கதை சொல்கிறார் டோலி பார்டன்
எல்லோரும் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் கரோனா காலத்தில் குழந்தைகளுக்காகப் பிரபலங்கள் கதை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். இசைக் கலைஞர் டோலி பார்டன் ஒவ்வொரு வாரமும் யூட்யூப் வழியாகக் கதை சொல்கிறார். இந்தக் கதைத் தொடருக்கு ‘குட்நைட் வித் டோலி’ என்று பெயர். “சஞ்சலமான இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளைக் கதைகளின் பக்கம் திருப்புவதற்காகவும், புத்தக வாசிப்பு மீது அவர்களுக்கு ஆர்வம் வரவைப்பதற்காகவும்தான் கதை சொல்லத் திட்டமிட்டேன்” என்கிறார் டோலி.
ஏன் பலரும் கொள்ளைநோய் தொடர்பான புத்தகங்கள் வாசிக்கிறார்கள்?
கரோனா, அதைத் தொடர்ந்து ஊரடங்கு, அதனால் உருவாகும் வெற்றிடம், அதை நிரப்புவதற்குப் புத்தக வாசிப்பு. உலகம் முழுவதும் இதைத்தான் பின்பற்றுகிறது. இந்தக் காலகட்டத்தில் கொள்ளைநோய் தொடர்பான புத்தகங்களை அதிகம் வாசிக்கிறார்களாம். ஆல்பெர் காம்யுவின் ‘பிளேக்’ நாவலின் விற்பனை எகிறியிருக்கிறது. காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் ‘லவ் இன் தி டைம் ஆஃப் காலரா’வும் அதிகமானவர்களால் விரும்பி வாசிக்கப்படுகிறது. ஜொவான்னி பொக்காச்சோவின் ‘டெக்கமரான்’, சரமாகோவின் ‘பிளைண்ட்னெஸ்’ நூல்களையும் நிறைய பேர் வாசிக்கிறார்கள். நம் ஊரில் இதோடு சேர்த்து யூ.ஆர்.அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’ நாவல் அதிகம் வாசிக்கப்படுகிறது. ஏற்கெனவே வாசித்தவர்களும் மீள்வாசிப்பு செய்கிறார்கள். என்ன காரணம்? ஒன்று, கொள்ளைநோயைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். அடுத்ததாக, கொள்ளைநோயை ஒரு சமூகம் எப்படியெல்லாம் எதிர்கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக வாசிக்கிறார்கள். நமக்கு ஏற்பட்ட இந்த அனுபவமானது கடந்த கால இடர்களை வேறொரு கண் கொண்டு பார்க்க உதவுகிறது என்பது பல்வேறு வாசகர்களின் எண்ணமாக இருக்கிறது. நீங்கள் என்ன வாசிக்கிறீர்கள்?