தமிழ் சினிமாவில் தஞ்சை மண்ணின் வாழ்க்கை மிகக் குறைவாகவே இடம்பெற்றுள்ளது. தஞ்சை வட்டார வாழ்க்கையை இலக்கியம் பதிவுசெய்த அளவுக்கு சினிமாவில் அழுத்தமாக, உண்மையாக எவரும் பதிவுசெய்ததில்லை.
நவீனத் தமிழ் இலக்கியத்தின் மகத்தான படைப்பாளி தி.ஜானகிராமன். அவருடைய ‘மோகமுள்’, ‘மரப்பசு’, ‘அம்மா வந்தாள்’, ‘நளபாகம்’ போன்ற நாவல்களும் சிறுகதைகளும் தஞ்சை மண்ணைப் பேசிய ஒப்பற்ற இலக்கியப் படைப்புகள். தி.ஜானகிராமன் எழுதிய நாடகம் ‘நாலு வேலி நிலம்’. அதை சகஸ்ரநாமம் தனது ‘சேவா ஸ்டேஜ்’ நாடகக் குழுவின் மூலம் மேடையேற்றினார். பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த நாடகத்தை சகஸ்ரநாமமே திரைப்படமாகத் தயாரிக்க முன்வந்தார். தி.ஜானகிராமன் கதை, வசனம் எழுதிய ஒரே படம் இதுதான் என நினைக்கிறேன். ஜானகிராமனின் வசனம் படம் முழுவதும் அற்புதம். படத்தின் இயக்குநர் முக்தா சீனிவாசன். 1959-ல் வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் சகஸ்ரநாமம், எஸ்.வி.சுப்பையா, குலதெய்வம் ராஜகோபால், முத்துராமன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். படத்தின் இசை கே.வி.மகாதேவன். கேமரா நிமாய் கோஷ்.
சொந்தமாக நாலு வேலி நிலம் வாங்க வேண்டும் என்று கனவுகண்ட கண்ணுசாமியின் கதையைச் சொல்கிறது இந்தத் திரைப்படம். இன்னொரு தளத்தில், வாழ்ந்து கெட்ட மிராசு ஒருவரின் வாழ்க்கையைக் காட்சிப்படுத்தியிருக்கிறது. தஞ்சை மண்ணுக்கே உரித்தான பேச்சுமொழி, வழக்குச் சொற்கள், காபி மீது கொண்டுள்ள விருப்பம், இசை கேட்பதில் உள்ள ஆர்வம், கோயில், திருவிழா, தேரோட்டம், கிராமத்து விவசாயிகளின் எளிய வாழ்க்கை என மண்ணையும் மனிதர்களையும் திரை எழுத்தின் வழியே தி.ஜானகிராமன் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஒருகாலத்தில் தஞ்சைப் பகுதியில் நூறு வேலி நிலம் வைத்துக்கொண்டு ஊரையே ஆட்சிசெய்த மிராசுதார்கள் இருந்தார்கள். நாளடைவில் இவர்கள் சீட்டு, குடி, ரேஸ், பெண் பித்து, ஊதாரித்தனம் என வீழ்ச்சியடைந்தார்கள். ஆனாலும், ஊரில் பழைய வறட்டுக் கௌரவத்துடன் பழம்பெருமைகளைப் பேசியபடியே வாழ்ந்தார்கள். அப்படி ஒரு மிராசுதான் வாள்சுத்தியார். அவரது வறட்டுக் கௌரவம், எடுத்தெறிந்து பேசும் குணம், பழிவாங்கும் கோபம், மனைவி -பிள்ளைகளிடம் காட்டும் அதிகாரம் என அத்தனையும் தி.ஜானகிராமன் துல்லியமாகப் பதிவுசெய்திருக்கிறார். வாள்சுத்தியாராக சகஸ்ரநாமம் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
‘நாலு வேலி நிலம்’ திரைப்படம் வெளியான காலத்தில் வெற்றிபெறவில்லை. ஆனால், இன்று பார்க்கையில் தஞ்சை மண்ணின் நிஜமான வாழ்க்கை ஆவணமாகத் தோன்றுகிறது. ஊரில் கோயில் திருவிழா நடக்கிறது. தலைமுறையாக வாள்சுத்தியார் நடத்திவந்த மண்டகப்படி அவரிடம் பணம் இல்லாமல்போனதால் சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருக்கிறது. ஊரின் புதிய பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்ட கண்ணுசாமி அந்த மண்டகப்படியை ஏற்று நடத்துகிறார். நாயன இசை முழங்கச் சிங்க வாகனத்தில் சாமி புறப்பாடு தொடங்குகிறது. சீட்டு, குடி எனத் திரிந்து தனது நூறு வேலி நிலத்தை வாள்சுத்தியார் அழித்துவிட்டார். இப்போது மிச்சமிருப்பது ஒண்ணேகால் வேலி நிலம் மட்டும்தான் என அவரது மனைவி குத்திக்காட்டுகிறாள். அதைக் கேட்டு வாள்சுத்தியார் மனைவியை அடிக்கப்போகிறார். அவளோ வீதியில் சாமி ஊர்வலம் வரப்போகிறது, அதற்குள் தேங்காய் உரித்துக்கொடுங்கள் என முழுத் தேங்காய் ஒன்றைத் தருகிறாள். அதற்கும் வாள்சுத்தியார் கோவித்துக்கொள்கிறார்.
