இலக்கியம்

வெண்ணிற நினைவுகள்: தந்தையெனும் நாயகன்

திருவனந்தபுரம் எஸ்.ராமகிருஷ்ணன்

நர்கிஸ், சுனில் தத் நடித்து 1957-ல் வெளியான ‘மதர் இந்தியா’ திரைப்படமானது தாயின் பெருமையைச் சொல்லக்கூடியது. வறுமையில் வாடும் கிராமத்துப் பெண்ணான ராதா, கணவர் இல்லாத நிலையில் தனது மகன்களை வளர்ப்பதற்கும், கடன் நெருக்கடியிலிருந்து குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கும் போராடும் கதையே ‘மதர் இந்தியா’. இப்படம் இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடியது. இன்று வரை தாய்மையைக் கொண்டாடும் சிறந்த படமாகக் கருதப்படுகிறது. இதுபோல தந்தையைக் கொண்டாடிய திரைப்படங்கள் குறைவே. ராமாயணத்தில் வரும் தசரதன் மறக்க முடியாத தந்தை. எந்த மனைவியை மிகவும் நேசித்தாரோ அவராலே தான் வஞ்சிக்கப்படுவதை தசரதனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மகன் மீது அளவற்ற பாசம் கொண்ட தந்தைக்கு அடையாளம் தசரதனே.

தஸ்தாயெவ்ஸ்கி தொடங்கி புதுமைப்பித்தன் வரை பல்வேறு எழுத்தாளர்கள் தந்தையோடு தங்களுக்கு ஏற்பட்ட பிணக்குகளை, தந்தை மீதான வெறுப்பை, தந்தையின் அதிகாரத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். குறிப்பாக, தஸ்தாயெவ்ஸ்கியின் ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவல் மிக மோசமான தந்தையின் சித்திரத்தை அழுத்தமாக விவரிக்கிறது. தமிழ் சினிமாவில் தந்தைக்கும் மகளுக்குமான உறவு நிறைய படங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், தந்தைக்கும் மகனுக்குமான உறவு குறைவாகவும், மிக மேலோட்டமாகவுமே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. தாயோடு பையன்களுக்கு உள்ள நெருக்கம் தந்தையோடு இருப்பதில்லை. அபூர்வமாகச் சிலர் தந்தையோடு மிக நெருக்கமாக இருக்கிறார்கள். தோழனைப் போலப் பழகுகிறார்கள். தந்தையின் கனவுகளை நிறைவேற்றுகிறார்கள்.

ஒரு தந்தை தனது பிள்ளைகளை எப்படி வளர்க்கிறார், அவர்களின் எதிர்காலம் குறித்து என்ன கனவுகளைக் காணுகிறார், அந்தக் கனவுகளை நிறைவேற்ற எவ்வளவு கஷ்டப்படுகிறார், பிள்ளைகள் அதை நிறைவேற்றாதபோது எவ்வளவு மனக்கஷ்டம் அடைகிறார் என்பதை மிக அழகாகச் சொன்ன திரைப்படம் சேரன் இயக்கிய ‘தவமாய் தவமிருந்து’. வணிகக் காரணங்களுக்காகக் காதல், டூயட் பாடல், சில மெலோடிராமா காட்சிகள் வைத்திருந்தாலும் இயக்குநர் சேரன் மிக உண்மையாக, நேர்மையாக, யதார்த்தமாகத் தமிழ்க் குடும்பம் ஒன்றின் வாழ்க்கைக் கதையை அழகாகச் சொல்லியிருக்கிறார். ‘மதர் இந்தியா’கூட விவசாயக் குடும்பத்தின் கதையைத்தான் சொல்கிறது. ஆனால், ‘தவமாய் தவமிருந்து’ சிறுநகர வாழ்க்கையை விவரிக்கிறது. அதுவும் சிறிய அச்சகம் வைத்துக்கொண்டு, சைக்கிளில் வேலைக்குச் சென்று வருகிற ஒரு தந்தையின் கதையைச் சொல்கிறது.

