நவீன நாடகம், வீதி நாடகம், குழந்தைகளுக்கு நாடகப் பயிற்சி என்று தனித்துவமான நாடக ஆளுமையாக இயங்கிவருபவர் பிரளயன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாட்டாளர், பத்திரிகையாளர், திரைப்பட இணை இயக்குநர் என இவருக்குப் பல முகங்கள் உண்டு. வீதி நாடகம் என்னும் வடிவத்தின் சாத்தியப்பாடுகளைத் தமிழகமெங்கும் அறியச்செய்தவர். வங்க நாடகாசிரியர் பாதல் சர்க்கார், வீதி நாடகக் கலைஞர் சப்தர் ஹாஷ்மி ஆகிய ஆளுமைகளின் தாக்கத்தைப் பெற்றவர். ‘உபகதை’, ‘பாரி படுகளம்’, ‘வஞ்சியர் காண்டம்’, ‘மத்தவிலாஸ பிரகசனம்’, ‘கனவுகள் கற்பிதங்கள்’ போன்றவை இவரது புகழ்பெற்ற நாடக ஆக்கங்கள். திருவண்ணாமலையில் படித்துவிட்டு, கணிப்பொறி நிரல் பயிற்சிக்காகச் சென்னை வந்த பிரளயன், நவீன நாடக வடிவத்தால் ஈர்க்கப்பட்டு, சென்னைக் கலைக் குழுவை ஆரம்பித்து 35 ஆண்டுகள் ஆகின்றன. அதையொட்டி அவரது இல்லத்தில் மேற்கொண்ட பேட்டி இது...
தமிழில் நவீன நாடகம் தோற்றம் கொண்ட பிறகான அடுத்த தலைமுறை ஆளுமை நீங்கள். நாடகத்துக்கு நீங்கள் அறிமுகமான பின்னணியைச் சொல்லுங்கள்...
கல்லூரிக் காலத்திலேயே நாடகங்களில் ஈடுபாடு கொண்டு நண்பர்களோடு நிகழ்த்தத் தொடங்கியிருந்தேன். ஃபிலிம் சொசைட்டி நடத்திய அனுபவம் உண்டு. நவீன நாடகச் செயல்பாடுகள் குறித்து ‘காற்று’, ‘கொல்லிப்பாவை’ போன்ற பத்திரிகைகளின் வழியாகக் கேள்விப்படுகிறோம். நாடகங்களைப் போய்ப் பார்க்கும் சந்தர்ப்பம் அப்போது வரவில்லை. ‘நிஜ நாடக இயக்கம்’ போன்ற அமைப்புகளைப் பற்றிய செய்திகள் வழியாக நவீன நாடகம் பற்றிய சித்திரம் மனத்தில் உருவாகியிருந்தது. 1978-ல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முதல் மாநாட்டில், கோலாரிலிருந்து வந்த நாடகக் குழுவான ‘சமுதாயா’ என்ற அமைப்பு நிகழ்த்திய நாடகம் பற்றிக் கேள்விப்பட்டேன். தென்னிந்தியாவில் முதல் முறையாக, நாடகக் கலைஞர் பாதல் சர்க்கார் நாடகப் பயிலரங்கை நடத்தியபோது, ‘ஓ சாஸ்னெல்லா’ நாடகத்தை இங்கே நடத்தினார்கள். வசனமே கிடையாது, கனத்த உடல் பாவனை, சத்தங்கள் வழியாகவே அந்த நாடகத்தை நிகழ்த்தியதாக, அந்த நாடகத்தைப் பார்த்துவிட்டு வந்தவர்கள் எங்களுக்குச் சொல்கிறார்கள். அதைக் கேட்டபோது பெரும் தாக்கம் ஏற்பட்டது. அப்படியான பின்னணியில் 1984-ல் ஆரம்பிக்கப்பட்டதுதான் சென்னைக் கலைக் குழு.
தமிழ் நவீன நாடக இயக்கத்துக்கு மிகவும் உந்துதலாக இருந்த நிகழ்வுகளைச் சொல்ல முடியுமா?
