இலக்கியம்

வெண்ணிற நினைவுகள்- சினிமாக் கனவு

திருவனந்தபுரம் எஸ்.ராமகிருஷ்ணன்

அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ நாவல் தமிழ் சினிமாவின் மறுபக்கத்தைக் காட்டக்கூடியது. பகட்டான வெளிச்சத்தில் தெரியும் சினிமாவின் மறுபக்கத்தில் எப்படி இருளும் குழப்பங்களும் நிரம்பியிருக்கின்றன என்பதை அசோகமித்திரன் அழகாக விவரித்திருப்பார். அவர் ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றியவர் என்பதால் சினிமா தயாரிப்போடு நேரடியான அனுபவம் கொண்டிருந்தார். ஆகவே, மிக யதார்த்தமாக நாவலை எழுத முடிந்திருக்கிறது. சினிமா எடுப்பதைப் பற்றியும், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் உலக அளவில் நிறையப் படங்கள் வந்துள்ளன. தமிழிலும் அது போன்ற வகைமைப் படங்கள் உள்ளன.

பாரதிராஜாவின் ‘கல்லுக்குள் ஈரம்’ திரைப்படம் வெளிப்புறப் படப்பிடிப்பின்போது ஏற்படும் அனுபவங்களை அழகாகச் சித்தரிக்கக்கூடியது. இதுபோலவே ‘ஏணிப்படிகள்’ படம் திரையரங்கில் பணியாற்றும் ஏழைப் பெண் எப்படித் திரை நட்சத்திரமாக மாறுகிறாள் என்பதை விவரிக்கிறது. இந்த வகைத் திரைப்படங்களுக்கு முன்னோடியாக ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படத்தைச் சொல்வேன். ஏவிஎம் தயாரிப்பில் கிருஷ்ணன் - பஞ்சு இயக்கிய ‘சர்வர் சுந்தரம்’ 1964-ல் வெளிவந்தது. கே.பாலச்சந்தர் எழுதிய நாடகத்தை ஏவிஎம் திரைப்படமாக எடுத்தது. படத்தின் இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி. சிறப்பான பாடல்கள். அதிலும், ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ பாடல் பதிவில் எம்.எஸ்.விஸ்வநாதன், டி.எம்.சவுந்தரராஜன் பங்கேற்கும் காட்சி மறக்க முடியாத அரிய பதிவு.

இந்தப் படம் வெளியாகும் வரை ஸ்டுடியோவினுள் எப்படி ஒரு காட்சி படமாக்கப்படுகிறது, காதல் காட்சிகளை, சண்டைக் காட்சிகளை எவ்வாறு எடுக்கிறார்கள், நடிகர் நடிகையர்களுக்கு எப்படி மேக்கப் போடப்படுகிறது, தந்திரக் காட்சிகள் எவ்வாறு படமாக்கப்படுகின்றன என்று எதுவும் தெரியாது. ‘சர்வர் சுந்தரம்’ முதன்முறையாக இதை விரிவாகக் காட்சிப்படுத்திக் காட்டியுள்ளது.

அந்தக் காலத்தில் சினிமா பார்வையாளர்கள் இரட்டை வேடத்தில் நடிக்கும் திரைப்படங்களில் ஒருவரே எப்படி இரு வேஷங்களில் ஒரே காட்சியில் தோன்றுகிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள். ஏன் இன்றும்கூட ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் குள்ள அப்புவாக கமல் எப்படி நடித்தார் என்று வியந்து கேட்பவர்கள் இருக்கிறார்கள். இந்த விந்தைதான் சினிமாவை இன்றும் மாய உலகமாக நினைக்க வைக்கிறது. பாலுமகேந்திரா சிறு வயதில் இலங்கையில் நடைபெற்ற ஹாலிவுட் இயக்குனர் டேவிட் லீனின் படப்பிடிப்பைக் காணச் சென்றார். அப்போது படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் மழை பெய்யட்டும் என்றவுடன் வானிலிருந்து மழை பெய்யத் தொடங்கியது. கடவுளைப் போல அவர் மழை பெய்யக் கட்டளையிடுவதாக உணர்ந்தேன் என்று பாலுமகேந்திரா குறிப்பிடுகிறார். அதுதான் சினிமாவின் மாயம்.

