பத்து வருடக் கருக்கொள்ளலிது. ஒரு தொடக்கம் கிடைக்காமல் மனம் அலைவுற்றிருந்தது. ஏப்ரலில் பெய்த ஒரு கோடை மழைதான் அதற்கான சொல்லைக் கொண்டுவந்து போட்டது. முற்றிய நெற்கதிர்கள் நிரம்பிய வயலில் என் ‘டொமினிக்’, வண்ணப் புடவைகளின் இழுபடலில் ஒரு ஆண் தேவதையென எழுந்தான்.
திருவண்ணாமலையைச் சுற்றிலும் வியாபித்திருக்கும் வெளிநாட்டுக்காரர்களும் கண்டாச்சிபுரம், விழுப்புரம் பக்கமிருந்து மல்லாட்டை பிடுங்கக் கால்நடையாக வந்த கிழக்கத்திக் கூட்டமும் ஒரு புள்ளியில் இணைகிறார்கள். அது நாவலின் மையம். ஈரப் பிசுபிசுப்பு போக அப்போதுதான் தாதியால் குளிக்க வைக்கப்பட்ட ஒரு புதுக் குழந்தையை டிசம்பருக்குள் உங்கள் முன் கிடத்துவேன்.
பா. செயப்பிரகாசத்தின் மொத்தச் சிறுகதைகளும் இரு தொகுதி களாக வந்திருக்கின்றன. முப்பது ஆண்டு இடைவெளியில் மீண்டும் தொடக்கத்திலிருந்து ஆரம்பிக்கிறேன். ‘ஒரு ஜெருசலேமும்’, ‘அம்பலக்காரர் வீடு’ம் காலத்தைப் பின்னுக்குத் தள்ளி முன்னெழும் உக்கிரமான கதைகள். கவித்துவத்தில் தோய்ந்துபோன மொழியில் கதை சொல்லப்பட்டாலும் வதைபடும், ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கமே செயப்பிரகாசத்தின் எழுத்து எப்போதும் நிற்கிறது.