1977-ல் பேராசிரியர் ராமானுஜம் ஏற்பாட்டில் பன்சி கௌல் நடத்திய 70 நாள் நாடகப் பயிலரங்கைச் சொல்வேன். 1978-ல் இரண்டு பேரும் மீண்டும் ஒரு பயிலரங்கை நடத்தினார்கள். அடுத்து, 1979-ல் தஞ்சாவூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய நாடக விழா. 1980-ல் பாதல் சர்க்கார் சென்னையில் சோழ மண்டலத்தில் நடத்திய நாடகப் பயிலரங்கு. இந்த நான்கும் முக்கியமானவை. நேரடியாக என்னிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது தஞ்சாவூர் நாடக விழாதான். தமிழில் நவீன நாடகத்துக்காக உருவாக்கப்பட்ட முதல் அமைப்பு ‘கூத்துப்பட்டறை’. நவீன நாடகம் சார்ந்து முழுமையான புரிதலோடு ந.முத்துசாமி அதை உருவாக்கினார். ‘பரிக்ஷா’வும் மிகப் பெரிய கனவோடு தொடங்கப்பட்டதுதான்.
1970-களில் தமிழில் நவீன நாடகம் வேர்கொள்ளத் தொடங்கி தற்போது 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. தொடக்கத்தில் இருந்த உத்வேகம், புதுமை நாட்டம், பல்வேறு விதமான வெளிப்பாடுகள் என வளர்த்தெடுக்கப்பட்டுள்ளதா?
தமிழ்ச் சிறுபத்திரிகைச் செயல்பாடுகளின் நீட்சியாகக் கருதப்பட்டிருந்த நவீன நாடகம், இன்றைக்கு வளர்ந்திருக்கிறது என்றே சொல்வேன். உதாரணத்துக்கு, 1978 வாக்கில் நாடகச் செயல்பாடுகள் பற்றிக் கேள்விப்பட்டு, 1984-ல்தான் முழுமையாக நாடகத்துக்கு வருகிறோம். அப்போது எண்ணிக்கையில் அதிகமாக நாடகக் குழுக்கள் இல்லை. அப்போது ஒரு வார ஒத்திகையிலேயே வசனங்களைப் பயின்று நாடகத்தைத் தயாரித்துவிடுவார்கள். ஆனால், இன்றைக்குப் புதிதாக வருகிற ஒரு சிறிய நாடகக் குழுகூட சிரத்தை எடுத்து 15-30 நாட்கள் வேலை செய்கிறார்கள். நாடக நடிகர்களிடம் பயிற்சி முறைகளில் பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. நாடகத்தைக் கற்கை நெறியாக அணுகும் போக்கு உருவாகியுள்ளது. 1980-களில் நாடகத்தைக் கல்வியாகக் கற்ற பேராசிரியர்களாக ராமானுஜம், ராஜூ, கோபாலி, கே.எஸ்.ராஜேந்திரன் என நான்கு பேர்தான் இருந்தனர். 2000-க்குப் பிறகு, கிட்டத்தட்ட தமிழில் 15 பேர் நாடகத்தை முறையாகப் படித்தவர்கள். இப்போது எங்கள் குழுவிலேயே இரண்டு பெண்கள் டெல்லி நாடகப் பள்ளிக்குப் போய் பயின்றவர்கள். இப்போது ஐம்பது, அறுபது குழுக்கள் இயங்குகின்றன.
தமிழ் நாடகத்தில் உங்கள் முன்னோடிகள் பற்றிச் சொல்லுங்கள்…
ந.முத்துசாமி கலை வெளிப்பாட்டின் ஒரு வழியாக நாடகத்தைப் பார்த்தார். பெரிய சமூக ஆதரவு இல்லாத, பரவலாகச் செல்வாக்கு இல்லாத ஒரு கடந்த கால வடிவத்தைக் கையிலெடுத்து, அதைப் பாதுகாக்கும் பொறுப்பை அவர் வைத்திருந்தார். எதிர்காலத்துக்கும் கடந்த காலத்துக்குமான ஒரு பாலமாகத் தன்னைப் பார்த்தார். மு.ராமசாமி, மூன்றாம் அரங்கில் தொடங்கி, அரசியல் அரங்கை நோக்கி நகர்ந்தார்.
மக்களுக்கான அரங்கம் என்ற பாதல் சர்க்காரின் மூன்றாம் அரங்க முயற்சிகளின் தாக்கத்தில்தானே நீங்கள் வீதி நாடக வடிவத்தை அடைகிறீர்கள்?
