செப்டம்பர் 22 - அசோகமித்திரன் பிறந்த தினம்
இலக்கியவாதி, இலக்கிய மேதை என்ற பிரிவினை அடிக்கடி இலக்கியத்தில் செய்யப்படுகிறது. எப்படி அதை வரையறைசெய்வது? இலக்கியவாதி என்பவன் இலக்கியத்தை அறிந்தவன், அதில் பயிற்சிபெற்றுத் தன் வாழ்க்கை நோக்கையும் அனுபவங்களையும் ஒட்டி எழுதுபவன். பயிற்சி எடுத்துக்கொண்டால் எவரும் ஒரு நாவலை எழுதிவிட முடியும் என்பார்கள். நாம் வாசிக்கும் பெரும்பாலானவர்கள் இலக்கியவாதிகள்தான்!
இலக்கிய மேதை என்பவரை மேலும் விரிந்த பொருளில் புரிந்துகொள்ள வேண்டும். படைப்புலகம் என்ற சொல்லாட்சியை மிக அலட்சியமாகப் பயன் படுத்துவது நம் வழக்கம். உண்மையில் உலகம் என்று சொல்லத்தக்க படைப்பு வெளி இலக்கிய மேதைகளுக்கு மட்டுமே உரியது. பல்வேறு வகையான வாழ்க்கைக் களங்கள், மானுடர்கள், காலகட்டங்கள் என விரிந்து உலகம்போலவே ஒற்றைப் பார்வையில் பார்த்து வகுத்துவிட முடியாததாகவே அது இருக்கும். அனைத்து வகையான சிந்தனைகளுக்கும் அங்கே முன்மாதிரிகளைக் காண முடியும். அள்ள அள்ளக் குறையாமல் வாழ்க்கை நுட்பங்களை அங்கிருந்து பெற முடியும். தனக்கென ஒரு படைப்புலகைப் படைத்தவரே இலக்கிய மேதை.
தமிழில் இலக்கிய மேதை என்று சொல்லத்தக்க மிகச் சிலரில் ஒருவர் அசோகமித்திரன். இந்திய இலக்கியப் பரப்பில் அவருக்கு நிகரான மேதைகள் சிலரே இன்றுள்ளனர். உலக இலக்கியப் பரப்பிலேயே அவருடன் ஒப்பிடத்தக்க பெரும் படைப்பாளிகள் குறைவு. இந்நூற்றாண்டில் தமிழர் பெருமிதம் கொண்டு முன்வைக்க வேண்டிய ஆளுமைகளில் ஒருவர். ஆனால் நுட்பங்களையும் ஆழங்களையும் சென்றடைய முடியாத தமிழ்ப் பொதுச் சூழலில் அவர் குறைவாகவே அடையாளம் காணப்பட்டிருக்கிறார், அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்.
நாமே அவரை அங்கீகரிக்காதபோது ஞானபீடம், நோபல் பரிசு போன்றவை அவரை அறியாமலிருப்பதில் வியப்புக் கொள்ள ஏதுமில்லை.
ஐம்பது ஆண்டுகளாகத் தொடரும் தரம்
தமிழ்ச் சூழலில் இலக்கியவாதிகள் மிகச் சீக்கிரத்திலேயே எழுதித் தீர்ந்துவிடுவதே வழக்கம். ஏனென்றால் அவர்களிடமிருப்பது இளமையில் அவர்கள் நேரடியாக அடைந்த அனுபவங்களாலான ஓர் உலகம். சூழலின் புறக்கணிப்பால் சோர்ந்து நின்றுவிடுபவர்களும் உண்டு. ஆனால் ஐம்பதாண்டுகளுக்கும் மேல் தொடர்ச்சியாகத் தரமும் வேகமும் குறையாமல் எழுதிவருகிறார் அசோகமித்திரன். அவர் எழுத வந்த பின் மூன்று இலக்கிய அலைகள் வந்து சென்றுவிட்டன. அவரது எழுத்து அதன் நிமிர்வு குறையாமல் நின்றுள்ளது.
எழுத ஆரம்பித்துப் பல பத்தாண்டுகளுக்குப் பின்னரே அவருக்கு எளிய அளவிலேனும் அறிமுகம் கிடைத்தது. வாழ்நாளின் பெரும்பகுதியை அவர் கடும் வறுமையில் கழித்திருக்கிறார். எப்போதும் ஏதாவது ஒரு நோய் அவரைத் தொந்தரவுபடுத்தியபடியிருந்தது. மிக எளிய வேலைகளிலெல்லாம் அவர் இருந்திருக்கிறார். ஆனால் மேதைகளுக்கு மட்டும் தடைகள் ஒருபொருட்டே அல்ல. ஏனென்றால் அவர்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்களே அல்ல. இங்கு இருக்கிறார்கள், அவ்வளவுதான்.
அசோகமித்திரனின் கலையின் சிறப்பம்சங்களை இவ்வாறு வகுத்துக்கொள்ளலாம்: கண் முன் காணும் இந்த உலகியல் வாழ்க்கையை மட்டுமே எழுத வேண்டும் என அவர் எண்ணுகிறார். அவர் பிறந்து வளர்ந்தது செகந்திராபாத். வாழ்ந்துவருவது சென்னை. இரு பெருநகரங்களின் கீழ்நடுத்தர வர்க்க மனிதர்களின் வாழ்க்கையையே அவர் எழுதுகிறார்.
எளிய மனிதர்கள் அவர்கள். மாதச் சம்பளத்தை எண்ணி எண்ணி ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்பவர்கள், இரண்டே புடவைகளை மாற்றிமாற்றிக் கட்டிக்கொண்டு கடைகளில் வேலைக்குச் செல்பவர்கள், குடிநீர் பிடிக்க இரவெல்லாம் அலைபவர்கள், குடிசைகளின் முன்னால் சாலையில் உறங்குபவர்கள் ஆகியவர்களே கதை மாந்தர்கள். அவர்கள் பிழைப்பு மட்டுமே கொண்டவர்கள், அரசியலற்றவர்கள், அவர்களின் கருணை, குரூரம், சுயநலம், அன்பு எல்லாமே இந்த அன்றாட வாழ்க்கையைக் கடத்திக்கொண்டு செல்வதற்காகத்தான்.
ஆனால் இந்த வாழ்க்கையை அவர் 'பதிவு செய்கிறார்' என்பது ஒரு புரிதல் பிழை. இவ்வாழ்க்கை அவரது எழுத்தின் களம். இங்கிருந்து மானுட உறவுகளைப் பற்றி, வாழ்க்கையின் ஒட்டுமொத்த பெறுமதி பற்றி, அடிப்படையான வினாக்களை அவர் எழுப்பிக்கொள்கிறார். நடுத்தர நகர மக்களின் வாழ்க்கை என்பது அவரது புனைவுலகுக்கான கட்டுமானப் பொருள் மட்டுமே.
கலைஞன் எடுக்கும் பேருருவம்
உதாரணமாகப் புலிக் கலைஞன். டைகர்பைட் காதர் புலிபோல வேடமிட்டு ஆடுபவன். வாய்ப்புக்காக சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்கி அவமதிக்கப்பட்டு மறைந்துபோகிறான். ஒரு கலைஞனின் அவலத்தைப் பதிவுசெய்வதல்ல அவரது நோக்கம். அவமதிக்கப்பட்டு, கீழ்மைப்பட்டு ஒடுங்கிய காதர் புலி வேடம் போடும்போது உண்மைப் புலியாக, அதைவிடவும் உக்கிரமாக ஆவதை அவர் காட்டுகிறார். அதில் உள்ளது கலை உருவாக்கும் மாற்றம் பற்றிய சித்திரம். கலைஞன் கொள்ளும் பேருருவக் காட்சி. கலைக்கும் சமூகத்துக்கும், கலைக்கும் அக்கலைஞனுக்குமான உறவைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டே செல்ல வைக்கும் படைப்பு இது.
எந்த ஒரு மேதையின் படைப்புலகையும் போலவே அசோகமித்திரனின் படைப்புகளும் ஒரு வரையறையை அளித்ததுமே அதை மீறி வளரத் தொடங்குகிறது. எளிய அன்றாட வாழ்க்கையைச் சொல்லும் கதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஆழமான தத்துவ விசாரணைகளுக்குச் செல்லும் 'காந்தி', 'நூலகத்துக்குச் செல்லும் வழியில்…' போன்ற பல கதைகளை நாம் அவரிடம் காணலாம். 'இன்னும் சில நாட்கள்', 'குகை ஓவியங்கள்' போன்ற அற்புதமான குறியீட்டுப் படைப்புகளை எழுதியிருக்கிறார்.
