ஏறக்குறைய அரை நூற்றாண்டாக கல்யாண்ஜி தமிழ்க் கவிதையின் மீது தவிர்க்க முடியாத தாக்கம் செலுத்துபவர். பறவைகள், எளிய மனிதர்கள், சிறியதன் அழகு, பூச்சிகள், மலைகள், ஆறுகள், அருவி, தாவரங்கள், மழை, பூக்கள், வீட்டு மிருகங்கள், அடிப்படை மனிதாபிமானம், ஆய்வுக் கூடத்திலிருந்து வெளியேறிய ஒரு நுண்ணோக்கி இவையே இவரது கவி உலகின் கூடுதல் புழக்கமுள்ள பொருட்கள். அரை நூற்றாண்டுக் காலம் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர்களும் வாசிக்கப்படுபவர்களும் தமிழில் மிகச் சொற்பம். அவ்வகையில் கல்யாண்ஜி ஒரு தொடர் இயக்கம்.
பறவைகள் பயமின்றி இவரது கவிதை வெளிக்குள் பறக்கின்றன. ஆறுகள் தாம் ஆறற்றுப்போனதை இவரிடம் நம்பிச் சொல்கின்றன. வாதா மடக்கியும் பன்னீர் பூக்களும் பவள மல்லிகையும் இவரை நம்பியே பூக்கின்றன. கம்பளிப் பூச்சிகள் இவரை நோக்கி ஊர்கின்றன. சிறு செடிகள் இவர் கையில் ஏந்தக் காத்திருக்கின்றன. இவரது காலை நடையில் கண்ணில் பட எப்போதும் காத்திருக்கிறது ஒரு நாய்க்குட்டி. நட்சத்திரமும் நிலவும் இவர் பொருட்டே வருகின்றன. உடைக்கப்பட்ட பாசஞ்சர் ரயில் பெட்டிகள் இறுதியாகச் சிந்திய கண்ணீர் இவருக்கும் சேர்த்துத்தான். இவ்வளவு தாவரங்களும் செடிகளும் பறவைகளும் புனலும் மணலும் மிருகங்களும் வேறு எவரின் கவிதைகளிலும் நடமாடுவதில்லை.
வன்முறை மிகுந்த வாழ்வில் எளியதைப் பற்றிக்கொண்டு அல்லது எளியதன் அழகில் கிறங்கி வாழச் சொல்பவை கல்யாண்ஜி கவிதைகள். இயல்பாய் இரு என்பது அவர் கவிதையில் மற்றொரு சாரம். சிக்கலற்ற மொழியும், அபூர்வச் சொல்லாட்சிகளும், அலுப்பூட்டும் அன்றாடத்தைப் புதிதாகத் துலக்கி வைப்பதும், சக மனிதர்களின் மீதான நேசமுமே இவரது கவிதைகள்.
வசீகர அழைப்பு கொண்டது அவரது மொழி. பேக்பைப்பரின் வாசிப்புக்கு மயங்கி பின்னால்போகும் எலிகளைப் போல் நம்மை ஆக்கவல்லது. பின்னிரவில் வரும் குடுகுடுப்பைக்காரனைப் போல அவரால் நம் ‘வாயையும் கையையும் கட்டிப் போட முடியும்’. இன்று புதிதாய் வாசிக்கத் தொடங்குபவனுக்கும் அவர் புதிதாய் இருக்கிறார். கவிதையெனும் நெடும் பாலையில் ஓடிக் களைத்தவனுக்கும் அவர் ஆறுதல் அளிக்கிறார்.
‘ப்ரெய்லியில் ஒரு பிரார்த்தனை’ அவரது மகத்தான கவிதைகளில் ஒன்று. தமிழ்க் கவிதையே ப்ரெய்லியில் ஒரு பிரார்த்தனைதான். வானம்பாடிகள் கொஞ்சம் தாழப் பறக்கத் துவங்கிய காலத்தில், தீவிர இடதுசாரி அமைப்புகள் தங்களின் வெகுசன அமைப்புகளுக்கான பத்திரிகைகளின் வழி பிரகடனக் கவிதைகளை முன்வைக்கும் பொழுதில், கவியரங்குக் கவிதைகள் கோலோச்சும் சமயத்தில், ஞானக்கூத்தன், பசுவய்யா, ஆத்மாநாம், தேவதேவன் போன்றோர் நவீனக் கவிதைகளில் இயங்கிக்கொண்டிருந்த ஒரு பொழுதில், கல்யாண்ஜி ஒரு தனிப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறார். இயற்கை உபாசனை, சக மனிதர்களின் மீதான நேசம், எளியவற்றுக்கு மயங்குதல் என்ற பாதை அது. அதிகம் யாரும் புழங்காத பாதையும் அது. அதில் அவர் தனியாகவே நடக்கிறார். எதிரே எவரும் வரவும் இல்லை. யாரும் பின்தொடரவும் இல்லை.
புறக்கண்களால் பார்ப்பவர்களுக்காக எழுதப்படுவது அல்ல கவிதை. எவனொருவன்/ஒருத்தி வாழ்வின் பாதையில் தடுமாறுகிறார்களோ, விரல் பிடித்து அழைத்து வரப்படுகிறார்களோ, மொழியின் வழி உணர்ந்துகொள்ள முற்படுகிறார்களோ அவர்களுக்கே இங்கு கவிதை அவசியப்படுகிறது. கவிதை என்பது ரகசிய மொழி. எல்லோருக்கும் திறப்பதில்லை அதன் மாயக்குகை. கல்யாண்ஜியின் மொத்தக் கவிதைகளும் ப்ரெய்லியில் ஒரு பிரார்த்தனைதான். ஒருவர் நம்மை ஆட்கொள்வதும் அல்லது நாம் முழுமையாக ஒருவரிடம் சரணடைவதும் வாழ்வில் நாம் கடந்துவந்த பாதைகளில் உண்டு. என் முப்பதுகளில் நான் முழுமையாக கல்யாண்ஜி கவிதையில் சரணடைந்திருந்தேன். இன்றைக்கு அந்த இடத்தில் நான் இல்லை. ஆனால், அப்படி இருந்திருக்கிறேன் என்பது இன்றைக்குத் திரும்பிப் பார்க்கையில் சந்தோஷத்தையே தருகிறது.
எண்பதுகளின் இறுதியில் ‘புலரி’யில் தொடங்குகிறது அவரது பயணம். தொண்ணூறுகளில் அந்த ரயிலில் நானும் ஏறுகிறேன். இரண்டாயிரத்துப் பத்து வாக்கில் ஃபேஸ்புக்குக்குள் அவரது ரயில் நுழைகிறது. விருப்பக்குறிகள் வேறேதோ செய்கின்றன. ஜன்னலுக்கு வெளியே செயற்கையான வானவில்கள் தோன்றுகின்றன. நிஜ பட்டாம்பூச்சிக்குப் பகரமாகப் பட்டாம்பூச்சி ஸ்டிக்கர் விற்பவர்கள் பெட்டி எங்கும் அலைகிறார்கள். மழையும் நாயுருவிச் செடிகளும் எருக்கலம் பூக்களும் கம்பளிப் பூச்சிகளும் நானும் எப்போதும்போல உங்களுக்காகத் தண்டவாளத்தின் ஓரத்தில் காத்திருக்கிறோம் ஆசானே.
- சாம்ராஜ், ‘நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: naansamraj@gmail.com