பாதல் சர்க்காரின் தாக்கத்தில் மு.ராமசாமி போன்றவர்கள் ஏற்கெனவே தெரு நாடக வடிவங்களைக் கையாளத் தொடங்கியிருந்தனர். ‘பரிக்ஷா’ நாடகக் குழுவினர், பாதல் சர்க்காரின் ‘ஏவம் இந்திரஜித்’தை இங்கே நாடகமாக்கி நிகழ்த்தியிருந்தனர். 1980-களில் மாநிலத்தில் ஜனநாயகத்துக்கு எதிராகக் காவல் துறை அத்துமீறல்கள் நிறைய நடந்துகொண்டிருந்த நேரம். நாடகக் குழுக்கள், நாடகக்காரர்கள் மீது தேசத் துரோக வழக்குகள் போடப்பட்டன. கருத்து வெளிப்பாடு என்பதையே குற்றச் செயலாகப் பார்க்கும் அரசின் அணுகுமுறையை உள்ளடக்கமாக வைத்து நாங்கள் போட்ட நாடகம்தான் ‘நாங்கள் வருகிறோம்’. சென்னைக் கலைக் குழுவின் முதல் நாடகமே பெரிய விவாதத்தை உருவாக்கியது. அது மேடை நாடகம்தான். வீதி நாடகத்தை நோக்கிய முயற்சி என்று ‘பெண்’ நாடகத்தைச் சொல்லலாம். கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத்துடன் தொடர்பு வந்த பிறகுதான் தெருவில் போய் திறந்த வெளியில் நாடகம் நிகழ்த்தக்கூடிய தெளிவு வந்தது. பாதல் சர்க்காரால் தாக்கம் பெற்ற ஜோஸ் சிரமுல் தயாரித்த நாடகங்களை நாங்கள் அப்படியே தமிழில் மொழியாக்கி நடித்தோம். அப்படியாக, 1987-ல் முதல் வீதி நாடகத்தை உருவாக்கினேன். சர்வதேச இளைஞர்கள் ஆண்டு அது. காவல் துறைக்கு ஆள் எடுக்கும்போது, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் மனோகரன் என்ற இளைஞர் மிதிபட்டு இறந்துபோகிறார். அந்தச் சம்பவம் ஏற்படுத்திய தாக்கத்தில் நான் எழுதிய நீண்ட கவிதையையே நாடகமாக ஆக்கினேன். அதுதான் ‘முற்றுப்புள்ளி’ நாடகம். தமிழ்நாடு முழுவதும் அந்த நாடகம் சென்று வெற்றிபெற்றது. வீதி நாடகம் என்ற வடிவத்தைப் படிப்படியாக ஆழமாகப் புரிந்துகொள்ளத் தொடங்கினோம்.
தமிழ் நவீன நாடகங்கள் அதீத ஒயிலாக்கத்தில் சிக்கிக்கொண்டுவிட்டதா? இளைய தலைமுறை நாடகக்காரர்களுக்குத் தமிழில் பரவலான வாசிப்பு உள்ளதா?
நாடகப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இந்திய அளவிலான செவ்வியல் நாடகப் பிரதிகளைப் படித்திருப்பார்கள். ந.முத்துசாமியைப் படித்திருப்பார்களா என்று கேட்டால் பதில் சொல்ல முடியாது. தமிழில் நாடகப் பிரதிகள் புதிதாக வர வேண்டிய காலகட்டம் இது. ந.முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதி, பிரபஞ்சன், ஜெயந்தன், பிரேம் - ரமேஷ், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்றோர் நாடகப் பிரதிகளை எழுதியுள்ளனர். நாடகச் செயல்பாட்டுக்கும் இங்கே இருக்கும் சமகால தமிழ் எழுத்தாளர்களுக்கும் மிகப் பெரிய இடைவெளி உள்ளது. ஆனால், நாடகத்துக்குப் பிரதிகள் தேவைப்படும்போது சிறுகதைகளை நோக்கிச் செல்கிறார்கள். நாடகச் செயல்பாட்டாளனே நாடகத்தை எழுத வேண்டிய சூழ்நிலையும் உள்ளது. இது பெரிய பின்னடைவு. ‘கூத்துப்பட்டறை’ தொடங்கியபோது பார்த்த நாடகங்களைப் போலவேதான் நவீன நாடகம் இன்னும் இருக்கிறது என்று எழுத்தாளர்கள் நினைக்கிறார்கள்.
அரசு, அமைப்புகள், சமூக நிகழ்வுகள் சார்ந்த முரண்பாடுகளும் கண்டனங்களும் அன்றன்றைக்கு சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தப்படும் நிலையில், ஜனநாயகரீதியான முரண்பாடுகளைப் பேசும் ஊடகமாகப் பிறந்த வீதி நாடகங்கள் தங்களது உள்ளடக்கத்தில் என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது?
