இலக்கியம்

வெண்ணிற நினைவுகள்- காளியின் கோபம்

திருவனந்தபுரம் எஸ்.ராமகிருஷ்ணன்

‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தில் மீனை ஷோபா நறுக்கிக்கொண்டிருக்கும்போது பக்கத்தில் உட்கார்ந்து சப்புக்கொட்டியபடியே பார்த்துக்கொண்டிருப்பார் படாபட் ஜெயலட்சுமி. பக்கத்தில் அவரது அம்மா உட்கார்ந்திருப்பார். இந்தக் காட்சியைக் காணும்போதெல்லாம் மனதில் எழுத்தாளர் கு.அழகிரிசாமி எழுதிய ‘திரிபுரம்’ சிறுகதைதான் நினைவுக்கு வந்துபோகிறது. அக்கதையில் பஞ்சம் பிழைப்பதற்காக ஒரு அம்மாவும் பெண்ணும் சாத்தூருக்கு வருவார்கள். பசி பொறுக்க முடியாமல் மகள் மண்ணில் விழுந்துகிடந்த ஒரு வெள்ளரிக்காயை எடுத்துச் சாப்பிடுவாள். திக்கற்ற தங்களின் வாழ்க்கைக்கு என்ன விடிவு எனப் புரியாமல் அம்மா ஒரு முடிவு எடுப்பாள். அந்தக் கதைக்கும் ‘முள்ளும் மலரும்’ படத்துக்கும் நேரடியாக ஒரு தொடர்பும் கிடையாது. ஆனால், இலக்கியம் தரும் மன எழுச்சியைத் திரையில் தர முடியும் என்பதற்கு உதாரணமாக ‘முள்ளும் மலரும்’ காட்சி விளங்குகிறது.

‘முள்ளும் மலரும்’ - தமிழ் சினிமா வரலாற்றில் தனியிடம் பிடித்த திரைப்படம். எத்தனை முறை பார்த்தாலும் அது தரும் பரவசம் குறையவே இல்லை. இயக்குனர் மகேந்திரன் தமிழ்த் திரையுலகின் ஒப்பற்ற இயக்குனர். உமா சந்திரன் எழுதிய ‘முள்ளும் மலரும்’ நாவல் 1967-ல் ‘கல்கி’ வெள்ளி விழாப் போட்டியில் முதல் பரிசு பெற்றது. நாவலின் மையச்சரடை வைத்துக்கொண்டு புதியதொரு திரைக்கதையை மகேந்திரன் உருவாக்கியிருக்கிறார். எளிமையும் யதார்த்தமும் கொண்ட திரைக்கதைக்கு ‘முள்ளும் மலரும்’ ஒரு சான்று.

தமிழ்நாட்டில் மின்வாரியத் துறையின் கட்டுப்பாட்டில் ஒன்றிரண்டு வின்ச்கள் செயல்பட்டுவருகின்றன. அவற்றைப் பொதுமக்கள் பயன்படுத்த முடியாது. மோயர் பவர் ஹவுஸ் என்பது நீலகிரியில் அமைந்துள்ள ஒரு நீர் மின்நிலையமாகும். இங்கே ஒரு வின்ச் செயல்படுகிறது. வின்ச் ஆப்பரேட்டர் பற்றி எடுக்கப்பட்ட ஒரே தமிழ் படம் ‘முள்ளும் மலரும்’தான்.

படத்தின் தொடக்கக் காட்சிதான் முழுப் படத்துக்குமான அடித்தளம். கழைக்கூத்தாடி உயர்த்திப் பிடித்துள்ள கம்பின் உச்சியில் காளியின் தங்கை படுத்திருக்கிறாள். காசு தராவிட்டால் அவளைக் கீழே போட்டுவிடுவேன் என்று பார்வையாளர்களைப் பார்த்துச் சொல்கிறான் கழைக்கூத்தாடி. ஆட்கள் சில்லறைகளைப் போடுகிறார்கள். வள்ளி மேலேயிருந்து கிழே விழுகிறாள். அவளைப் பாதுகாப்பாகப் பிடித்துக்கொள்கிறான் . அந்தக் காட்சியில் காளியின் முகத்தில் தெரியும் கவலையும் பயமும் தங்கையின் மீது அவன் கொண்டுள்ள பாசத்தின் அடையாளம். அதுபோலவே காரில் இருந்த சிறுவர்கள் தன் தங்கையிடம் பிஸ்கட் தருவதாகச் சொல்லி ஆசை காட்டி விளையாடுவதைக் கண்ட காளி கோபம் கொள்கிறான். சாலையில் காளியும் அவன் தங்கையும் நிற்கும் காட்சியில் காளி முகத்தில் வெளிப்படும் கோபம் அசலானது. அதுதான் அவனது கதாபாத்திரத்தின் அடிப்படை உணர்ச்சி.

படம் முழுவதும் காளி கோபப்பட்டுக்கொண்டே இருக்கிறான். நிராகரிப்பும் அவமானமும் ஏற்படுத்திய கோபமது. அதுதான் காரின் முகப்பு விளக்கை உடைக்க வைக்கிறது. காளி பக்கம் நியாயம் இருக்கிறது. ஆனால், சூழ்நிலை காளியை மோசமான மனிதனைப் போல தோன்றச் செய்கிறது. தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதே படத்தின் மையப்புள்ளி. இந்த விஷயத்தைப் படத்தின் ஆரம்பத்திலே மகேந்திரன் அழகாக விளக்கிவிடுகிறார்.

