இலக்கியம்

தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சைக்கு வந்த கதை

செல்வ புவியரசன்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்
மன்னை மு.அம்பிகாபதி
பதிப்பாசிரியர்: மு.அ.பாரதி
இயல் வெளியீடு
தஞ்சாவூர் - 613 001
தொடர்புக்கு: 9940558934
விலை: ரூ.250

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாடு, அப்போதைய முதல்வர் எம்ஜிஆரின் முன்னெடுப்பு, முதல் துணைவேந்தரான வ.அய்.சுப்பிரமணியத்தின் தொலைநோக்கு ஆகியவற்றுடன் அன்றைய மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் மு.அம்பிகாபதி சட்டமன்றத்தில் விடுத்த கோரிக்கையும் நினைவுகூரப்பட வேண்டியது. இது ஏன் இப்போது நினைவுகூரப்பட வேண்டியதாகிறது என்றால், சமீபத்தில் காலமாகிவிட்ட அம்பிகாபதி, மக்கள் பிரதிநிதிகளில் உள்ளூர் ஆளுமைகளுக்கான உதாரணர்களில் ஒருவர். ஒரு பெரிய பொதுக் காரியம் நடக்க பெரிய மக்கள் தலைவர்கள், ஆட்சியைக் கையில் வைத்திருப்பவர்கள் மட்டும் அல்ல; உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளும்கூட எப்படிப் பங்காற்றுகிறார்கள் என்பது அவர் வழியே பேசப்பட வேண்டியதாகிறது.

மதுரையில் 1901-ல் தொடங்கப்பட்ட தமிழ்ச் சங்கத்தையடுத்து தஞ்சையிலும் ஒரு தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது. ஆனால், அது தொடர்ந்து செயல்படவில்லை. அதை ஈடுசெய்யும்விதமாக, நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான தமிழவேள் உமாமகேசுவரனார் 1911-ல் கரந்தை தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கினார். 1922-ல் தமிழுக்கென்று தனிப் பல்கலைக்கழகம் வேண்டும் என்று கோரிக்கையையும் அவர் விடுத்தார். சைவ சமாஜங்களைத் தொடங்குவதற்கு அவரைத் துணைக்கு அழைத்துக்கொண்ட தமிழறிஞர்கள், இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டவில்லை. அவரைச் சமாதானப்படுத்தி அந்தக் கோரிக்கையைக் கைவிடவும் நிர்ப்பந்தித்தனர்.

தனித்தமிழ் இயக்கத்தின் மூலவர் யார், உற்சவர் யார் என்று இன்றும் தொடரும் விவாதங்களில் தேரோடுவதற்கு வடம்பிடித்த தமிழவேளையும் கரந்தைக் கவியரசையும் நாட்டாரையும் யாருமே பேசுவதில்லை என்பது வியப்பிற்குரியதல்ல. தஞ்சையில் இருபதுகளில் உமாமகேசுவரனார் முன்னெடுத்த தமிழ்ப் பல்கலைக்கழகக் கோரிக்கை எண்பதுகளில்தான் நிறைவேறுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினராக இருந்த மு.அம்பிகாபதியால் அந்த அரை நூற்றாண்டுக் கனவு நனவானது. 1981 நிதிநிலை அறிக்கையில், தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் மீது நடந்த விவாதத்தில், சோவியத் பயணத்தின்போது தான் கண்ட ரஷ்ய மொழிக்கான சிறப்புப் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளைச் சட்டமன்றத்தில் விளக்கிப் பேசினார் அம்பிகாபதி. தமிழறிஞர் வ.சுப.மாணிக்கம் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கவும் காரணமாக இருந்தார். சங்கம் வளர்த்த மதுரையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்கலாம் என்று விவாதிக்கப்பட்டபோது, அங்கு ஏற்கெனவே காமராஜரின் பெயரில் பல்கலைக்கழகம் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அம்பிகாபதி, கம்பன் பிறந்த சோழ நாட்டிலேயே பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று உறுதியாக நின்று அதில் வெற்றியும்பெற்றார். தமிழுக்கான உயராய்வு மையம் என்ற வ.அய்.சுப்பிரமணியத்தின் கனவு இன்று உயர் நீதிமன்றப் படியேறிக்கொண்டிருக்கிறது என்பது தனியாய் விவரிக்கப்பட வேண்டிய துயரக் கதை.

