செக்கோஸ்லோவேகிய நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் கமில் சுவலபில் ஒருமுறை பாரதிதாசனுக்குக் கடிதம் எழுதினார்; ‘அன்புள்ள மகாகவி’ என்று அதில் பாரதிதாசனை விளிக்கிறார் அவர். சுவலபில் ஆழ்ந்தகன்ற தமிழ்ப் புலமையாளர். ஆங்கிலத்தில் தமிழ் இலக்கிய வரலாற்றை நுட்பமாக வடித்தவர். சர்வதேச அளவிலான விரிந்த வாசிப்பு கொண்டவர். பாரதிதாசன் குறித்த உலகளாவிய அறிஞர் ஒருவரின் மதிப்பீடு என்று நாம் இதைக் கொள்ளலாம். ‘புரட்சிக் கவிஞர்’, ‘பாவேந்தர்’, ‘மகாகவி’ எனத் தமிழுலகில் மூன்று அடைமொழிகளால் குறிக்கப்பட்ட தனிச் சிறப்புக்கு உரியவர் பாரதிதாசன். மகாகவி பாரதியால் ‘புலவன்’, ‘தீரன்’ எனப் பாராட்டப்பட்டவர். ‘சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற கவிஞர்’ என்று பெரியாரால் போற்றப்பட்டவர். பாரதி, பெரியார் என்னும் தமிழ்ச் சமூகத்தின் இருபெரும் ஆளுமைகளால் உருப்பெற்றவர் பாரதிதாசன் என்றாலும், திராவிட இயக்கத்தின் கவிமுகம் என்று அவரை உறுதியாகக் கூறிட முடியும்.
சுயமரியாதை இயக்க, திராவிட இயக்க, தமிழ்த் தேசியத் தனிப்பெரும் கவிஞராக அவர் முதன்மை நிலையில் திகழ்கிறபோதிலும் வாழ்வின் தொடக்கக் காலத்தில் இந்திய விடுதலைக்காகச் செயல்பட்டவர். ஒத்துழையாமை இயக்கக் காலத்தில் இருபது இலக்கியக் குறும்படைப்புகளை எழுதினார். ‘கதர் ராட்டினப் பாட்டு’, ‘சிறுவர் சிறுமியர் தேசிய கீதம்’ என்னும் இரு நூல்கள் மட்டுமே இன்று கிடைத்துள்ளன. அதேபோல, வாழ்வின் இறுதிக்கட்டத்தில் சீனப் படையெடுப்பின்போது, பாரதம் என்னும் உணர்வில் பல பாடல்களை அவர் தீட்டினார். ‘இமயச் சாரலில் ஒருவன் இருமினால், குமரி வாழ்வான் மருந்து கொண்டோடினான் என்னும் நிலை’ ஏற்படப் பாடிய அவர் கவிதை அவரின் முத்திரைக் கவிதைகளுள் ஒன்று.
தமிழகத்தில் அரசியல் பார்வைக்கு அப்பாற்பட்டு அவர் காலத்து அரசியல் ஆளுமைகள் அவர் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார்கள். காங்கிரஸ் இயக்க முதல்வர்களான குமாரசாமி ராஜாவும் காமராஜரும் அவர் மீது பெரும் ஈடுபாடு கொண்டவர்கள். அறிஞர் அண்ணா அவர் வாழ்ந்த நூற்றாண்டின் இரு பெரும் கவிஞர்களில் ஒருவராகவே பாரதிதாசனைக் கொண்டாடினார்; இன்னொருவர் பாரதி. முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி இளம் பருவத்தில் ‘கவிப்பெரியார் பாரதிதாசனுக்கு’ என எழுதிய கடிதம் இளமைக் காலம் தொட்டே அவருக்கு பாரதிதாசன் மீதிருந்த பெருமதிப்பையும், எம்ஜிஆர் தன்னுடைய ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தைக் கடுமையாக விமர்சித்ததையும் பொருட்படுத்தாமல் பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகத்தை உருவாக்கியது எல்லைகளுக்கு அப்பாற்பட்ட அவருடைய மரியாதையையும் வெளிப்படுத்தும் சின்னங்கள்.
