தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கொடுத்த ஒரு கோடி நிதியில் அவர் பெயராலேயே அறக்கட்டளையைத் தொடங்கி ஆண்டுதோறும் தமிழறிஞர்களுக்கு பொற்கிழி விருதுகளை வழங்கிவருகிறது தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி).
இந்த ஆண்டுக்கான பொற்கிழி விருதுக்கு பொன்னீலன் (நாவல்), அறிவுமதி (கவிதை), ஆர்.பாலகிருஷ்ணன் (ஆங்கிலம்), அ.மங்கை (நாடகம்), சித்தலிங்கையா (பிற இந்திய மொழி எழுத்தாளர்), ந.முருகேசபாண்டியன் (உரைநடை) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். உலக புத்தக தினமான ஏப்ரல் 23 அன்று விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.
தொடரும் திலீப் சங்வியின் வாசிப்புப் பயணம்
நாட்டிலேயே பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான திலீப் சங்விக்கு ஒரு அற்புதமான பழக்கம் இருக்கிறது. அவருக்குப் புத்தக வாசிப்பில் அலாதி ஆர்வம். இளம் வயதில் பழைய புத்தகக் கடைக்குச் சென்று 50 பைசா கொடுத்து புத்தகம் வாங்கிப்படிப்பார். படித்து முடித்ததும் அதை அங்கேயே விற்றுவிட்டு இன்னொரு புத்தகம் வாங்கிவருவார்.
கொல்கத்தாவில் மின்தடை வந்தால் எங்காவது டார்ச் லைட் வெளிச்சம் தெரிந்தால் அங்கே திலீப் புத்தகம் படிக்கிறார் என்று வீட்டார் கிண்டல் அடிப்பார்களாம். அப்படிப் புத்தகப் பிரியராக வலம்வந்துகொண்டிருந்தார். பின்னாளில், ஹாரிபாட்டர் ரசிகரானார். தனக்குப் பிடித்த துறைகள் தொடர்பான எல்லா புத்தகங்களையும் முழு ஈடுபாட்டுடன் படிப்பவர் அவர். வகுப்பில் மதிப்பெண் பெறுவதில் சராசரி மாணவர்தான். ஆனால், அவர் எழுந்து கேள்விகள் கேட்டால் வகுப்பறையே ஸ்தம்பித்துப்போய்விடுமாம். இன்றைக்கும் அந்த ஆர்வம் தொடர்கிறது என்பதுதான் ஆச்சரியம். ‘வாசிப்பு இல்லாவிட்டால் நான் இல்லை’ என்கிறார் சங்வி.
சங்கரன்கோவில், அம்பத்தூரில் புத்தகக்காட்சி
சங்கரன்கோவில் குருசாமி கோகுலம் மஹாலில் மார்ச் 22 வரை புத்தகக்காட்சி நடக்கிறது. சென்னை அம்பத்தூரிலுள்ள திருமால் திருமண மண்டபத்தில் மார்ச் 29 வரை புத்தகக்காட்சி நடக்கிறது. அனைத்து நூல்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு.