இலக்கியம்

கால்வினோவின் புனைவு சாகசம்

செய்திப்பிரிவு

இடாலா கால்வினோ யார்?

இத்தாலிய எழுத்தாளர். தாய், தந்தை இருவருமே விஞ்ஞானிகள். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானியப் படையினரால் வடக்கு இத்தாலி ஆக்கிரமிக்கப்பட்டபோது வெளியேறினார். போர்க்கால அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதாகவே அவரது தொடக்க கால எழுத்துகள் அமைந்திருந்தன. போருக்குப் பின்னர் இத்தாலிய இலக்கிய உலகமே தீவிர அரசியல் செயல்பாடுகளில் இருந்தபோது, கால்வினோவும் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து கட்சியின் தினசரியில் வேலை செய்தார். இயற்கை அறிவும் விஞ்ஞானமும் ஆழமாகப் பிணைந்த புனைகதைகளை எழுதியவராக உலகமெங்கும் புகழப்படுகிறார்.

இந்தச் சிறுகதைத் தொகுதி பற்றி…

கனமான அனுபவங்கள் மட்டுமல்ல, லேசான உணர்நிலைகளும் வாழ்க்கையின் போக்கில் கவனிக்கத்தக்கவைதான் என்பதை இடாலோ கால்வினோவின் கதைகள் நினைவூட்டுகின்றன. தொகுப்பின் முதல் கதையான ‘வசீகரித்த தோட்டம்’ கதை ‘ஆலிஸ் இன் ஒன்டர்லேண்ட்’ புதினத்தை நினைவூட்டுவது. ஒரு குட்டிப் பையனும், குட்டிப் பெண்ணும் சேர்ந்து ரயில்பாதையின் ஓரமாக விளையாடித் திரிந்தபடி மறைந்திருக்கும் ஒரு அரண்மனைத் தோட்டத்திற்குள் புகுந்துவிடுகின்றனர்.

அவர்கள் எதிர்கொள்ளும் சின்னச் சின்ன ஆச்சரியங்கள்தான் கதை. இடாலோ கால்வினோவின் புகழ்பெற்ற கதைகளான ஒரு எழுத்தரின் சாகசம், ஒரு மனைவியின் சாகசம், ஒரு மோசக்காரனின் சாகசம், ஒரு கவிஞரின் சாகசம் வரிசைக் கதைகளும் இதில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அன்றாடத்திலிருந்து ஒருவர் விலகி ஒரு காரியத்தைச் செய்யும்போது மனிதர்களுக்கு நேரும் அனுபவத்தை, உணர்நிலைகளை அற்புதமாக இக்கதைகள் பதிவுசெய்கின்றன.

‘நீரின் அழைப்பு’ கதையில் வழக்கமான கதை என்ற ஒன்று இல்லவே இல்லை. ஒருவன் குளியலறைக்குள் நுழைகிறான். ஷவர் குழாயைத் திறக்கிறான். நீருக்காக வரலாறு முழுவதும் மனிதன் பட்ட சிரமங்கள், 20-ம் நூற்றாண்டு விஞ்ஞானம் தூய்மையான நீரை மனிதனுக்கு எத்தனை சுலபமான பொருளாக ஆக்கியுள்ளது என்பதைப் பற்றியெல்லாம் அவன் சிந்திக்கிறான். மிக அழகான கதை.

தமிழில் இடாலோ கால்வினோ

தமிழில் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஓரான் பாமுக் போல அதிகம் மொழிபெயர்க்கப்பட்டவர்களில் ஒருவர் இடாலோ கால்வினோ. இவரது ‘புலப்படாத நகரங்கள்’, குளிர்கால இரவில் ஒரு பயணி போன்ற நாவல்கள் ஏற்கெனவே மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இந்நூலை மொழிபெயர்த்துள்ள கோ. பிரேம்குமார், ஏற்கெனவே ‘இடாலோ கால்வினோவின் கதைகள்’ என்ற பெயரில் ஒரு தொகுதியை மொழிபெயர்த்துள்ளார்.

- ஷங்கர்

SCROLL FOR NEXT