இலக்கியம்

வீடில்லாப் புத்தகங்கள் 47: எண்ணியல் நாயகன்!

திருவனந்தபுரம் எஸ்.ராமகிருஷ்ணன்

எனது வீட்டின் அருகில் உள்ள சாலை யில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடை ஒன்றை கண்டேன். 10 ரூபாய், 20 ரூபாய் தொடங்கி 200 ரூபாய் வரையில் விதவிதமான பொருட்கள்.

யார் எத்தனை பொருட்கள் எடுத்தா லும் நிமிஷத்துக்குள் கணக்குக் கூட்டித் தொகையைச் சொல்லிக் கொண்டிருந் தார் கடைக்காரப் பெண்மணி.

ஒரு தாயும் பள்ளி யூனிஃபார்ம் அணிந்த மகளும் பிளாஸ்டிக் தட்டுகள், வாட்டர் பாட்டில் என ஐந்தாறு பொருட் களை எடுத்துக்கொண்டு விலை கேட்டார்கள். 170 ரூபாய் என அந்தப் பெண்மணி சொல்லி முடித்தவுடன், கணக்கு சரிதானா என தன் மகளிடம் பார்க்க சொன்னார் அம்மா.

உடனே அந்தச் சிறுமி ‘‘கால்குலேட்டர் கொண்டுவரவில்லையே’’ என்றாள்.

‘‘சின்ன கணக்குதானே, இதுக்குக் கூடவா கால்குலேட்டர் வேணும்?’’ என அம்மா திட்டியதும், ‘‘உன் செல்போனைக் கொடு’’ என்று வாங்கி அதில் இருந்த கால் குலேட்டரைப் பயன்படுத்தி கணக்குப் போட்டுத் தொகையை சொன்னார் மகள்.

அம்மா 500 ரூபாயை எடுத்து நீட்டிய தும் கடைக்காரப் பெண் சிரித்தபடியே, ‘‘இதில் 170 போனால் மீதி எவ்வளவு?’’ என அந்தச் சிறுமியிடம் கேட்டார். அதற்கும் சிறுமி கால்குலேட்டரை அமுக்கினாள்.

மீதிப் பணத்தை நீட்டியபடியே கடைக் காரப் பெண்மணி ‘‘கணக்கை மனசுல போடணும். இப்படி செல்போன்ல போடக்கூடாது’’ என்றார்.

அவர் சொன்னது உண்மை. முன்பெல் லாம் பலசரக்குக் கடையில் இருந்து பெரிய ஜவுளிக் கடை வரைக்கும் துல்லிய மாக கணக்குப் போடுகிற கணக்காளர்கள் இருந்தார்கள். நிமிஷத்தில் கூட்டி, கழித்து பதில் சொல்லிவிடுவார்கள். எவ்வளவு கூட்டம் இருந்தாலும் ஒரு ரூபாய் கூடுதல், குறைவு வரவே வராது.

இப்போதெல்லாம் ஆண்டுக்கு ஆண்டு கணிதப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்குகிற மாணவர் கள் கூடிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், மனக்கணக்குப் போடும் திறன் குறைந்துகொண்டே வருகிறது.

‘‘இந்தியர்களுக்கு இயல்பிலேயே கணிதமூளை. அவர்களால் எவ்வளவு சிக்கலான கணக்கையும் எளிதாகப் போட்டுவிட முடியும்’’ என்கிறார் கணித அறிஞர் மார்விக். ராமானுஜத்தின் சாதனைகளை உலகமே கொண்டாடு கிறது. அவரது வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் ஞானராஜசேகரன் ‘ராமா னுஜம்’ என்ற சிறந்த படமாக உருவாக்கியிருக்கிறார்.

ராமானுஜத்தின் வாழ்க்கை வர லாற்றை விரிவாக அறிந்துகொள்ள துணைசெய்கிறது நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ள ராபர்ட் கனிகல் எழுதிய ‘அனந்தத்தை அறிந்தவன்’ என்கிற புத்தகம். தமிழாக்கம் செய்திருப்பவர் பி.வாஞ்சிநாதன்.

ராமானுஜத்தின் 125-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்திய மொழிகள் அனைத்திலும் இந்நூலைக் கொண்டு வர வேண்டும் என ராமானுஜம் கணிதவியற் கழகம் முடிவு செய்து வெளியிட்டுள்ளது.

ராமானுஜத்தின் பிறப்பில் இருந்து அவரது இறுதிநாட்கள் வரை விரிவாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார் கனிகல். இதற்காக அவர் தமிழகத்துக்கு வந்து ஆய்வு செய்திருக்கிறார். ஊர் ஊராகச் சுற்றி ராமானுஜமுடன் தொடர்புள்ள அத்தனை மனிதர்களையும் சந்தித்திருக் கிறார். இந்நூலில் நிறைய புகைப்படங் களும் ஆவணங்களும் இணைக்க பட்டுள்ளன.

ராமானுஜத்தின் முக்கிய கணித சூத்திரங்களும் அதற்கான விளக்கங் களும் விவரிக்கப்பட்டுள்ளன. ராமானு ஜத்தின் வாழ்க்கையை விவரிப்பதுடன் அன்றைய கல்விமுறை, திருமணம், பண்பாட்டுச் சூழல், குடும்ப அமைப்பு, ஜாதி, பிரிட்டிஷ் அரசாட்சி ஆகியவற்றை கனிகல் நுட்பமாக எழுதியிருப்பது இந்நூலின் சிறப்பாகும்.

கணிதமேதை ராமானுஜம் தீவிரமான கடவுள் நம்பிக்கை கொண்டவர். ஆனால், அவரை ஆதரித்த இங்கிலாந்தைச் சேர்ந்த கணிதப் பேராசிரியர் ஹார்டி கடவுள் நம்பிக்கையற்றவர். பொதுவாக கணிதமேதைகள் பலரும் கடவுள் நம்பிக்கையற்றவர்களே. ஆகவே, அவர்களுக்கு ராமானுஜத்தின் கடவுள் நம்பிக்கையும் வழிபாடும் விசித்திரமாக தோன்றின என்கிறார் கனிகல்.

ராமானுஜத்தின் தந்தை னிவாச ஐயங்கார் பட்டுப் புடவைக் கடை ஒன்றில் கணக்கராக வேலை செய்தார். துணியின் தரத்தை மதிப்பீடு செய்வதில் அவர் தேர்ச்சி பெற்றவர். கடை, வீடு என அவரது உலகம் லெளகீக விஷயங்களுடன் மிகச் சுருங்கியது.

லண்டனில் இருந்து ராமானுஜம் தனது தந்தைக்கு எழுதிய கடிதங்களில் பெரும்பாலும் குடும்ப விஷயங்களும், வீட்டு சாக்கடை வழிந்து வராமல் இருக்க செய்ய வேண்டிய வழிமுறைகள் போன்ற சாதாரண விஷயங்களே இடம்பெற்றிருந்ந்தன. ஆனால், தனது அம்மாவுக்கு எழுதிய கடிதங்களில் ஐரோப்பாவில் உள்ள போர்ச் சூழல், போரில் விமானங்கள் பயன்படுத்தபட்ட விதம், ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இந்தியர்கள் பங்கேற்பது போன்ற உலக விஷயங்களை ராமானுஜம் எழுதியிருக்கிறார். காரணம், அவரு டைய அம்மாவுக்கு உலக விஷயங்களை அறிந்துகொள்வதில் அதிக ஆர்வம் இருந்ததுதான்.

