ஆங்கிலத்தின் வாயிலாகவே தமிழில் நாவல் வடிவம் அறிமுகமானது. ஆனால், தமிழ் நாவல்கள் பற்றிய விமர்சனங்களில் மேலை இலக்கியக் கோட்பாடுகளையெல்லாம் பொதுவாகக் கவனத்தில் கொள்வதில்லை. ரசனை அடிப்படையே நாவல்களின் தரம், குணம் யாவற்றையும் தீர்மானிக்கிறது.
தமிழ்-ஆங்கில இலக்கிய ஒப்பீட்டு ஆய்வு முன்னோடிகளில் ஒருவரான ப.மருதநாயகத்தின் இந்த நூல், ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ தொடங்கி தற்காலம் வரையில் தமிழின் குறிப்பிடத்தக்க நாவல் படைப்புகளை மேலை இலக்கியக் கோட்பாடுகளின் பார்வையில் திறானாய்வு செய்யும் முயற்சி.
இரண்டு பகுதிகள் இதுவரை வெளிவந்திருக்கின்றன. முதல் பகுதியில் பாரதியார், ராஜமய்யர், மாதவையா, க.நா.சு, தி.ஜானகிராமன், கல்கி, அகிலன் முதலான முக்கியப் படைப்பாளிகளின் 14 படைப்புகள் திறனாய்வு செய்யப்பட்டுள்ளன. நாவல்களின் குறைநிறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவை எழுதப்பட்ட காலத்தின் சமூக, அரசியல் நிலைகளின் சுவடுகளைத் தேடும் முயற்சியாக அமைந்திருக்கிறது இந்த ஆய்வு. இந்நூலில் இடம்பெற்றுள்ள ‘நாவல் இலக்கியம்’ என்ற தலைப்பிலான கட்டுரை, மேலை இலக்கிய விமர்சகர்கள் நாவலின் தனிச்சிறப்புகளாகக் கூறியதையெல்லாம் தொகுத்துத் தந்திருக்கிறது.
மருதநாயகத்துக்குத் தமிழ் நாவல்கள் பற்றி கடுமையான விமர்சனங்கள் இல்லாலும் இல்லை. தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ பற்றித்தான் பெரும்பாலும் பேசப்படுகிறது. அவரது ‘அன்பே ஆரமுதே’, ‘செம்பருத்தி’ இரண்டும் முறையே லட்சியவாதத்துக்கும் எதார்த்ததுக்கும் உதாரணமாக இருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். கூடவே, தி.ஜானகிராமனிடமிருந்து அவரது சமகாலத்தினரும் பின்வந்தவர்களும் கற்றுக்கொள்ள வேண்டியதை, தவறவிட்டுவிட்டதைக் குறித்து தனது வருத்தத்தையும் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறார்.
மேலைநோக்கில் தமிழ் நாவல்கள் - பகுதி 1
ப.மருதநாயகம்
எழிலினி பதிப்பகம்
எழும்பூர், சென்னை-8.
தொடர்புக்கு: 9840696574
விலை: ரூ.350
- புவி
பிரக்ஞையும் தன்மிதப்பும்
இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுதத் தொடங்கிய இளங்கோ கிருஷ்ணன், காத்திரமான கவிஞராகவும் விமர்சகராகவும் விளங்குபவர். கவிதை வாசகர்களிடையே பேசப்பட்ட தொகுதிகளான ‘காயசண்டிகை’, ‘பட்சியன் சரிதம்’ நூல்களை அடுத்து ‘பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும்’ தொகுதியில் கவிதை வெளியீடு சார்ந்த சரளத்தை இளங்கோ கிருஷ்ணன் அநாயசமாக எட்டியுள்ளார். சத்தமான உரையாடலின் தொனியைக் கொண்ட இந்தக் கவிதைகளில் இளங்கோவின் குரல் கேட்கிறது. நகல் குரல்களும் போலிக் குரல்களும் பெருகியுள்ள நவீனக் கவிதைப் பரப்பில் சுயகுரல்களைக் கேட்பது அரிதான அனுபவமாக உள்ளது.
தர்க்கமும் தத்துவமும் அரசியலும் அன்றாட அனுபவங்களோடு மோதும் கவிதைகள் இவருடையவை. இரண்டாயிரம் வருட நீளமுள்ள பறவையான தமிழ்க் கவிதை மரபின் வாலை எழுதிக்கொண்டிருக்கும் பிரக்ஞை கொண்ட கவிஞன் என்ற போதம் இளங்கோவுக்கு இருக்கிறது. இந்தப் பிரக்ஞையும் தன்மிதப்பும் நல்ல கவிதைகள் பலவற்றையும், வெறுமனே தொழில்நுட்பமாகச் சரியும் கவிதைகளையும் சேர்த்தே தந்துள்ளன. ‘செருப்புகள்’, ‘மந்திரம்போல்’, ‘தோழர் புத்தர்’, ‘பச்சை அரவம்’ ஆகிய கவிதைகள் திரும்பத் திரும்ப வாசிப்பதற்கான அனுபவத்தை அளிக்கின்றன.
பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும்
இளங்கோ கிருஷ்ணன்
புது எழுத்து வெளியீடு
அண்ணா நகர், காவேரிப்பட்டினம்.
தொடர்புக்கு: 98426 47101
விலை: ரூ.80
- ஷங்கர்