வேறொரு காலத்தின் மொழி, வாழ்க்கையின் நினைவுகள் தேறல்போல ஏறிய கவிதை உலகம் டி.கண்ணனுடையது. மகத்துவமான ஞாபகங்களைக் கொண்ட ஒரு கோயில் தேர், கோயிலின் மதில் சுவருக்கு வெளியே சோடியம் விளக்கொளியில் உடைந்து கிடப்பதைப் பார்க்கும் உணர்வை இவரது கவிதைகள் ஏற்படுத்துகின்றன. சிறுகதையாசிரியர் மௌனி தன் கதைகளில் எழுப்ப முயன்ற பாழ்பட்ட வசீகரத்தை இவர் தனது இசைமை கூடிய மொழியாலும், பழைய ஞாபகங்கள் தொனிக்கும் சொற்களாலும் உருவாக்குகிறார்.
சமகாலம், இறந்த காலத்தின் நிழல் இருட்டுக்குள் துலக்கிப் பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சிகள் எல்லாம் எப்போதோ இங்கு நடந்தவற்றின் ஞாபகத்தில் புதிதாக நடக்காதவை போன்றுள்ளது. கோயிலும் அரசும் நெருங்கியிருந்த ஆநிரைக்குக் குறைவில்லாத வளமான ஒரு சமூக வாழ்க்கை, காவிரிக் கரையில் தவறாத நியமங்களோடு கழிந்த காலத்தின் சித்திரம் இக்கவிதைகளில் இடம்பெறுகிறது; அது குறித்த ஏக்கமும்.
அக்காலத்தின் பொருள்சார் கலாச்சாரமும் புழங்குமொழியும் தமிழ் நவீனக் கவிதைக்கு வளம் சேர்ப்பவை. நினைவுக்கும் மறதிக்கும் உள்ள யுத்தம்தானே வரலாறு. இசையோடு கதை சொன்ன நினைவைக் கவிதையில் அடைய நினைப்பவர்களுக்கு நாலாயிர திவ்ய பிரபந்தப் பாசுரங்களின் செல்வாக்கோடு கூடிய நவீனக் கவிதை விருந்து இந்தக் கவிதை நூல்.
- ஷங்கர்
என் நினைவிற்கும்...
உன் மறதிக்கும்...
டி.கண்ணன்
யாவரும் பதிப்பகம்
வேளச்சேரி,
சென்னை-42.
தொடர்புக்கு:
90424 61472
விலை: ரூ.80
மதுவின் மயக்கம்
ஃபேஸ்புக் என்பது கேளிக்கை அம்சங்கள் கடந்து பல முக்கியமான பங்களிப்பையும் செய்துவருகிறது. ஃபேஸ்புக் வெறும் அரட்டைக்கான களம் என்பது எல்லோருக்கும் பொருந்தாது. அதன் ஆற்றலை உணர்ந்து பயன்படுத்திக்கொண்டிருப்போரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி, ஃபேஸ்புக்குக்கு வேறு முகத்தைக் கொடுக்கும் செயலாக, சீனிவாசன் நடராஜனின் ஃபேஸ்புக் பதிவுகளைத் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டுவந்திருக்கிறார். இத்தொகுப்பைக் கட்டுரைகள் என்றோ, பத்தி என்றோ கொண்டுவந்திருக்கலாம். ஆனால், ஃபேஸ்புக் பதிவுகள் என்றே கொண்டுவந்திருப்பதன் நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.
ஃபேஸ்புக் பதிவுகள் ஆதாரங்களும் ஆவணங்களும் இல்லாதவை. யாரால் பதிவிடப்படுகிறது என்பதைப் பொறுத்தே அதன் நம்பகத்தன்மை அமைகிறது. இந்த நம்பகத்தன்மையே பிற்காலத்தில் ஆவணமாக மாறும். ஐந்து, பத்தாண்டுகள் கழித்து ஜல்லிக்கட்டு குறித்து ஆய்வுகொள்ள விரும்புபவர்களுக்குப் போராட்ட கால ஃபேஸ்புக் பதிவுகள் ஆதாரமாக மாற வாய்ப்பு உண்டுதானே? இத்தொகுப்பில் எல்லாமும் உண்டு. தான் வாசித்த புத்தகங்கள், தனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் குறித்த பதிவுகள் மிகவும் அவசியமானவை. சமகாலத்தில நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள், அதன் மீதான இவரின் கருத்து, அதற்கு வந்த எதிர்க்கருத்து, அதற்கான பதில் என வெவ்வேறு தளங்களில் பயணிப்பது நல்ல சுவாரஸ்யம்.
- ந.பெரியசாமி
புனைவு
சீனிவாசன் நடராஜன்
தேநீர் பதிப்பகம்
சந்தைக்கோடியூர், ஜோலார்பேட்டை-635851.
தொடர்புக்கு:
90809 09600
விலை: ரூ.120
அச்சுக்கு வந்திருக்கும் அகராதிச் சுவடிகள்
காலனிய காலகட்டத்தின் கிழக்குக் கடற்கரையோர சமூக, பொருளாதார, அறிவியல் வரலாறு குறித்து குறிப்பிடத்தக்க ஆய்வு நூல்களை எழுதியவர் எஸ்.ஜெயசீல ஸ்டீபன். கி.பி.16, 17-ம் நூற்றாண்டுகளில் போர்ச்சுக்கீசிய மதபோதகர்களால் தங்களது பயன்பாட்டுக்காகத் தொகுக்கப்பட்ட போர்ச்சுக்கீசு-தமிழ் அகராதிகளைத் தொகுத்து சீர்செய்து தற்போது வெளியிட்டிருக்கிறார்.
பனாசியில் உள்ள கோவா மத்திய நூலகம், லிஸ்பனில் உள்ள புவியியல் சங்க நூலகம், ரோம் மத்திய தேசிய நூலகம், பாரீஸ் தேசிய நூலகம் ஆகியவற்றில் பாதுகாக்கப்பட்டுவரும் சுவடிகளைப் படியெடுத்து, அவற்றின் அடிப்படையில் இந்த அகராதியை உருவாக்கியிருக்கிறார். போர்ச்சுக்கீசு மொழியிலும் தமிழிலும் ஏற்பட்டிருக்கும் எழுத்துச் சீர்திருத்தங்களுக்கு ஏற்ப அமைந்திருக்கிறது இந்தப் புதிய அகராதி. தமிழ்ச் சொற்களில் மட்டும் மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தைய பழுப்பு வாசனை.
- புவி
அகராதி: போர்ச்சுக்கீசு-தமிழ்
தொகுப்பாசிரியர்:
எஸ்.ஜெயசீல ஸ்டீபன்
இந்திய ஐரோப்பியவியல் ஆராய்ச்சி நிறுவனம்
புதுச்சேரி- 605009
விலை: ரூ.800
தொடர்புக்கு:
inineues@yahoo.com