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஜானகி என்ற பெண்ணை, ராமானுஜம் திருமணம் செய்துகொண்டபோது ஜானகிக்கு வயது 9. அவருடைய தந்தைக்கு இந்தத் திருமணத்தில் இஷ்டமில்லை என்பதால் அவர் திருமணத்துக்கே வரவில்லையாம்.

பிரான்சிஸ் ஸ்பிரிங் தலைமையில் இயங்கிய சென்னை துறைமுகத்தில் ராமானுஜத்துக்கு எழுத்தர் வேலை கிடைத்தது. அப்போது ஜார்ஜ் டவுனில் உள்ள முத்தையா முதலித் தெருவில் வசிக்கத் தொடங்கினார்.

துறைமுகத்தில் வேலை செய்த நாட்களிலும் கணித ஆய்வுகளில்தான் முழுமையாக ஈடுபட்டுக் கொண்டி ருந்தார் ராமனுஜம். 1913 ஜனவரி 16-ம் நாள், கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஜி.எச். ஹார்டிக்குத் தனது கணித ஆய்வுகள் குறித்து ஒரு கடிதம் எழுதினார். அதுதான் ராமானுஜத்தின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. ஹார்டி இல்லையேல் ராமானுஜனை உலகம் அறிந்திருக்கவே முடியாது. இந்நூல் ஹார்டின் வரலாற்றையும் விவரிக்கிறது.

கல்விப் பயில இங்கிலாந்து சென்ற ராமானுஜத்துக்கு சைவ உணவு பழக்கம் பெரும்பிரச்சினையாக இருந்தது. அவராகவே சமைத்து சாப்பிட்டுள்ளார். இங்கிலாந்தின் குளிரையும் அவரால் தாங்க முடியவில்லை. நோயுற்று மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். நடுங்கும் குளிரில், தனிமையில் மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் தனது கணித ஆய்வுகளைத் தொடர்ந்திருக்கிறார் ராமானுஜம்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாண வர்கள் தினமும் 2 மணி நேரத்தை விளை யாட்டுக்கு எனவே ஒதுக்கிவிடுவார்கள். யாரும் அறைக்குள்ளேயே அடைந்து கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், ராமானுஜத்துக்கு விளையாட்டில் ஆர்வமே இல்லாமல் போனது. கணிதம் மட்டுமே அவரது உலகமாக இருந்தது.

உடல்நலக் குறைவு காரணமாக ராமானுஜம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரைப் பார்க்க ஹார்டி வாடகைக் காரில் வந்து இறங்கினார். அந்த காரின் எண்: 1729. அதை கண்ட ராமானுஜம் ‘‘1729 இது மிகவும் தனித்துவமான எண். இரண்டு கன சதுரங்களின் கூட்டுத் தொகையாக இருவேறு முறைகளில் சொல்லக் கூடிய மிகச் சிறிய எண்’’ என்று விளக்கினாராம். அதனால் ‘ராமானுஜம் எண்’ என்று 1729 அழைக்கப்படுகிறது.

சுடர்விடும் கணித அறிவு அவரை தீவிரமாக இயங்க வைத்தது. ஆனால் பிரிவும், தனிமையும், வறுமையும் அவரை முடக்கியது. நோயுற்ற நிலையில் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார் ராமானுஜம். சிகிச்சைக்காக கொடுமுடிக் குச் சென்றார். ஆனால், காசநோய் முற்றிய நிலையில் உடல் மேலும் நலிந்து போனது. 1920 ஏப்ரல் 26 அன்று சென்னையில் அவரது உயிர் பிரிந்தது.

நம்மிடையே இன்னும் எத்தனையோ ராமானுஜம்கள் அறியப்படாமல் இருக் கக்கூடும். அவர்களை அடையாளம் காணவும், வழிநடத்தவும், சாதனை செய்ய துணை நிற்கவும் ராமானுஜத்தின் வாழ்க்கை ஒரு பாடமாக அமைகிறது.

- இன்னும் வாசிக்கலாம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com

SCROLL FOR NEXT