ஒன்பது நாவல்களை எழுதியவர் என்றாலும், தி.ஜானகிராமன் என்றதும் ‘மோக முள்’தான் முன்னால் வந்து நிற்கிறது. முதிரா இளைஞன் ஒருவன் தன்னைவிட வயதில் மூத்தவளின் மீது கொள்ளும் மோகமே நாவலின் மையம். ‘மோக முள்’ வெளிவந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு இதே கருப்பொருளில் மலையாளத்தில் ‘ரதிநிர்வேதம்’ என்றொரு குறுநாவலை எழுதினார் பி.பத்மராஜன். ‘மோக முள்’ மலையாளத்தில் மொழிபெயர்க்கப்படுவதற்கு முன்பே ‘ரதிநிர்வேதம்’ வெளியாகிவிட்டது. பத்மராஜனின் நண்பர் பரதன் அதைத் திரைப்படமாக இயக்கினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் அது புதிய திரைவடிவம் கண்டது. ‘ரதிநிர்வேதம்’ காட்சிக்காவது விருந்தாயிருந்தது. ‘மோக முள்’ திரைவடிவம் அந்த அனுபவத்தையும் அளிக்கவில்லை.
‘மோக முள்’ளை வாசித்தவர்கள் அதன் உயிர்ப்பான தருணங்களைத் திரைப்படத்திலும் எதிர்பார்த்து ஏமாந்தார்கள் என்றால், திரையில் மட்டுமே பார்த்தவர்களுக்கும் ஏமாற்றத்தையே அளித்தது. பத்மராஜனின் ‘ரதிநிர்வேதம்’ அப்படியே திரைப்படக் காட்சிகளாக மாறிவிடவில்லை. பாம்புகள் பிணையுறுவதை ரதியும் பப்புவும் பார்க்கிற அந்த முதல் அத்தியாயத்திலேயே கதை அதன் உச்சத்தை எட்டிவிடும். ஆனால், அந்தக் காட்சி திரைப்படங்களில் இடம்பெறவே இல்லை. கதையின் முடிவு உள்ளிட்ட மௌனங்கள் பலவும் திரைப்படங்களில் பின்பற்றப்படவுமில்லை. நாவலும் திரைப்படமும் தனித்தனி கலை வடிவங்கள். ஒன்றையொன்று தழுவிக்கொள்ளலாம். தனித்தனியாக உடலும் உயிரும் வேண்டும்.
தமிழில் ‘பொன்னியின் செல்வ’னுக்குப் பிறகு பிரபலமான மற்றொரு நாவல் ‘மோகமுள்’தான். அதனாலேயே ஏகப்பட்ட விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறது. யதார்த்தத்தின் மீது கனவுகளின் பனிப்போர்வையை விரித்தவர் தி.ஜானகிராமன் என்றார் ஒருவர். அது உண்மையில்லை; ஆனால், ஜானகிராமனுக்கு ஆன்மிக தரிசனம் வாய்க்கவில்லை; ‘மோக முள்’ வடிவம் கூடிவராத நீள்கதை மட்டுமே என்றார் மற்றொருவர். அங்கஹீனமான குழந்தையைப் பிச்சைக்காரிகூட வீசியெறிய மாட்டாளே, என் படைப்பை நான் என்ன செய்வேன் என்று ‘மோக முள்’ வெளிவந்த காலகட்டத்திலேயே தி.ஜானகிராமனைப் புலம்பவைத்துவிட்டார்கள். யமுனாவுக்கும் பாபுவுக்குமான உறவு பாபுவின் தந்தைக்கும் அவனது இசையாசிரியர் ரங்கண்ணாவுக்கும் தெரிந்திருக்க வேண்டும், அதை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்பதில் மிகச் சிறப்பான கதைத் தருணங்கள் கிடைத்திருக்கும், தி.ஜானகிராமன் அதைத் தவறவிட்டுவிட்டார் என்றொரு விமர்சனமும்கூட உண்டு. எல்லாமும், ‘ஒவ்வொருவரும் தனக்கான ‘மோக முள்’ளைத் தானேதான் எழுதிக்கொள்ள வேண்டும்’ கதைதான். ஆனால், இத்தகு விமர்சனங்களை எல்லாம் வைப்பவர்கள் தங்களது கதைகளில் ஆண்-பெண் உறவுச் சிக்கலைக் கையாளும்போது ஏற்கெனவே இருக்கும் அச்சுகளில் வாகாக அதை வடித்தெடுத்துக்கொள்பவர்கள் என்பதுதான் ஆச்சரியம்.
அகவை வேறுபாடுகளை மீறும் பெருந்திணை உறவுகள் பொதுவில் ஏற்கப்படவில்லை என்றாலும் அவை தவிர்க்கப்பட முடியாதவை என்பது எல்லோர்க்கும் தெரிந்ததுதான். ‘ரதிநிர்வேதம்’ அவ்வாறான ஒரு ஈர்ப்பைச் சொல்கிறது. அது வெறும் காமம். வளைவுகளாலும் அசைவுகளாலும் மட்டுமே ஆனது. நிறைவேறாமல் போயிருந்தாலும் விடுமுறைக் காலத்தோடு அந்த அனல் காற்று வீசி ஓய்ந்துவிடும். புணர்ச்சி மயக்கத்தில் ஏதேதோ புலம்பினாலும் அதுதான் உண்மை. ‘மோக முள்’ளோ நிறைவேறா விருப்பத்தில் வாழ்நாள் நெடுகவும் ஏங்கித் தவிப்பது, இன்னொரு இணை தானாய் வலிய வந்தாலும் அதை விலக்கி வைத்து தன் இலக்கையே தியானித்திருப்பது. “இதற்குத்தானா?” என்ற கேள்வியுடன் மோக முள் நிறைவுகொள்ளலாம். அந்த ‘இதற்குத்தானா’வை அதற்கு முன் பாபு அனுபவிக்காதவன் அல்லவே!
பாபுவின் அகத்துக்கும் புறத்துக்கும் இடையிலான போராட்டம் என்று இந்நாவலைச் சொல்லலாமா? இசையைப் புறம் என்றும் ஒதுக்கிவிட முடியாது. அகம்அகத்துக்கும் அகம்புறத்துக்கும் இடையில் நடக்கிற இடைவிடாத யுத்தம் எனலாமா? லட்சியத்தில் மனம் ஒன்றாமல் அலைக்கழியும் பாபுவுக்கு யமுனா அவனே கற்பித்துக்கொண்ட ஒரு தடங்கலோ? யமுனா அவனைச் சந்திக்காமலே போயிருந்தால் பாபு செத்துப்போயிருப்பான் என்று உறுதியாகச் சொல்லிவிடவும் முடியுமா? தங்கம்மாவின் இரண்டாவது வருகையை அவன் அனுமதித்திருந்தால் அதுவே தொடர்ந்து கடைசியில் அவன் பத்திரகிரியாராகவும் மாறியிருக்கக்கூடும். யார் கண்டது? அவரவர் காட்சி... அவரவர் கோலம்!
- செல்வ புவியரசன்,
தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in