தாமிரபரணியின் படித்துறையில் பக்கவாட்டில் நகரும் ஒரு காக்கையை நாள்கணக்கில் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? பெண்களும் குழந்தைகளும் குளித்துக் கரையேறிய படித்துறையில் அலையடித்துக்கொண்டிருக்கும் முற்றுப்பெறாக் கதைகளைக் கேட்டதுண்டா? கேந்திப் பூவுக்கு அதிக சோபை தருவது நிறமா, அடர்த்தியான அதன் மணமா என்று குழம்பித் தவித்திருக்கிறீர்களா? தெரு வாசலில் தொடங்கி கிணற்றடியில் முடிந்துபோகும் வீட்டுக்குள் வாழும் மனிதர்களைப் பற்றி ஐம்பதாண்டுகள் எழுத முடியுமா? சின்னஞ்சிறிய உலகத்துக்குள் பேரதிசயங்களைக் காண வண்ணதாசனுக்குள் ஆழ்ந்துபோக வேண்டும்!
“சடசடவென்று எரிகிற ஓலை மனசை என்னமோ பண்ணுதில்ல?” என்று பேசிக்கொண்டிருக்கும் தருணத்தில், திருச்செந்தூருக்குப் பக்கத்தில் பனைகள் அடர்ந்திருக்கும் ஊரின் தியாகராஜன் நினைவுக்கு வருவதும், அவரின் ஊதா நிறச் சட்டையும், விடுதியறையின் டிரங்குப் பெட்டியில் மணத்துடன் இருக்கும் அவர் ஊர் நாட்டுக் கருப்பட்டியின் வாசமும், கருப்பட்டியையும் கட்டெறும்புகளையும் விட்டுத் தொலைதூரம் வந்துவிட்ட இந்த நாளும், இதையெல்லாம் எல்லோரிடமும் பேசிவிட முடியாத துக்கமும் என்று அவரின் நினைவுகள், நிகழின் தணலிலிருந்து நினைவுகளின் குளுமைக்குத் தப்பித்து ஓடுபவை. அதனால்தான் வண்ணதாசனுக்கு ஊஞ்சல் சத்தம் உள்ளங்கைக்குள் கேட்கிறது.
தனக்கு முன்னால் இரண்டு விரற்கடை தூரத்தில் இருக்கிற உலகமே வண்ணதாசனின் உலகம். அவரின் காலடிகள் முன்னகர்ந்தால் அந்த இரண்டு விரற்கடை தூரம் முன்னகரும். வண்ணதாசனின் காலடிகள் ‘திருநவேலி’யின் நான்கு ரத வீதிகளுக்குள்தான் நிலைகொண்டிருக்கின்றன. அவர் ஒரு ‘ஊர்க்கோட்டி’. வறண்ட கோடையிலும், வெள்ளை மணற்பரப்புக்குக் கீழே ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றுநீரைப் போல் அவரது மனத்துக்குள் தாமிரபரணி ஓடிக்கொண்டிருக்கிறது.
எழுதத் தொடங்கிய காலத்திலேயே, ‘அப்பா’ என்று நான் கைகோத்துக்கொண்டதற்குக் காரணம், ஆறில்லா ஊரின் பாழ்வெளியில் இருந்துவந்தவள் என்பதாலோ? பெண் குழந்தைகளுடன் நடக்கப் பிரியப்படும் அப்பாவுடன் நடப்பதுபோல் அவருடன் பெருமிதத்துடன் நடக்கிறேன். சொற்களின் பகடை உருட்டி அவர் உருவாக்கும் சதுரங்கங்களுக்குள் வாழும் மனிதர்களை வியந்து பார்க்கிறேன். சொற்களின் அகல் ஏற்றி அவர் கொண்டாடும் திருக் கார்த்திகையகல்கள் பேசும் மனித மேன்மைகளை உள்வாங்குகிறேன். வண்ணதாசனின் கதைகள் முழுக்க வரும் ஆண்களும் பெண்களும் அபூர்வமானவர்கள். வண்ணதாசனின் எழுத்துத் தூரிகை அதை அழியா ஓவியமாக்கி வைத்திருக்கிறது.
வாழ்க்கை எப்போதுமே கையருகில் உள்ள பேரதிசயம். அந்தப் பேரதிசயத்தை, நுணுகி நுணுகிப் பார்த்துக் கற்றுக்கொள்ளவே நான் வண்ணதாசனை வாசிக்கிறேன். வண்ணதாசனுக்குப் பெரு மழைகள் தேவையில்லை. பூவின் இதழ்களில் அழகு சேர்க்கும் மழைத் துளிகள் போதும். அதிலிருந்து அவருக்கான கடலை உருவாக்கிக்கொள்வார். அன்பைப் பிரவகிக்கும் தமிழிலக்கியப் பக்கத்தின் பெருங்கடல். வண்ணதாசனுக்குக் காதலும் அன்பும் இயற்கையும் ஊடலும் கூடலும் நிரம்பிய, சங்க இலக்கிய முகம். அதில் குரோதமில்லை. காழ்ப்புணர்ச்சி இல்லை. முதுகில் தொட்டு, தன்னை உணர்த்தும் மென்மை. எல்லோரையும் கைகோத்துக்கொள்ளும் பேரன்பு. எவ்வளவு துயர் தந்தாலும் அன்பைப் போல் ருசியான உணர்வு வேறுண்டா? அன்பை விஞ்சிய ஓர் அதிசயம் வாழ்வில் இல்லை. தி.ஜானகிராமனும் கு.ப.ராஜகோபாலும் கு.அழகிரிசாமியும் வண்ணநிலவனும் இந்தப் பேரதிசயத்தை உணரச் செய்தவர்கள்.
யாரையும் தன் போக்குக்கு இழுத்துவிடாமல், அவரவர் பாதையைத் தேடிச்செல்லும் தூண்டலை வண்ணதாசனால் தர இயலும். அவர் கல்யாண்ஜியாகவோ வண்ணதாசனாகவோ சி.க.வாகவோ இருக்கலாம். அடிநாதம் சக மனிதர்கள் மீதான கனிவும் பிரியமும்தான். ஓர் எழுத்தாளனின் வலிமை, தன் எழுத்தின் வழியாகத் தன்னைப் பிரஸ்தாபிப்பது அல்லது தான் சொல்ல வருவதை ஸ்தாபிப்பது. வண்ணதாசனுக்கோ எழுத்தில் நிரூபணங்கள் தேவையில்லை. தன் பக்கம் என்று எதையுமே அவர் வைத்துக்கொள்வதில்லை. பூமியின் சுழற்சியில், சுழற்சி மட்டுமே நிலையானது. திசைகள் எல்லாம் அவரவருக்கானவை. வண்ணதாசனும் அவர் சூரியனை, நிலவை, வானத்தை, நட்சத்திரத்தை நம்மைப் பார்க்கச் சொல்வதில்லை. அவரவர் வானத்தை உருவாக்கிக்கொள்ள வைக்கிறார். வானமாகவும் பறவையாகவும் உருமாறும் விநோதக் கலைஞன் வண்ணதாசன்.
- அ.வெண்ணிலா, ‘கங்காபுரம்’ நாவலாசிரியர்.
தொடர்புக்கு: vandhainila@gmail.com