இலக்கியம்

எரியும் ஆன்மாவிலிருந்து உருவான கதைகள்

ஷங்கர்ராமசுப்ரமணியன்

சுழலும் சக்கரங்கள்
ரியுனொசுகே அகுதாகவா
தமிழில்: கே.கணேஷ்ராம்
நூல்வனம் வெளியீடு
ராமாபுரம், சென்னை-89.
தொடர்புக்கு: 91765 49991
விலை: 180

புதுமைப்பித்தனுக்குப் பத்தாண்டுகள் முன்னர் பிறந்தவர்; புதுமைப்பித்தனைப் போல இளம் வயதில் மறைந்தவர் ஜப்பானியச் சிறுகதைக் கலைஞர் ரியுனொசுகே அகுதாகவா. இவரது ஆறு கதைகளை கே.கணேஷ்ராமின் மொழிபெயர்ப்பில் படிக்கும்போது, எரியும் ஆன்மாவிலிருந்து உருவான படைப்புகள் என்று விவரிக்கத் தோன்றுகிறது. காஃப்கா, மன்ட்டோவின் கதையுலகத்துக்கு நெருக்கமான உலகம் அகுதாகவாவினுடையது. தீமை, அச்சம், துயரம், சோர்வு, மரணத்தின் நரகமாக இங்குள்ள வாழ்வைக் காணும் கண்கள் வழியாக விவரங்களோடும் அடர்த்தியோடும் வசீகரத்தோடும் தீட்டப்பட்ட கோரச் சித்திரங்கள் இந்தக் கதைகள்.

‘சுழலும் சக்கரங்கள்’ தொகுப்பில் உள்ள முதல் கதை ‘ராஷோமான்’. வரலாற்று முக்கியத்துவம் கொண்ட நகரமான கியோட்டோவின் கோட்டையானது சிதிலமாகி திருடர்களும் நரிகளும் அனாதைப் பிணங்களும் அடைக்கலம் கொள்ளும் காட்சி சித்தரிக்கப்படுகிறது. கியோட்டோ நகரத்தைச் சமீப காலமாகப் பலவீனப்படுத்திவருவதாகச் சொல்லும் பூகம்பங்கள், பஞ்சம், தீ விபத்துகளோடு நவீனத்தையும் சேர்த்தே சொல்லாமல் சொல்கிறார் அகுதாகவா. ஒருகாலத்தில் சிவப்பு வண்ணத்தால் குழைத்துப் பூசப்பட்ட தூணில் வண்ணம் உதிர, ஒரு வெட்டுக்கிளி மட்டும் அதைப் பற்றிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் கனத்த சித்திரத்தை எழுதும்போது வான்கோ போன்ற ஓவியனை அகுதாகவாவில் காண்கிறோம். மகத்துவம் பலவீனப்பட்டு, நோயுற்று மரணத்தின் வாயிலில் நிற்கும் நுழைவாயில் வழியாக அகுதாகவாவின் படைப்புலகில் நுழைகிறோம்.

இந்த நூலின் சிறந்த படைப்பான ‘சுழலும் சக்கரங்கள்’, அகுதாகவாவின் மேதமையையும் ஆளுமையையும் முழுமையாகப் பிரதிபலிக்கும் கதை. சிறுவயதில் தாயின் மனநோயைப் பார்த்த கதைசொல்லி, தானும் அதேபோல மனநோயால் பாதிக்கப்பட்டு இறந்துபோவோம் என்ற அச்சத்தால் துரத்தப்படும் கதை. அகுதாகவாவும் மனநலத்துக்கான மருந்துகளுடனேயே நாட்களைக் கழித்து 35 வயதில் தற்கொலை செய்துகொண்டவர்தான். வரலாறு, கலாச்சாரம், அமைப்புகள், பார்வைகள், விழுமியங்களில் மாற்றங்கள் ஏற்படும்போது அது ஒவ்வொரு சமூகத்திலும் பிரத்யேகமான வலிகளையும் பைத்திய நிலையையும் ஏற்படுத்துகின்றன. இந்தியாவுக்குப் பிரிவினை நடந்தபோது நடந்த அவலங்களின் அத்தனை சுமைகளையும் தனது சுயத்தில் இறக்கி பிரிவினை என்னும் முடிவு, மக்களிடம் ஏற்படுத்திய பைத்திய நிலையைப் படைப்புகளாக்கியவர் மன்ட்டோ. அவர் கதைகளில் நகரங்கள் எரியும் சித்திரத்தைப் பார்க்கிறோம்.