முரண்பாடு என்பது அரசுக்கோ அதிகாரத்துக்கோ எதிரான செயல்பாடு மட்டுமல்ல; மக்களின் பொதுப்புத்தியிலிருந்தும் முரண்பட வேண்டியிருக்கிறது. பெருஞ்சமூகம் பெண்ணுக்கு எதிராக வைத்திருக்கும் மதிப்பீடுகளைச் சுட்டிக்காட்டுவதும் அவர்களிடமிருந்து முரண்படுவதுதானே? அந்த மாதிரியான சூழலில் அரசுடன் சேர்ந்தே பொது சமூகத்துடன் முரண்படலாம்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்வதற்கு முன்னதாகவே அங்குள்ள சூழ்நிலைகள் குறித்து நாடகம் செய்திருக்கிறீர்கள்...
ஆமாம். சாதத் ஹசன் மன்ட்டோ எழுதிய ‘டோபா டேக்சிங்’ கதையை எடுத்து அந்த நாடகத்தைச் செய்தேன். ஸ்ரீநகரில் இடைத்தேர்தல் நடந்த சமயத்தில், ஒரு இளைஞனை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி 2017 ஏப்ரலில் ஜீப்பில் கட்டிக்கொண்டுபோன செய்தி பெரிய சர்ச்சையானது. அந்தச் செய்தியைத் தொடர்ந்தபோது ஒரு நாடகமாய் செய்வதற்கான சாத்தியம் தெரிந்தது. ‘டோபா டேக்சிங்’கைப் பயன்படுத்திக்கொண்டேன். தேசம் என்ற கருத்தையே கேள்வி கேட்கும் படைப்பு இது. இன்றைக்குக் கூடுதல் பொருத்தமான நாடகம் அது.
இந்தியச் சூழலில் நம்பிக்கை தரும் நாடக முயற்சிகள் பற்றிச் சொல்லுங்கள்…
கேரளத்தில் முக்கியமான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. ‘மத்தி’ நாடகத்தையும், ‘சக்கா’ நாடகத்தையும் முக்கியமாகச் சொல்வேன். ‘மாலி’யும் மிக சக்திவாய்ந்த நாடக முயற்சி. பழங்குடி மக்களின் தொன்மம், அவர்களது வாழ்க்கை களவாடப்படுவது, அவர்களது எதிர்வினை ஆகியவை பதிவாகியிருக்கின்றன. கர்நாடகத்திலும் கேரளத்திலும் நாடக முயற்சிகளுக்கு சிற்றூர் வரை அரசு, நிறுவன, சமூக ஆதரவு உள்ளது. பெரிய பெரிய அரங்குகளைக் குறைவான வாடகைக்குத் தருகிறார்கள். மாவட்ட அளவில் நாடக விழாக்களை நடத்துகிறார்கள். இந்தச் சூழல் தமிழகத்தில் இல்லை.
பள்ளிக் குழந்தைகளின் ஆளுமையை வளர்க்கும் விதமாக நாடகப் பயிற்சியைக் கொடுத்துவருகிறீர்கள்... அதைப் பற்றிச் சொல்லுங்கள்...
12 – 16 வயது வரையிலான வளரிளம் பருவத்து மாணவர்களுடன் 25 வருடமாகப் பணியாற்றிவருகிறேன். வருடத்துக்கு ஒரு பயிலரங்கை நடத்துகிறேன். நாடகத்தைக் கல்வியின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தும் முயற்சி அது. நாடகத்தை ஊடகமாக வைத்துக்கொண்டு, வகுப்பறை தாண்டிய அனுபவங்களைத் தருவதற்கான முயற்சி இது. பிரிட்டனில் இதை வெற்றிகரமாக மாற்றியுள்ளார்கள். கலை இயக்குநர்கள், நடனக் கலைஞர்கள், இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து வேலைசெய்யும் வளமான சூழல் அது.
தமிழ் நவீன நாடகம் அளித்த முழுமையான நடிகர்கள் என்று உங்கள் பார்வையில் யார் யாரைச் சொல்வீர்கள்?
ப்ரீதம், கலைராணி இரண்டு பேரும் சிறந்த நடிகைகள். நடிகர்களில் பசுபதி, சோம சுந்தரம், சண்முகராஜா ஆகியோரைச் சொல்வேன். வீதி நாடகத்தில் என்னோடு நடித்துக்கொண்டிருந்த வேல.ராமமூர்த்தி இப்போது சினிமாவில் சிறப்பாக நடிக்கிறார். இப்போது சினிமாவுக்குப் போவதற்கான பயிற்சிக்காகவே இங்கேயுள்ள நாடகக் குழுக்களை அணுகுபவர்கள் அதிகமாகியுள்ளனர். ஆனால், அந்தப் பயிற்சியைக் கொடுக்க நாம் தயாராகியிருக்கிறோமா என்பதுதான் என்னுடைய கேள்வி.
- ஷங்கர்ராமசுப்ரமணியன்,
தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in