இலக்கியம்

அமெரிக்க வேலிக்குள் ஒரு தம்பதி

ரிஷி

சென்னை அல்லயன்ஸ் பிரான்சே வளாகத்தின் எட்வர்ட் மிஷலின் அரங்கத்தில் வரும் 19-ம் தேதி மாலை 7 மணிக்கு `வேலி' என்னும் நாடகம் அரங்கேற உள்ளது. இந்த நாடகத்தைத் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான அம்ஷன் குமார் தியேட்டர் பர்ஸ்ட் குழுவினருக்காகத் தயாரித்திருக்கிறார். அவருடைய நண்பரான சுனிபா பாசு மூலம் சுதிப்தா பாமிக் எழுதிய ‘பலோக்’ என்ற வங்காள நாடகம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார். அமெரிக்காவில் சென்று குடியேறிய வங்காளத் தம்பதி அங்கே எதிர்கொள்ளும் சிக்கல்களையும், அனுபவங்களையும் சம்பவங்களாகக் கொண்ட நாடகம் அது. இந்தக் கதைச் சுருக்கத்தைக் கேள்விப்பட்ட உடன் இதைத் தமிழில் மொழிபெயர்க்கலாம் என நினைத்துள்ளார். ஆகவே முறைப்படி நாடக ஆசிரியரிடம் அனுமதி பெற்று `வேலி' என்னும் பெயரில் தமிழாக்கம் செய்திருக்கிறார்.

அமெரிக்காவில் பொறியாளராகப் பணியாற்றும் சுதிப்தா பாமிக் சமூக அக்கறையை வெளிப்படுத்தும் சமூக நாடகங்களை வங்காளத்திலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதிவருபவர். நாடகத்தில் முத்திரை பதித்த பல ஆளுமைகளிடம் பயிற்சி பெற்றவர். மீரா நாயரின் நேம்சேக் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். வங்காளிகளின் அமெரிக்கக் கனவையும் அங்கு அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களையும் அவரது நாடகங்கள் சித்தரிக்கின்றன. ‘பலோக்’ நாடகத்திலும் அமெரிக்காவில் குடியேறிய இளம் வங்காளத் தம்பதிதான் முக்கியக் கதாபாத்திரங்கள். அவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. அந்தக் குழந்தைக்கு ஏற்படும் ஒரு பிரச்சினை வழியாகக் குழந்தை வளர்ப்பு, பெற்றோரின் பொறுப்பு, மாற்றுக் கலாச்சாரம், வெளிநாட்டின் சட்டங்கள், அவை இந்தியக் குடியேறிகளைப் பாதிக்கும் விதம் ஆகியவை பற்றிய பல கேள்விகளை எழுப்பும் வகையில் இந்த நாடகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்கக் கனவு, அங்கே சென்று குடியேறுவது குறித்த வேட்கை ஆகியவை இப்போதைய சூழலில் நடுத்தர வர்க்க இந்தியர்கள் பெரும்பாலானோருக்குக் கனவாக இருக்கிறது. ஆகவே அது தொடர்பான வாழ்க்கைப் பிரச்சினைகளை நாடகம் காட்சிகளாகக் கொண்டிருப்பதால் வங்காளக் கதாபாத்திரங்களைத் தமிழர்களாக மாற்றுவதில் தனக்கு எந்த இடர்பாடும் ஏற்படவில்லை என்கிறார் அம்ஷன் குமார்.

`வேலி' நாடகத்தை இயக்குபவர் பிரணாப் பாசு. இவர் சுனிதா பாசுவின் கணவர். அவர் இயக்கிய வங்க நாடகங்களைப் பார்த்து லயித்திருக்கும் அம்ஷன் குமார், அவர் எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் நாடக மொழியைக் கையாளத் தெரிந்தவர் என்கிறார். பிரணாப் பாசு இயக்கும் முதல் தமிழ் நாடகமான இதில் பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட ஒரு பிரச்சினைக்குக் காரணம் என யாரையும் குற்றம் சாட்டவில்லை என்றும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு சுமுகமான தீர்வைக் காண நாடகம் முயல்கிறது என்றும் அம்ஷன் குமார் கூறுகிறார்.

‘வேலி’ நாடகத்தில் ராஜீவ் ஆனந்த், பரின் அஸ்லம், அமல், டெல்பின் ராஜேந்திரன், விலாசினி ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ் நாடக மேடைப் பார்வையாளர்களுக்கு ‘வேலி’ நாடகம் உணர்ச்சிகரமான ஓர் அனுபவமாக இருக்கும் என்பது நிச்சயம் என உறுதி தருகிறார் அம்ஷன் குமார். இந்த நாடகத்தைக் காண அனுமதி இலவசம்.

SCROLL FOR NEXT