ஒரு சட்டமன்ற உறுப்பினர் தான் சார்ந்த தொகுதியின் பிரச்சினைகளுக்காகச் சட்டமன்றத்தில் குரல் கொடுப்பவர் என்பதைத் தாண்டி மாநிலத்தின் முக்கியப் பிரச்சினைகளிலும் அவரால் எவ்வாறெல்லாம் பங்காற்ற முடியும் என்பதற்கு ஜூலை 17-ல் மரணமடைந்த மன்னை மு.அம்பிகாபதி ஒரு சிறந்த உதாரணர். திராவிட இயக்கத்திலிருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியதால் இயல்பாகவே கலை இலக்கியச் செயல்பாடுகளில் அவருக்குத் தீவிர ஈடுபாடு இருந்தது. பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்து பணியாற்றிய அவர் ப.ஜீவானந்தத்தின் வழியைப் பின்தொடர்ந்தவர். கம்பன், இளங்கோ, பாரதி ஆகியோரை ஆர்வத்துடன் பயின்று மக்களிடம் அவர்களைக் கொண்டுசேர்த்தார். விவசாயிகள் சங்கச் செயல்பாடுகளுக்கு நடுவே மன்னை கம்பன் கழகத்தின் தலைவராகவும் அவர் பொறுப்புவகித்தார்.

தமிழ்நாட்டில் மிதிவண்டியில் இருவர் செல்ல அனுமதி இல்லாத காலமும் ஒன்று இருந்தது; மீறிச் சென்றால் வழியில் போலீஸார் பிடித்து அபராதம் விதிப்பார்கள். அம்பிகாபதிதான் சட்டமன்றத்தில் இதை விவாதம் ஆக்கி முடிவுக்குக் கொண்டுவந்தார். விசேஷம் அதுவல்ல; மிதிவண்டியில் இருவர் செல்ல கம்பனைத் துணைக்கு அழைத்தார் அம்பிகாபதி. தொழிலாளர் நலனை முன்னிறுத்தி அவர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார். ‘கல்கி’, ‘சுதேசமித்திரன்’ பத்திரிகை அலுவலகங்களில் நடந்த தொழிலாளர் நலப் பிரச்சினைகளையும்கூட சட்டமன்றத்தில் கவனப்படுத்தியிருக்கிறார். அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பி.ஜி.கருத்திருமனின் மறைவுக்கு இரங்கல் உரையாற்றியபோது கருத்திருமனின் கம்பராமாயண ஈடுபாட்டைச் சொல்லி, கம்பன் வரிகளை மேற்கோள் காட்டியிருக்கிறார். வழக்கறிஞர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தைப் பற்றி பேசியபோது ‘தேரா மன்னா’ எனத் தொடங்கும் சிலம்பின் வரிகளைச் சொல்லி இடித்துரைக்கவும் செய்திருக்கிறார்.

மு.அம்பிகாபதியின் சட்டமன்ற உரைகளில் ஒரு பகுதி மட்டும் நூலாக வெளிவந்திருக்கிறது. இலக்கிய மேற்கோள்களால் மட்டும் இந்த சட்டமன்ற உரைகள் முக்கியத்துவம் பெறவில்லை. உள்ளாட்சியில் பெண்களுக்கான இடஒதுக்கீடு, 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு பொது விநியோகக் கடை, சிறைச்சாலைச் சீர்திருத்தம், சட்டமன்ற நிகழ்ச்சிகளின் நேரடி ஒளிபரப்பு, மாநில சுயாட்சி, படித்த இளைஞர்களுக்கு வேலையில்லாக் கால நிவாரணம், சீரான மின்கட்டணம் என்று அம்பிகாபதியின் உரைகள் இப்போதும் பொருத்தமாக இருக்கின்றன. மிக முக்கியமாக அந்நாட்களில் அரசியலர்கள் உள்ளூர் அளவில் தங்களை நிலைநிறுத்திக்கொண்டாலும் வாசிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள் என்பதை இந்த உரைகள் சொல்கின்றன. ‘ஆங்கிலத்தில் மட்டும் ‘தி இந்து’ வந்துகொண்டிருந்த காலம் போய் தமிழிலும் வரத் தொடங்கியது ஒரு வாசகனாக எனக்குக் கிடைத்த பெரிய சந்தோஷம்’ என்று ஒரு விழாவில் சொன்ன அம்பிகாபதி, காலையில் நடுப்பக்கக் கட்டுரைகளைப் படித்துவிட்டு சென்னையிலுள்ள நல்லகண்ணு தொடங்கி குமரியிலுள்ள கொடிக்கால் ஷேக் அப்துல்லா வரையிலான தன் காலத்துக்கு அரசியலர்களுடன் விவாதிப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தவர். கடைசி நாட்கள் வரை வாசிப்பதை நிறுத்தவில்லை அவர். ‘அரசியலர்கள் எப்போதும் மாணவர்கள்தான்; வாழ்நாள் முழுவதும் அவர்கள் படித்துக்கொண்டே இருக்க வேண்டும்’ என்று சொல்வாராம் அம்பிகாபதி. எழுத்தின் மீதான இந்த மதிப்பும், நேசமும்தான் தமிழ்ப் பல்கலைக்கழக வரலாற்றுக்கு ஒரு சிறு பங்கை தானும் அளிப்பதற்கான உத்வேகத்தை அவருக்கு அளித்திருக்க வேண்டும்.

- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

SCROLL FOR NEXT