தில்லையின் சிறப்பு
தில்லை என்றழைக்கப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோயில் சைவ சமயத்தினரின் மிக முக்கியமான கோயிலாகும். திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடப்பெற்ற சிறப்பு மிக்க இடம் இந்த நடராசர் கோயில். சேக்கிழாரின் பெரிய புராணம் பாடப்பெற்ற திருத்தலமும் இதுவே.
சிதம்பரச் சிக்கல்
தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட சிவபுராணங்களை தில்லை நடராஜர் கோயிலின் சிற்றம்பல மேடையில் பாடப்போன மூத்த சிவனடியார் ஆறுமுகசாமி தீட்சிதர்களால் தடுக்கப்பட்டார். அவரைப் பாடவிடாமல் சிதம்பரம் உரிமையியல் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடையை தீட்சிதர்கள் பெற்றார்கள். அறநிலையத் துறை ஆணையர் சிவனடியார் பாடுவதற்கான ஆணையை வழங்க, உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று மீண்டும் தடை உத்தரவு பெறுகிறார்கள் தீட்சிதர்கள்.
மேடையின் பின்னணி
சிற்றம்பல மேடையில் தமிழில் பாட விடாமல் தடுத்து நிற்கும் செயல்களுக்கான பின்னணியில் உள்ள அரசியல் சக்திகள், வெள்ளைக்காரர்கள் காலத்தில் வந்த தீர்ப்பு,1951-ம் ஆண்டு வழக்கு, நீதிபதிகள் எஸ்.மோகன், ஆர்.பானுமதி தந்த தீர்ப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு என மொத்தத்தையும் ஆவணமாகத் தொகுத்துத் தந்திருக்கிறது இந்நூல்.
வழக்கும் எழுத்தும்
நூலாசிரியர் சிகரம் ச.செந்தில்நாதன் வழக்கறிஞராக மட்டுமல்ல, எழுத்தாளராகவும் இருப்பதனால், ‘தில்லைக்கோயில் போராட்டத்தைத் தொடரவும், வெல்லவும் இன்னும் வாய்ப்பிருக்கிறது’ எனும் நம்பிக்கையோடு இந்நூலை முடித்துள்ளார்.
- மு.முருகேஷ்