பாரதிதாசன் படைத்த ‘தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு’ (1930) தமிழ்ப் பெருங்கவிஞர் ஒருவரின் சமத்துவத்துக்கான பெரும் விழைவு என்று சொல்லலாம். ஒடுக்கப்பட்டோர் தலைவராகிய நோயேல் பொருட்செலவு செய்து இந்நூலை வெளியிட, தன்னை, ‘பகுத்தறிவு நிலைக்கு மாற்றம் பெற்ற ஒரு வடநாட்டுப் பார்ப்பனர்’ எனக் குறித்துக்கொண்ட காசி. ஈ.லக்ஷ்மண் பிரசாத், அ.ஜெகந்நாத நாயுடு, க.இராமகிருஷ்ணநாயகர் ஆகியோர் அணிந்துரை, வாழ்த்துரைகளோடு, பல சமூகக் கூட்டு முயற்சியாக வெளியிடப்பட்ட நூல் அது.
பாரதிதாசன் படைத்த ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’, ‘புரட்சிக்கவி’, ‘சுயமரியாதைச் சுடர்’ ஆகியவை சுயமரியாதை இயக்கக் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த படைப்புகளாகும். தமிழ் உணர்வு நோக்கில் ‘தமிழியக்கம்’, கவித்துவ நோக்கில் ‘அழகின் சிரிப்பு’, புதுமுறைக் காப்பியம் என்னும் நிலையில் ‘குடும்ப விளக்கு’ (குறிப்பாக, முதியோர் காதல்), யாப்பு நோக்கில் ‘மணிமேகலை வெண்பா’, ‘பாண்டியன் பரிசு’ எனத் தமிழ்க் கவிதையுலகில் பல்பரிமாணங்களில் இலக்கியங்களைப் படைத்தவர் அவர். 1938-ல் வெளிவந்த பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதி தமிழ்க் கவிதை வரலாற்றில் புதிய மரபைத் தோற்றுவித்தது. பாரதிதாசன் பரம்பரை என்றே ஒரு கவிஞர் பரம்பரை தோன்றியது. அவருடைய படைப்புகளால் புதுமைப்பித்தன் ஈர்க்கப்பட்டார். கு.ப.ரா. தம்மை ‘பாரதிதாசனின் பக்தன்’ என்றே அழைத்துக்கொண்டார். சுயமரியாதை இயக்க இதழ்களான ‘குடிஅரசு’, ‘நகரதூதன்’ ஆகியவற்றில் மட்டுமல்லாமல், நவீன இலக்கிய வரலாற்றின் தொடக்கப் புள்ளிகளுள் ஒன்றாகிய ‘மணிக்கொடி’யிலும் அவர் தொடர்ந்து கவிதைகள் எழுதினார்.
வல்லிக்கண்ணன் ஒருமுறை குறிப்பிட்டதைப் போல இதழியல் துறையிலே ஒரு புரட்சியை, ஒரு சோதனை முயற்சியை, ஒரு சாதனை முயற்சியைப் பாரதிதாசன் நடத்திக்காட்டினார். தமிழ்க் கவிதைக்காகவே முதன்முதலாக ஒரு இதழை 1935-ல் ஆசிரியராக இருந்து கொண்டுவந்தார் பாரதிதாசன். பாரதியின் நினைவைப் போற்றும் வகையில் வெளிவந்த அந்த இதழின் பெயர் ‘ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம்’. பின்னாளில் அவர் நடத்திய ‘குயில்’ இதழும் தமிழ்க் கவிதை வரலாற்றிலும் இதழியல் வரலாற்றிலும் குறிப்பிடத்தக்கது.
பாரதிதாசனின் வரிகள் பல முத்திரைச் சொற்சொடராகத் தமிழ்ச் சமூகத்தில் கலந்தன. ‘தமிழுக்கு அமுதென்று பேர்’, ‘கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே’, ‘இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே’, ‘கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரில் பழுத்த பலா’, ‘புதியதோர் உலகம் செய்வோம்’...
