாக உரை யாடல் மேற்கொள்வதற்கு எளிதாக இருக்கும்.
தமிழர் கலையும் பண்பாடும்
அ.கா. பெருமாள்
விலை ரூ.145.00
வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ்,
142, ஜானி ஜான் கான் சாலை,
ராயப்பேட்டை, சென்னை 600 014.
தொலைபேசி: 044-28482441
-பால்நிலவன்,
தொடர்புக்கு: sridharan.m@thehindutamil.co.in