கி.ரா. என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பெயரால் வழங்கப்படும் கி.ரா. விருதுக்கு இந்த ஆண்டு எழுத்தாளர் கண்மணி குணசேகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கரிசல் இலக்கியத்தின் தந்தை என்றும், தமிழ்ப் படைப்புலகின் பிதாமகர் என்றும் போற்றப்படுபவர் எழுத்தாளர் கி.ராஜநாராயணன். இவரின் பிறந்த தினம் செப்டம்பர் 16 அன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஆண்டுதோறும் கி.ரா. விருது அறிவிக்கப்படுகிறது. கோவை விஜயா பதிப்பகத்தின், விஜயா வாசகர் வட்டம் சார்பில் கி.ரா. விருதும், ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படும். இந்த ஆண்டு கி.ரா. விருதுக்கு எழுத்தாளர் கண்மணி குணசேகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த கண்மணி குணசேகரன்?
விருது பெற உள்ள எழுத்தாளர் கண்மணி குணசேகரனின் இயற்பெயர் குணசேகர். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிகிறார். தனது கிராமத்தில் விவசாயமும் செய்து வருகிறார்.
ஏராளமான கவிதைகள், சிறுகதைகளை எழுதியுள்ள கண்மணி குணசேகரன், அஞ்சலை, கோரை, நெடுஞ்சாலை, வந்தாரங்குடி உள்ளிட்ட நாவல்களையும் எழுதியுள்ளார்.
எழுத்தாளர் சுந்தர ராமசாமி நினைவாக வழங்கப்படும் நெய்தல் விருதைப் பெற்றுள்ளார். நடுநாட்டுச் சொல்லகராதி என்னும் அகராதிக்காக, தமிழ் வளர்ச்சித் துறையின் விருது பெற்றுள்ளார். கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் புனைவு விருது, கலைஞர் பொற்கிழி விருது ஆகியவற்றையும் இவர் பெற்றுள்ளார்.
இந்நிலையில், கண்மணி குணசேகரனுக்கு வழங்கப்படும் கி.ரா. விருது விழா, கரோனா காரணமாக இணைய வழியில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.