முத்தையா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராஜ்கிரண், தேசிய விருது கொடுத்துக் கொண்டாடப்பட வேண்டியவர். மிக அற்புதமாக நடித்திருக்கிறார். படம் பார்த்த பலரும் அவரைத் தங்களது சொந்தத் தந்தையின் வடிவமாகவே உணர்ந்தார்கள். படத்தின் ஆரம்பத்தில் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தந்தை டூர் செல்கிறார். ‘ஒரேயொரு ஊருக்குள்ளே’ என்ற பாடல் தொடங்குகிறது. மிக அழகாக அதைப் படமாக்கியிருக்கிறார் சேரன். எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு மிகச் சிறப்பு. தந்தைதான் பிள்ளைகளுக்கு ஆதர்சம். தந்தையிடமிருந்தே உலகை அறிந்துகொள்கிறார்கள். தந்தையே அவர்களுக்கு நாயகன். வளர வளர அதைப் பிள்ளைகள் மறந்துவிடுகிறார்கள். படத்தில் தீபாவளி நாளில் முத்தையா பணத்துக்காகப் படும் கஷ்டம் எத்தனையோ குடும்பத்தில் நடக்கும் நிஜம். சினிமாவில் அதைக் காணும்போது கண்ணீர் பீறிடுகிறது. கஷ்டப்படும் குடும்பத்திலிருந்து கல்லூரிக்குப் படிக்கப்போன ராமலிங்கம் தந்தையை ஏமாற்றிப் பணம் வாங்கி, அதில் புத்தாடைகளும் கேளிக்கைகளுமாக இருப்பதைக் காணும்போது நமக்கே குற்றவுணர்வு ஏற்படுகிறது. இன்னொரு காட்சியில், ஃபீஸ் கட்டுவதற்கான பணம் வேண்டி சைக்கிளை அடமானம் வைத்துப் பணம் வாங்கிக்கொள்ளச் சொல்கிறார் தந்தை. அந்த சைக்கிள் போய்விட்டால் எப்படி வேலைக்குப் போவார் என்று தாய் தனது நகையை அடமானம் வைத்துப் பணம் கொண்டுவந்து தருகிறார். அந்தக் காட்சியில், அக்குடும்பம் மகன் மீது கொண்டிருந்த கனவு அழகாக வெளிப்படுகிறது.

பிள்ளைகள் தந்தையை ஏமாற்றுவதாகக் கருதி தங்களையே ஏமாற்றிக்கொள்கிறார்கள். படத்தின் ஆரம்பக் காட்சியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தந்தையைக் காண வந்த சேரன், ஐசியூவில் இருந்த அவரது காய்த்துப்போன பாதங்களை வருடியபடியே இருப்பார். அந்தக் கால்கள்தான் முத்தையா வாழ்ந்த வாழ்க்கையின் சாட்சியம். அதுபோலவே மருத்துவமனை வராந்தாவில் நிற்கும் அண்ணனைக் கண்டுகொள்ளாமல் சேரன் போவதும் அதற்கு அண்ணி, 'என்ன... உங்க தம்பி பேசாமல் போகிறார்' என்று குற்றம் சொல்லிப் பேசுவதும் உறவின் கசப்பை நிஜமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது.

பிள்ளைகளை வளர்க்கத் தந்தை படும் பாட்டை ஒருவன் தான் தந்தையாகும்போதுதான் உணரத் தொடங்குகிறான். அதுவும் வயதான காலத்தில்தான் ஒருவன் தனது தந்தையின் நேசத்தை முழுமையாக உணர்கிறான். படத்தில் வரும் ராமலிங்கம் தனது தோல்வியின் வழியே தந்தையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்கிறான். தந்தையும் அவனை ஏற்றுக்கொண்டுவிடுகிறார். ஆனால், ராமநாதன் தந்தையின் கஷ்டங்களைப் புரிந்துகொள்ளவே இல்லை. அவன் தந்தையை ஒரு குற்றவாளியைப் போல நடத்துகிறான். சொத்து தனக்கே வேண்டும் எனச் சண்டையிடுகிறான். தந்தையின் அருமையைப் புரிந்துகொண்ட ராமலிங்கம், முடிவில் தந்தையாகவே உருமாறுகிறான். எந்த வீட்டுக்காக அண்ணன் சண்டையிட்டானோ அதை அவனுக்கே கொடுத்துவிடுகிறான். தமிழ்க் குடும்பங்களில் வீட்டுக்கு ஒரு ராமலிங்கத்தைக் காணுவது அபூர்வம். ஆனால், ராமநாதன்கள் எல்லா வீட்டிலும் இருக்கிறார்கள். ராமநாதன்கள் ஒருபோதும் குற்றவுணர்வுகொள்வதே இல்லை.

முத்தையாவின் வாழ்க்கை வழியாகப் படம் காலமாற்றத்தையும் பிரதிபலிக்கிறது. காலமாற்றம் அவர்கள் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப்போடுகிறது என்பது ஒரு கவிதைபோலச் சொல்லப்படுகிறது. தனது வேதனைகளை வெளிக்காட்டிக்கொள்ளாத ராஜ்கிரணின் நடிப்புக்கு இணையாக சரண்யா நடித்திருக்கிறார். பிள்ளைகள் வீடு திரும்பிய நாட்களில் என்ன சமைப்பது என அவர் கேட்டுக் கேட்டுச் செய்வது மறக்க முடியாத காட்சி. சிறிய பார்வையிலே தனது மனதை வெளிப்படுத்திவிடுகிறார் சரண்யா பொன்வண்ணன். அவர் தமிழின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவர் என்பதன் சாட்சியாக உள்ளது இப்படம்.

‘தவமாய் தவமிருந்து’ போல ஒரு படத்தைத்தான் சேரனிடமிருந்து தமிழ்ச் சமூகம் எதிர்பார்க்கிறது. சேரன் அசலான தமிழ்க் கலைஞன். அவரால் இதைவிடவும் மிகச் சிறப்பான படத்தைத் தர முடியும்.

- எஸ்.ராமகிருஷ்ணன், ‘சஞ்சாரம்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writerramki@gmail.com

SCROLL FOR NEXT