எஸ்.ராமகிருஷ்ணன்
உலகைச் சுற்றிவந்து வரலாற்றின் சாட்சியமாக விளங்கிய சாகசப்பயணி இபின் பதூதா. 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இபின் பதூதா, 30 ஆண்டு காலம் 44 நாடுகளைச் சுற்றிவந்திருக்கிறார். தனது பயண அனுபவங்களைத் தனி நூலாக எழுதியிருக்கிறார். ஒரு தமிழ்ப் படத்தில் இபின் பதூதா நகைச்சுவைக் கதாபாத்திரம்போல சித்தரிக்கப்படுவார் என்று வரலாற்று அறிஞர்கள் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.
சோ இயக்கத்தில் வெளியான ‘முகமது பின் துக்ளக்’ படத்தில் இபின் பதூதா ஒரு முக்கியக் கதாபாத்திரமாகத் தோன்றுகிறார். துக்ளக்கின் நண்பராகவும் உதவியாளர்போலவும் அந்தக் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் வேறு எந்த மொழித் திரைப்படத்திலும் இபின் பதூதா இடம்பெற்றதில்லை!
படத்தில் துக்ளக் அவரை ஸ்டைலாக பதூதா என அழைக்கும் விதம் மறக்க முடியாதது. படத்தின் டைட்டில் கார்டில் ‘டைரக்சன் கற்றுக்கொள்ள முயற்சி’ என்று சோ போட்டிருப்பது அவரது சுயஎள்ளலின் அடையாளம். படத்தின் வசனம் கேலியும் கிண்டலும் குத்தலும் கொண்டது. இன்றைய மீம்ஸ், நையாண்டிகளுக்கு முன்னோடியாக உள்ள படம் அது.
14-ம் நூற்றாண்டில் டெல்லியை ஆண்டவர் சுல்தான் முகமது பின் துக்ளக். அவரைப் பற்றி ஆராயும் சரித்திர ஆய்வாளர் ஒரு அகழாராய்ச்சியில் துக்ளக், இபின் பதூதா ஆகியோரின் உடல்களைக் கண்டெடுக்கிறார். அவர்கள் இன்னும் இறக்கவில்லை. மூலிகைச் செடிகளோடு புதைக்கப்பட்டவர்கள் உயிரோடு விழித்து எழுந்துவிடுகிறார்கள். துக்ளக், இபின் பதூதாவின் வருகையும், அதை ஒட்டி நடக்கும் நிகழ்வுகளும் கலகலப்பானவை. அதிலும் துக்ளக் தேர்தலில் போட்டியிட்டுப் பிரச்சாரம் செய்வது, கட்சி தாவுவது, இலாக்கா இல்லாத மந்திரிகளை நியமிப்பது, 450 உதவி பிரதமர்களை அறிவிப்பது, பாரசீகத்தை ஆட்சிமொழியாகக் கொண்டுவர முடிவெடுப்பது, லஞ்சத்தை ஒழிக்க அதைச் சட்டரீதியாக்கிவிடுவது எனப் படம் முழுவதும் அரசியல் நையாண்டியின் அமர்க்களம். துக்ளக் கதாபாத்திரத்தில் சோ குதித்துக் குதித்து நடப்பதும், அவரது முட்டாள்தனமான செயல்களும் இவர்தான் உண்மையான இம்சை அரசன் என்பதுபோல் இருக்கிறது.
‘முகமது பின் துக்ளக்’ திரைப்படம் 1971-ல் வெளிவந்தது. 1968-ல் நாடகமாக நிகழ்த்தி பெரும் வெற்றி கண்ட பின்பு அதை சோ திரைப்படமாக்கியிருந்தார். இந்தத் திரைப்படத்தில் இபின் பதூதாவாக நடித்திருப்பவர் பீலி சிவம். பொதுவாக, தமிழ்த் திரைப்படத்தில் மன்னர் என்றாலே பகட்டான ஆடை அலங்காரம், கிரீடம் அணிந்து வீர வாளேந்திச் சண்டையிடும் பெரும் வீரராகவே சித்தரிப்பார்கள். ஆனால், ‘முகமது பின் துக்ளக்’ இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படம். இதில் வரும் துக்ளக் நல்லவனுமில்லை, கெட்டவனுமில்லை. ஒரு குழப்பவாதி. சர்வாதிகாரத்தின் அடையாளம். துக்ளக்கின் நாக்குதான் அவரது சவுக்கு. அவர் அளித்த குரூரத் தண்டனைகளும், பிற்போக்குத்தனமான கட்டளைகளும் அவரது வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தன.