தமிழ், தமிழினம், தமிழ்நாடு, பகுத்தறிவு, சமூக சீர்திருத்தம் என்றெல்லாம் இயங்கிய அவர், தமிழ் நிலத்தின் பெரும் கவிஞர் மட்டுமல்லர்; இந்திய அளவில் தாகூர், நஜ்ருல், குமாரன் ஆசான் ஆகியோருடனும், உலக அளவில் வால்ட் விட்மன், ஷெல்லி, கீட்ஸ், வோர்ட்ஸ்வர்த் ஆகியோருடனும் ஒவ்வொரு நிலையில் இணைத்து எண்ணத்தக்கவராவார். உலகளவில் ஜப்பானில் குண்டு வீசப்பட்டது, வியட்நாம் போர், ஹிட்லரின் ஆதிக்கவெறி ஆகியவற்றுக்கு எதிராகவும், பாரீஸ் விடுதலைக்கு ஆதரவாகவும் குரல்கொடுத்தவர் பாரதிதாசன். குடும்பக் கட்டுப்பாடு குறித்துத் தமிழில் தோன்றிய முதல் கவிதை அவர் எழுதியதாகும். எத்தனையோ முதல்களுக்குச் சொந்தக்காரர் அவர். குறுகிய எண்ணங்களுக்கு எதிரானவர் அவர். ‘தொல் உலக மக்களெல்லாம் ஒன்றே என்னும் தூயவுள்ளம் தாயுள்ளம்’ படைத்தவர். கவிதைப் படைப்போடு சிறுகதை, நாடகம், சொற்பொழிவு, திரைப்பாடல், திரைப்பட வசனம், சொல்லாராய்ச்சி, உரை, இதழியல், அரசியல் எனப் பலபல பரிமாணங்களில் இயங்கிய பாரதிதாசன் ‘மானுடச் சமுத்திரம் நான்’ என்றே தன்னைக் குறிப்பிட்டார்; அவ்வாறே செயல்பட்டார்.
கடவுள் நம்பிக்கை அற்ற பாரதிதாசன், ஒருமுறை வியப்பளிக்கும் வகையில் ‘கடவுளைக் கண்டீர்’ என்னும் தலைப்பில் கவிதையொன்றைப் படைத்திருந்தார். அக்கவிதையில் ஒரு சிறுவனைப் பாம்பு தீண்டிவிடுகிறது. அதை அறிந்த ஒரு மருத்துவனும் அவன் மனைவி மருத்துவச்சியும் படாதபாடுபட்டு மலை மேல் இருந்த பச்சிலையைக் கொணர்ந்து, சிறுவனைப் பிழைக்க வைக்கின்றனர். அம்மருத்துவர்களின் ஊருக்கு உழைக்கும் உணர்வையே கடவுள் எனக் காட்டியிருப்பார் பாரதிதாசன். அந்தக் கவிதையை இன்றைய சூழலுக்கும் பொருத்திப் பார்க்கலாம். இன்று உலகம் என்னும் சிறுவனைக் கரோனா எனும் தீநுண்மிப் பாம்பு தீண்டியிருக்கிறது. உயிர்காக்கும் பணியில் மருத்துவர்கள் முன்னணியில் நிற்கின்றனர். கரோனா பாதிப்பிலிருந்து உலகைக் காக்கக் களத்தில் நின்று பாடுபடும் மருத்துவர், தூய்மைப் பணியாளர் , காவலர், இதழியலாளர் உள்ளிட்ட அனைவரின் தொண்டுணர்வும் பாரதிதாசன் மொழியில் சொன்னால் கடவுள்தான். இந்தக் கடவுள்தன்மையை வணங்குவோம்!
- ய.மணிகண்டன், பேராசிரியர் & தலைவர், தமிழ் மொழித் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.
தொடர்புக்கு: v.y.manikandan@gmail.com
ஏப்ரல் 29: பாரதிதாசன் பிறந்த நாள்