குதிப்பி
ம.காமுத்துரை
டிஸ்கவரி புக் பேலஸ்
கே.கே.நகர் மேற்கு, சென்னை-78
தொடர்புக்கு: 87545 07070
விலை: ரூ.400
அதிக அளவில் இலக்கியக் கவனம் பெறாமல் இருந்த நாவிதர்கள், சோழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், வண்ணார்கள், நாகசுரக் கலைஞர்கள் குறித்து சமீப காலங்களில் காத்திரமான படைப்புகள் தமிழில் வெளிவருகின்றன. அவை வாசக கவனத்தையும் குவித்திருக்கின்றன. அவற்றின் தொடர்ச்சியாகத்தான், சமையல் கலைஞர்களின் வாழ்க்கையைப் பேசும் ‘குதிப்பி’ நாவலையும் பார்க்க வேண்டும்.
சாரதி என்ற சமையல்காரரின் குவாட்டர் பாட்டில் மூடித் திறப்பில் நாவல் தொடங்குகிறது. சாரதியின் மகன் சரவணன் குவாட்டர் பாட்டிலைத் தூக்கி வெளியே எறிவதில் நாவல் முடிவடைகிறது. சமையல் என்ற சொல்லைவிட, குவாட்டர் என்ற சொல்தான் நாவலில் அதிகமும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சமையல் கூடத்தைவிட, மதுபானக் கூடத்தைத்தான் நாவல் மிகுதியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. குதிப்பியைவிட, மதுக் குப்பிகளையே இவர்கள் அதிகம் பிடித்திருக்கிறார்கள். குடிப் பழக்கத்தால் அழிந்துகொண்டிருக்கும் சமையல் தொழிலாளர்கள் சிலரின் கதையாக இந்நாவலை முன்னிறுத்தலாம். குடியைப் பற்றி இவ்வளவு விரிவாகத் தமிழில் எழுதப்பட்ட நாவல் வேறில்லை என்று நினைக்கிறேன். சாரதி 14 வயதிலிருந்தே குடித்துக்கொண்டிருப்பவன். சம்பாதிப்பதற்கும் மேலாகக் கந்துவட்டிக்குக் கடன் வாங்கிக் குடிப்பவன். மகனின் படிப்புச் செலவுக்கு வாங்கிய பணத்தையும் குடித்தழிப்பவன். இவனது மறைவுக்குப் பிறகு, சாரதியின் மகன் சரவணன். சமையல் களத்தில் இறங்குகிறான். இவன் சமையல் கலையின் நவீனத் தொழில்முறைகளை உள்வாங்கியவன். சமையல் கலைஞர்களின் தரத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லும் நம்பிக்கையின் கீற்று. இது குடியை வெறுப்பதினூடாகத்தான் நிகழும் என்ற இடத்தைத் தொட்டு நிறைவடைகிறது ‘குதிப்பி’.
நாவலின் களம் தேனியும் அதைச் சுற்றியுள்ள பகுதியும்தான். சமையலர்களின் வாழ்க்கையில் சாதி பிரதான இடம் வகிக்கிறது. தேனி போன்ற சிறு நகரங்களில், சாதிய அடையாளத்தை மறைத்துக்கொண்டு சமையல் வேலை செய்வதென்பது இயலாத காரியம். தனக்குச் சமைத்துத் தருபவன் தன்னைவிடவும் சாதியக் கட்டுமானத்தில் உயர்ந்தவனாக இருக்க வேண்டும் என்ற பொதுப்புத்தி மனநிலை பலரிடம் படிந்துபோயுள்ளது. ஐயர் என்றோ, பிள்ளை என்றோ தங்களது அடையாளத்தை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. “ராசப் பிள்ள மகெங்க” என்று சொன்ன பிறகுதான் வேலை கொடுப்பவர்களுக்கு உயிர் வருகிறது. “விசேச வீட்டுக்காரர்கிட்ட நான் இன்ன ஆளுகனு சொல்லீர வேண்டாம்... சொல்லித்தே ஆகணும்னா, பிள்ளைமார்னே சொல்லுங்க” என்கிறார் சின்னப்பாண்டி. இந்தப் பகுதியைத் தொட்டுக்காட்டிச் சென்றிருப்பதற்குப் பதிலாக, இதை விரிவாகப் பேசியிருக்கலாம். உண்மையில், சமையல் கலைஞர்கள் நெருக்கடிக்குள்ளாகும் இடம் இதுதான், இல்லையா?
- சுப்பிரமணி இரமேஷ், தொடர்புக்கு: ramesh5480@gmail.com