இலக்கியம்

‘அறிவால் அரவணைப்பவர்’

செய்திப்பிரிவு

சுகுமாரன்

ஞானியின் ஆளுமை பரந்த ஒன்று. கல்விப்புலத் திறனாய்வு, மார்க்ஸியச் சார்புநிலை விமர்சனம், தமிழ் மரபை முன்னிறுத்திய பார்வை, கலைநோக்கிலான அணுகுமுறைகளுக்கு இடையில், இவற்றின் சாரத்தை எடுத்துக்கொண்டு ஒரு முழுமையாகப் படைப்பைப் பார்க்கும் பார்வையை அறிமுகப்படுத்தியவர் அவர். படைப்பு, சிந்தனை, வாழ்க்கை ஆகியவற்றை முழுமையாகப் பார்க்கும் இந்த முறைதான் அவரது முதன்மையான பங்களிப்பு என்று எண்ணுகிறேன். மார்க்ஸியத்தை வெறும் கோட்பாடாக இல்லாமல் முழுமையான வாழ்க்கைத் தத்துவமாகக் கண்டார். அதை இந்திய மரபுக்கும் பின்னர் தமிழ் மரபுக்கும் ஏற்றதாக விளக்கினார். இது அவரது அடுத்த பங்களிப்பு. தேசிய அளவில் மார்க்ஸியச் சிந்தனையாளர்களான தேவிபிரசாத் சாட்டர்ஜி, கே.தாமோதரன், டி.பி.முகர்ஜி, ஈ.எம்.எஸ். நம்பூதிரிப்பாடு ஆகியவர்களின் வரிசையில் இடம்பெறத் தக்கவர் ஞானி.

புவியரசு

ஞானி யாருக்கும் அஞ்சாதவர். எவரையும் விமர்சிக்கத் தயங்காதவர்.

தேவதேவன்

ஞானியை நினைவுகூர்கையில் மார்க்ஸியத்தையும் ஆன்மிகத்தையும் இணைக்க முயன்ற அவரது உள்ளம்தான் முன்வந்து நிற்கிறது. அதுவே அவரது பங்களிப்பு என்று சொல்வேன்.

ரமேஷ் பிரேதன்

கோவை ஞானி எங்களுக்கெல்லாம் பரந்துபட்ட கம்யூனிஸ்டாகவே அறிமுகமானவர். அவரிடம் மார்க்ஸியம் தொடங்கி பின்நவீனத்துவம் வரைக்கும் எதுபற்றியும் பேசிக்கொண்டே இருக்க முடியும். அவரை எதிர்த்து என்ன பேசினாலும் கேட்டுக்கொள்வார். அந்த ஜனநாயகப் பண்பை வேறு எவரிடமும் பார்த்தது இல்லை.

இளங்கோ கிருஷ்ணன்

ஞானி தமிழின் அசலான சிந்தனையாளர்களில் ஒருவர். கலை, இலக்கியம், தத்துவம், அரசியல் சித்தாந்தம் ஆகிய துறைகளில் தனது தனித்துவமான சிந்தனைகளால் ஆழமானத் தாக்கங்களைச் செலுத்தியவர். தமிழ்ச் சமூகம் கண்ட நவீன ஆளுமைகளில் முதன்மையானவர். தமிழ் அறிவியங்கியலை நவீனப்படுத்தியவர். தமிழ் என்ற மொழியே நமது மெய்யியல் என்று போதித்தவர். ஒப்பாரற்ற சிந்தனைப் பள்ளியாய் இருந்து, பேராளுமைகளை உருவாக்கிய பேராசான்.

சு.வெங்கடேசன்

மார்க்ஸியக் கண்ணோட்டத்தில் தமிழ் மரபியல் மற்றும் தமிழ் மெய்யியலை மிக ஆழமாகவும் நுட்பமாகவும் பார்த்த மூத்த இலக்கிய விமர்சகர் ஞானி. உடல் குறைபாடுகள், விடாமுயற்சி - தன்முனைப்பு மூலம் எளிதில் முறியடிக்கக்கூடிய ஒன்றுதான் என்பதைத் தொடர்ந்து நிரூபித்துக்கொண்டிருந்தவர்.

பாலை நிலவன்

ஞானியைச் சந்திக்க ஒரு புதிய எழுத்தாளன் வந்தால் அவனது ஆரம்பநிலைப் பதற்றங்கள், தன்னம்பிக்கையின்மை அத்தனையையும் ஒரு நாளில் நீக்கிவிடுவார். அவனிடம் அடுத்த நாளே ஒரு புத்தகத்தைக் கொடுத்து மதிப்புரை எழுதச் சொல்வார். அரை நூற்றாண்டாகப் புதிய எழுத்தாளர்கள் தொட்டுக் கடந்துபோகும் மையமாக வாழ்ந்தவர் அவர். தமிழ் சார்ந்த அழகியல், மெய்யியலைத் தமிழ் இலக்கியச் சூழலில் தேடிக்கொண்டே இருந்தவர். ஒரு பீடமாக இல்லாமல் எல்லோரையும் சமமாகப் பாவிக்கும் இன்னொரு மனிதரை நான் பார்த்ததில்லை.

தமிழருவி மணியன்

மிகப் பெரிய மார்க்ஸியராக இருந்தாலும், காந்தியத்தின் முக்கியத்துவத்தையும் உணர்ந்திருந்தவர் ஞானி. உரையாடல்களிலும் எல்லாத் தரப்புகளின் நியாயங்களுக்கும் காது கொடுப்பதிலும் மிகுந்த அக்கறையை அவர் கொண்டிருந்தார்.

சி.மகேந்திரன்

மார்க்ஸியத்தை ஐரோப்பியச் சிந்தனையாக அப்படியே பயன்படுத்துவதுதான் அசலானது என்று புரிந்துகொள்ளப்பட்ட காலத்தில், தமிழ் மரபோடு அதைப் பொருத்தியவர் ஞானி. அதற்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர்.

ராமகிருஷ்ணன்

மார்க்ஸியரான ஞானி, தமிழ்ச் சூழலுக்கேற்ப பொதுவுடைமைத் தத்துவத்தைப் பொருத்துவதில் காட்டிய தணியாத ஆர்வத்தின் விளைவே அவர் பெரியாரை மறுகண்டுபிடிப்பு செய்ததாகும். கம்யூனிஸ்ட்டுகள் பெரியாரைக் கடுமையாக விமர்சித்த காலகட்டத்திலேயே அவர் இதைச் செய்தார். “தமிழ்நாட்டில் பெரியாரின் தத்துவத்தைத் தழுவித்தான் மார்க்ஸியம் வெல்ல முடியும்” என்றார் அவர்.

திருமாவளவன்

தமிழ்நாட்டில் எந்தக் கட்சியோடும் தன்னைப் பிணைத்துக்கொள்ளாத சுதந்திரமான மார்க்ஸியச் சிந்தனையாளராக இருந்தவர் கோவை ஞானி. தன் சிந்தனையில் அம்பேத்கரின் தாக்கத்தையும் அவர் உள்வாங்கி வெளிப்படுத்தினார். சாதிப்பற்றை மறைத்துக்கொள்வதற்காகச் சிலர் ‘தமிழ்த் தேசியம்’ என்ற முகமூடியை அணிந்ததுபோல் அல்லாமல், சாதி மறுப்பு, மத மறுப்பு, சூழலியல் மீதான பற்று ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொண்ட முற்போக்கான தமிழ் தேசியத்தை முன்வைத்தவர் என்பது ஞானியின் சிறப்பு.

SCROLL FOR NEXT