அந்த மாயம் எத்தனையோ மனிதர்களின் வாழ்க்கையை ஒளிரச் செய்திருக்கிறது. அதேநேரம், இதன் பின்னால் எத்தனையோ மனிதர்கள் காணாமலும் போயிருக்கிறார்கள். ஒரேயொரு படத்தில் நடித்துக் காணாமல் போனவர்கள், நடிக்க வாய்ப்பே வராமல் போனவர்கள், இயக்குநர் ஆக வேண்டும் எனக் கனவில் வந்து பல ஆண்டுகள் முயன்று தோற்றுப்போனவர்கள், திரைப்படம் எடுத்து வீடுவாசல் இழந்தவர்கள் எனச் சினிமா உலகுக்குப் பின்னால் ஓராயிரம் கதைகள் இருக்கின்றன. நாகேஷ் நடிகராக மாறியதற்குப் பட்ட கஷ்டங்களும் இந்தப் படத்தின் கதை போன்றதே. முகத்தில் அம்மைத் தழும்பு கொண்டவர் என்பதால் சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் நாகேஷை அவமானப்படுத்தி விரட்டின. ஆனால், தனது விடாமுயற்சியாலும் நல்ல நட்பாலும் அவர் தன்னை மிகச் சிறந்த நடிகராக நிரூபித்துக்காட்டினார். அதன் பிரதிபலிப்பு போன்றே ‘சர்வர் சுந்தரம்’ உருவாக்கப்பட்டிருக்கிறது. நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வரும் சுந்தரம் கிரீன் லேண்ட்ஸ் ஹோட்டலில் சர்வராக வேலை செய்கிறார். ஹோட்டலில் அவர் காபி டம்ளர்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி சர்க்கஸ்போல கொண்டுவருவதும், வாடிக்கையாளர்களிடம் கேலியாகப் பேசுவதும் மிகுந்த வேடிக்கையான காட்சி.

அந்த ஹோட்டல் உரிமையாளரின் மகள் ராதாவுக்கு சுந்தரத்தைப் பிடித்துப்போகிறது. நட்பாகப் பழகுகிறாள். அதைக் காதல் எனத் தவறாக எடுத்துக்கொள்கிறான் சுந்தரம். ஒருநாள் ஹோட்டலில் தற்செயலாகச் சந்தித்த நண்பன் ராகவன் உதவியில் சினிமாவில் நடிக்க ஆரம்பிக்கிறான். புஷ்பா புரொடெக்சன்ஸ் அலுவலகத்தில் நாகேஷ் நடித்துக்காட்டும் காட்சி அபாரம். ‘அப்பாவிக் கணவன்’ என்ற படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் மனோரமாவும் சுந்தரமும் சேர்ந்து நடிக்கும் காட்சியை ரங்காராவ் இயக்குகிறார். குனிந்து வீடு கூட்டும் காட்சியில் ஸ்டைலாக மனோரமா துடைப்பத்தை வீசுவதும், அருகில் நின்ற நாகேஷ் அதைக் கண்டு அதிர்ச்சி அடைவதும், நடிகை தொண்டையைச் செருமியதும் ஆப்பிள் ஜுஸ் கொண்டுவர ஆட்கள் ஓடுவதும் நல்ல வேடிக்கை. பிரபலமான நடிகர், நடிகையின் விருப்பத்துக்கு ஏற்பதான் திரையுலகம் இயங்குகிறது. இதில் எந்த மாற்றமும் இன்றும் உருவாகவில்லை. குதிரையில் துரத்திச் செல்லும் காட்சியை எப்படிப் பொம்மைக் குதிரையை வைத்துப் படமாக்கு கிறார்கள் என்பதிலிருந்து மழை, புயல் போன்ற காட்சிகள் எப்படி எடுக்கப்படுகின்றன என்பது வரை இப்படத்தில் நிஜமாகக் காட்டுகிறார்கள்.

பணமும் புகழும் வந்த பிறகு சுந்தரத்தின் வாழ்க்கை மாறிவிடுகிறது. தொடர்ந்து படப்பிடிப்பிலே பிஸியாக இருக்கிறார். ஒரு ஸ்டுடியோவிலிருந்து இன்னொரு ஸ்டுடியோ என ஒடுகிறார். அதுதான் பிரபல நடிகர்களின் வாழ்க்கை. கிடைத்த நேரத்தில் சம்பாதிக்க வேண்டும் என்பதே சினிமாவின் எழுதப்படாத விதி. இத்தனை புகழுக்கும் இடையில் தனது பழைய சர்வர் வாழ்க்கையை மறக்காமல் அந்த உடையைத் தனியே பாதுகாத்து வைத்திருப்பார் நாகேஷ். அற்புதமான காட்சியது. திரையுலகில் வெற்றி பெற்ற சுந்தரம் தனது காதலில் தோற்றுவிடுகிறான். தான் காதலித்த ராதாவிடம் அவள் ராகவனுக்குத்தான் பொருத்தமானவள் என்று பேசும் காட்சியில் நாகேஷ் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். சாமானிய மனிதனாக இருந்த சுந்தரத்தை சினிமா எவ்வளவு கற்றுத்தந்து மேம்படுத்தியிருக்கிறது என்பது அவரது பேச்சில் வெளிப்படுகிறது.

இன்று சினிமா எவ்வளவோ தொழில்நுட்ப அளவிலும் தயாரிப்பிலும் மேம்பட்டிருக்கிறது. ஆனால், இன்றும் ஒரு புதுமுக நடிகர் வாய்ப்பு தேடி அலைவதிலும் புதிய இயக்குனர் உருவாவதிலும் அதே துரத்தல், அதே அவமானம்தான் நீடிக்கிறது. அந்த வகையில் ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படமானது சினிமாவைப் பற்றிய மாறாத உண்மையை முன்வைக்கிறது.

- எஸ்.ராமகிருஷ்ணன், ‘சஞ்சாரம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: writerramki@gmail.com

SCROLL FOR NEXT