துக்ளக்கைப் பற்றி ஞானபீடம் பரிசு பெற்ற கன்னட எழுத்தாளர் கிரீஷ் கார்னாட் ஒரு நாடகம் எழுதியிருக்கிறார். அதில் வரும் துக்ளக் முற்றிலும் வேறுபட்டவர். டெல்லி சுல்தான்களின் வரலாற்றில் துக்ளக் எப்போதும் தனித்து அறியப்படுகிறார். சர்வாதிகாரமாக துக்ளக் எடுத்த முடிவுகள் பெரும் தோல்வியைச் சந்தித்தன. குறிப்பாக, தலைநகர் டெல்லியை மாற்றிப் புதிய தலைநகராக தெளலதாபாதை அறிவித்து மக்கள் உடனே இடம்பெற ஆணையிட்டது அவரது கிறுக்குத்தனமான செயல். இதுபோலவே செப்பு நாணயங்களுக்குப் பதிலாக வெள்ளி நாணயங்களை மாற்ற அனுமதி கொடுத்தது. விவசாயிகளுக்கு அதிக நிலவரி போட்டது. வேலையில்லாத படைப்பிரிவை உருவாக்கியது. இப்படி துக்ளக் ஆட்சியில் நடந்த குளறுபடிகள் ஏராளம்.
துக்ளக் என்ற சரித்திரக் கதாபாத்திரத்தை வைத்துக்கொண்டு அன்றைய அரசியலைக் கடுமையாக விமர்சித்திருந்தார் சோ. படத்தின் தொடக்கக் காட்சியில் துக்ளக்கின் தர்பாருக்கு வரும் இபின் பதூதா மக்களின் குற்றச்சாட்டுகளை துக்ளக்கின் முன்பு முன்வைக்கிறார். அதற்குப் பதில் தரும் துக்ளக், “என் நாட்டு மக்களைக் கஷ்டப்படுத்துவதற்கு எனக்கு உரிமையில்லையா?” என்று மறுகேள்வி கேட்கிறார். அகம்பாவம், அலட்சியம், திமிர் இந்த மூன்றும் ஒன்றுசேர்ந்த கலவைதான் துக்ளக் என்பதை முதற்காட்சியிலே மனதில் பதியவைத்துவிடுகிறார்கள்.
வரலாற்றில் வாழ்ந்த துக்ளக், படத்தில் இடம்பெற்றது போன்ற கேலியான முட்டாள் இல்லை. டெல்லி சுல்தானாக விளங்கிய துக்ளக் தத்துவம், கணிதம், வானவியல், தத்துவத்தில் ஆழ்ந்த புலமைகொண்டவர். பாரசீகம், அரபு, துருக்கி, சம்ஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளை அறிந்தவர். அவரே ஒரு எழுத்தாளர். சர்வாதி காரியாக நடந்துகொண்டதே அவர் மீதான குற்றசாட்டு.
துக்ளக் ஆட்சியின்போது இந்தியாவுக்கு வந்த இபின் பதூதா, மன்னரின் நெருக்கமான நண்பராக இருந்திருக்கிறார். சூபி ஞானியை வணங்கியதால் துக்ளக்கின் கோபத்துக்கு உள்ளாகி சிறைப்பட்டிருக்கிறார். இபின் பதூதாவின் பயணக் குறிப்புகள் மிகவும் துல்லியமானவை. அதில் துக்ளக்கின் ஆட்சி பற்றியும், நிர்வாகச் சீர்திருத்தம் காரணமாக ஏற்பட்ட குளறுபடிகளையும் பதூதா விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார்.
முகமது பின் துக்ளக் தனது நட்பை வெளிப்படுத்தும் விதமாக, இபின் பதூதாவுக்கு நீதிபதி பதவி கொடுத்திருக்கிறார். ஆண்டுக்கு 5,000 தினார் ஊதியம் வழங்கப்பட்டிருக்கிறது. அன்று ஒரு சராசரிக் குடும்பத்தின் மாத வருமானம் ஐந்து தினார்.
இபின் பதூதா ஏழு ஆண்டுக் காலம் துக்ளக் அரசின் பணியில் இருந்தார். அப்போது, இந்தியா முழுவதும் பயணித்திருக்கிறார். தென்னிந்திய மக்களின் வாழ்க்கை முறை பற்றிக்கூட எழுதியிருக்கிறார். தென்னாட்டு மக்கள் வெற்றிலைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என இபின் பதூதா வியந்து எழுதியிருக்கிறார்.
சோவின் ஆதர்சம் நாடக ஆசிரயர் ஜார்ஜ் பெர்னாட் ஷா. ஆகவே, அவரைப் போலவே சோவும் கூர்மையான அரசியல் விமர்சனம் கொண்ட நாடகங்களை எழுதியிருக்கிறார். சோவின் அரசியல் நிலைப்பாடுகளில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. ஆனால், அவர் தன் காலகட்ட அரசியல் அபத்தங்களைத் தோலுரித்துக்காட்டினார் என்ற அளவில் ‘முகமது பின் துக்ளக்’ படத்தை ரசித்துப் பாராட்டவே செய்வேன்.
- எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: writerramki@gmail.com