சுயகௌரவம் கொண்ட மனிதனாகவே காளி சித்தரிக்கப்படுகிறான். தன்னை சரியாகப் புரிந்துகொண்டவர்களை காளி நேசிக்கிறான். அன்பு செலுத்துகிறான். சந்தோஷமோ கோபமோ இரண்டிலும் அதன் உச்சத்துக்குப் போய்விடுகிறான் காளி. அவன் யாருடைய அதிகாரத்துக்கும் கட்டுப்பட்டவனில்லை. இன்ஜினியர் செய்வதில் தவறில்லை. ஆனால், அதற்கு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்று காளி நினைக்கிறான். அதை அவரது முகத்துக்கு நேராகவே சொல்கிறான்.

ரஜினியின் திரைவரலாற்றில் இப்படம் ஒரு மைல்கல். எத்தனை அபாரமான நடிப்பு. கண் பார்வையிலே அவர் காட்டும் உணர்ச்சிகள் அற்புதமானவை. படத்தில் கோபம், பாசம், காதல் என அவரது உணர்ச்சி வெளிப்பாட்டுக்கு ஏற்ப அவரது உடல்மொழியும் மாறுபடுகிறது. குறிப்பாக, ஒரு கையை இழந்த பிறகு அவரது நடை மற்றும் பேசும் முறை மாறிவிடுகிறது. இறுதிக் காட்சியில் அவர் தங்கையின் முடிவை எதிர்பார்த்து நிற்கும் விதமும், உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்து வெளிப்படுத்தும் பாங்கும் நடிப்பின் உச்சம் என்றே சொல்வேன். ஷோபாவின் இயல்பான நடிப்பு எத்தனை அழகானது. அதுதான் படத்தின் ஆதார பலம்.

அதுபோலவே, இளையராஜாவின் உன்னதமான இசை, பாலுமகேந்திராவின் நிகரற்ற ஒளிப்பதிவு, படாபட் ஜெயலட்சுமி, சரத்பாபுவின் சிறப்பான நடிப்பு எனப் படம் தேர்ந்த கலைப் படைப்பாக உள்ளது. படத்தின் வசனங்கள் அலங்காரமற்றவை. ஆனால், அழுத்தமாக மனதில் பதியக்கூடியவை. ‘கெட்ட பய சார் இந்தக் காளி’ என்ற வசனம் இன்றும் மக்கள் மத்தியில் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.

‘பாசமலர்’, ‘முள்ளும் மலரும்’, ‘கிழக்குச் சீமையிலே’போல அண்ணன் தங்கை பாசத்தை முன்னிலைப்படுத்திய படங்கள் தமிழில் எப்போதும் ஓடக்கூடியவை. கையாளும் விதம் மூலம் ஒரே கதைக்கருவைத் தனித்துவமிக்கப் படைப்பாக மாற்ற முடியும் என்பதற்கு இந்தப் படங்களே சாட்சி.

‘செந்தாழம் பூவில்’ பாடலை ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா படமாக்கியுள்ள விதம் இன்றும் பின்பற்றப்பட்டும் முன்னோடிக் காட்சியமைப்பாகும். ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ பாடலில் ஆவேசத்துடன் காளி ஆடுகிறான். அது அவனது அடக்கி வைக்கப்பட்ட கோபத்தின் வெளிப்பாடு. பாடலை மிக அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள்.

விபத்தில் கை போன பிறகு ஊருக்கு வரும் காளி தன் தங்கையிடம் அதை எப்படிச் சொல்வது என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருப்பான். ஒரு கையை இழந்துவிட்டான் என்ற உண்மையை அறிந்துகொண்ட வள்ளி அதிர்ச்சியாகி கண்ணீர் சிந்துவாள். அந்தக் காட்சியில் அழுது புலம்பி கண்ணீர் விட்டு பார்வையாளர்களின் உணர்ச்சியோடு விளையாட முடியும். ஆனால், ‘ஒண்ணுமில்லைடா’ என அழுத்தமான சொல்லோடு அழகாக முடித்துவிடுகிறார் இயக்குனர். அதுதான் இயக்குனரின் தனித்துவம். மகேந்திரன் படங்களில் சிறிய கதாபாத்திரங்கள் முழுமையாக, அசலாக உருவாக்கப்பட்டிருப்பார்கள். இப்படத்தில் சாமிக்கண்ணு, வெண்ணிற ஆடை மூர்த்தி போன்ற கதாபாத்திரங்கள் அதற்குச் சான்று.

‘முள்ளும் மலரும்’ மகேந்திரனின் முதல்படம். எதுபோல முதற்படம் உருவாக்க வேண்டும் என நினைக்கும் இளம் இயக்குனர்களுக்கு இதுவே வழிகாட்டும் படம் என்பேன்.

- எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: writerramki@gmail.com

SCROLL FOR NEXT