அசோகமித்திரனின் காலகட்டத்தில்தான் நவீனத்துவ அழகியல் உலகெங்கும் உருவாகிவந்தது. கதை என்ற வடிவைவிட நிகழ்ச்சிகளை, உணர்ச்சிகளை மட்டுமே சொல்லி மையம் நோக்கிக் கொண்டுசெல்லும் படைப்புகள் அவை. ஆனால் அசோகமித்திரன் மிக வலுவான கதைக் கட்டுமானம் கொண்ட கதைகளை எழுதினார். அவரது கதைகளின் இறுதி முடிச்சுகள் எப்போதுமே வலுவானவை, ஆனால் மிக இயற்கையாக நிகழ்பவை. கடைசி வரியில் கதையை முற்றிலும் வேறு தளத்துக்குக் கொண்டுசெல்லும் கதைகளை அவர் புனைவுலகில் காணலாம். உதாரணம் பிரயாணம்.
ஆனால் இதையும் அவர் கதைகளின் மாறாத இயல்பாகக் கொள்ள முடியாது. வெறும் நிகழ்ச்சிகள், எண்ணங்கள், உணர்ச்சிகளை மட்டுமே முன்வைக்கும் நவீனத்துவப் பாணிக் கதைகளான 'நூலகத்தில்…' போன்ற பல ஆக்கங்களை எழுதியிருக்கிறார். சொல்லப்போனால் தமிழின் அவ்வகைக் கதைகளில் மிகச் சிறந்தவை பெரும்பாலும் அவர் எழுதியவைதான்.
மனித வாழ்வின் எல்லைகள்
அசோகமித்திரனின் கதைகள் மானுட வாழ்க்கையின் துயரத்தைச் சொல்பவை. அன்றாட வாழ்க்கையில் வெளிப் படும் துயரம் என அதைச் சொல்லலாம். ஆனால் உண்மை யில் அது என்ன? குழந்தைக்கு மருந்து வாங்க முடியாத தந்தையின் துயரம் என்பது ஒரு எளிய துயரம்தானா? மனித னின் எல்லைகள் வெளிப்படும் தருணம் அல்லவா அது.
மறுபக்கமாக, மிக உற்சாகமான வாசிப்பனுபவத்தை அளிக்கும் ரிக்ஷா போன்ற ஏராளமான நகைச்சுவைக் கதைகளை அசோகமித்திரன் எழுதியிருக்கிறார். அவர் தன் இளமைப் பருவச் சூழலைச் சித்தரிக்கும் கதைகள் அனைத்துமே பிரகாசமானவை. வில்லியம் சரோயனின் 'மை நேம் இஸ் அராம்' வகைக் கதைகளுடன் ஒப்பிடத்தக்கவை.
வேதாந்தச் சிந்தனையில் இதம் என்ற சொல் முக்கிய மானது. 'இங்கே, இப்போது, இவ்வாறு' என அதற்குப் பொருள். பெருவெளியாக முடிவிலியாக நிறைந்திருக்கும் பேருண்மையைக்கூட இங்கே இப்போது இவ்வாறு அது எப்படி நிகழ்கிறது என்பதில் தொட்டு அறிவதே மெய்ஞானமாகும். தமிழில் ஒவ்வொரு கணமும் 'ஆம் இது நானறிந்த வாழ்க்கை' என்றும், மறுகணமே 'அய்யோ இதை இப்போதுதான் அறிகிறேன்' என்றும் உணரச்செய்யும் எழுத்து அசோகமித்திரனுடையது.
என் இல்லத்துச் சுவரில் நான் லெவ் தல்ஸ்தோயின் படத்தையும் அசோகமித்திரனின் படத்தையும் மட்டுமே மாட்டி வைத்திருக்கிறேன். தல்ஸ்தோய்க்கு நிகராக நாம் இங்கிருந்து முன்வைக்கத்தக்க நம் படைப்பாளி அவர்.
- ஜெயமோகன், தொடர்புக்கு: jeyamohan.writer@gmail.com