பௌத்தம் சார்ந்த பண்பாட்டையும் விழுமியங்களையும் கொண்ட ஜப்பானிய வாழ்க்கையில் நவீனத்துவமும் கிறிஸ்தவமும் சேர்ந்து ஏற்படுத்தும் மாற்றங்கள்தான் அகுதாகவாவைப் பிளக்கின்றன. பிளந்த ஒரு சுயத்தைத்தான், இரண்டாவது சுயம்... இரண்டாவது சுயம் என்று திரும்பத் திரும்ப எழுதுகிறார். ‘சுழலும் சக்கரங்கள்’ கதையில் மழைக்கோட்டு அணிந்து மரணம் வரை துரத்தும் பேயை இப்படித்தான் புரிந்துகொள்ள முடியும். ஒரு திரில்லர் திரைப்படத்தைப் பார்ப்பதுபோல பயம், கடக்கும் அனைவர் வழியாகவும் அனைத்தின் வழியாகவும் தொற்றிக்கொண்டு வெளிப்படுகிறது. தாந்தேயின் நரகத்திலுள்ள மரங்கள் அவனுக்கு எதிர்ப்படுகின்றன. படிக்கும் புத்தகத்தின் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் எல்லாம் ஊசிகளைப் போல அவனைக் குத்துகின்றன. கோரத்தின், மரணத்தின், தீங்கின் செங்கற்களால் கட்டப்பட்ட இந்தக் கதை யதார்த்தத்திலிருந்து புனைவுக் கோபுரமாக மேலெழுகிறது. ஒளி அல்ல, கடவுள் அல்ல, ஒளி அற்ற இருட்டுதான், சாத்தான்தான் சாசுவதம் என்று அகுதாகவா கூறும்போது வசீகரமாக உள்ளது. “எதுவும் எல்லாமும் பொய்யே என்று உணரத் தலைப்பட்டேன். அரசியல், வணிகம், கலை, விஞ்ஞானம்… இப்பீதி பீடித்த பயங்கரமான உலகின் மேற்பரப்பில் பூசப்பட்டிருக்கும் பொய்கள் இவை” என்ற கூற்றைச் சொல்பவனும் ஒரு எழுத்தாளனாகவே இந்தக் கதையில் இருக்கிறான்.

உலகத்தின் பைத்தியத்தைவிட, மனிதனின் பைத்தியம் சமமாகவோ சற்று குறைந்தோ இருக்கும்போது எல்லாம் ‘இயல்பில்’ இருக்கிறது. சற்று அதிகரிக்கும்போதோ அவன் உலகத்து யதார்த்தத்துடன் தன் மோதலையும் தாக்குதலையும் தீவிரமாக்கத் தொடங்குகிறான். அவன் கலைஞனாக இருக்கும்போது அந்த மோதல், தாக்குதல் வழியாக இந்த உலகத்தில் இருக்கும் யாராலும் கண்டுகொள்ளப்படாத காணாத யதார்த்தங்களைக் கண்டு சொல்பவர்களாக ஆகிறான். அதைத்தான் மன்ட்டோவும் காஃப்காவும் அகுதாகவாவும் நமக்குச் சொல்கிறார்கள்.

படைப்பின் உள்ளடக்கத்தைப் பிரதிபலிக்கும் ஒரு நூல் தயாரிப்பைப் பார்ப்பதே அரிதாகிவிட்ட காலத்தில், இந்த நூல் ஒரு பரிசென்ற உணர்வை அளிக்கிறது. கிட்டத்தட்ட 120 பக்கத்தில் ஆறு கதைகளில் ஒரு வலுவான வேற்று மொழி ஆளுமையை அறிமுகப்படுத்தும் சத்தான நூல் இது.

– ஷங்கர்ராமசுப்ரமணியன்,

தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in

SCROLL FOR NEXT