அந்த நேரம் அவரது வீட்டுவாசலுக்குச் சாமி ஊர்வலம் வந்து நிற்கிறது. வாசற்கதவு சாத்தப்பட்டிருப்பதால் பூசாரி வெளியே காத்திருக்கிறார். வாள்சுத்தியார் குடும்பம் வெளியே வரவில்லை. இதனால், சாமி அடுத்த வீதிக்குப் புறப்பட்டுவிடுகிறது. மிகத் தாமதமாக வெளியே வரும் வாள்சுத்தியார் இதை அறிந்து கோபம்கொள்கிறார். கண்ணுசாமி வேண்டுமென்றே அவமதித்துவிட்டதாகப் பழிவாங்கத் துடிக்கிறார்.
ஊரில் தனது அதிகாரம் செல்லாக் காசாகிவிட்டதைச் சகித்துக்கொள்ள முடியாமல், வாள்சுத்தியார் தேரை ஓட விடாமல் நிறுத்த முயல்கிறார். ஆனால், முத்துராமனும் ராஜகோபாலும் சேர்ந்து மக்களைத் திரட்டி தேரை ஓடச் செய்கிறார்கள். தேரோட்டம் படத்தில் மிக அழகாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. கிராமத்தின் பெண் மருத்துவர், ஆசிரியர், பாக்ஸ் கேமராவில் போட்டோ எடுத்தபடியே அலையும் வாள்சுத்தியாரின் மகன், மூன்று சீட்டு ஆடுபவர்கள், நிலத்தரகு செய்யும் ஆள், கும்பகோணத்து வக்கீல், நிலத்தைக் குத்தகை பார்க்கும் விவசாயி, தெருக்கூத்துக் கலைஞர்கள், ஊர்க்கொல்லர், பண்ணையாட்கள் எனக் கிராம வாழ்க்கையும் அதன் மனிதர்களும் அசலாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.
‘நான்கு மறை தீர்ப்பு’ பாடலை துந்தனா வாசித்தபடியே ஆணும் பெண்ணுமாக இரண்டு யாசகர்கள் பாடிக்கொண்டு போகிறார்கள். மனதை உருக்கும் பாடல். என்றைக்குமான அறத்தை ஒலிக்கும் பாடலாகவே உள்ளது. இதுபோலவே, ‘ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே’ நாட்டுப்புறப் பாடலின் அழகான இசை வடிவம். வணிகக் காரணங்களுக்காக இணைக்கப்பட்ட நடனம் ஒன்றுதான் படத்தின் பலவீனம்.
கலைவாணருடன் நெருக்கமாக இருந்தவர் சகஸ்ரநாமம். தி.ஜானகிராமன் எழுத்தின் மீது அபிமானம் கொண்டு அவருடன் நெருங்கிப் பழகியவர். ஜானகிராமனைக் காண அவரது வீட்டுக்கு சகஸ்ரநாமம் வந்துபோவதைப் பற்றி எம்.வி.வெங்கட்ராம் தனது ‘இலக்கிய நண்பர்கள்’ நூலில் பதிவுசெய்திருக்கிறார். ‘நாலு வேலி நிலம்’ போன்ற படங்களை நாம் கொண்டாடியிருக்க வேண்டும். அது தி.ஜானகிராமனைப் போன்ற இலக்கியவாதிகளை மேலும் சிறந்த திரைப்படங்களை எழுதத் தூண்டியிருக்கும்; சகஸ்ரநாமம் போன்றவர்களை இன்னும் சிறந்த படங்களை உருவாக்க வைத்திருக்கும்.
- எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: writerramki@gmail.com