புராணங்களையும் அவற்றில் இடம்பெற்றிருக்கும் சம்பவங்களையும் வைத்து நாவல்கள், சிறுகதைகள் போன்றவை சமீப காலமாக அதிக அளவில் எழுதப்பட்டுவருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை புராண காலம் பொற்காலம் என்ற கற்பனைக்குத் தீனி போடும் விதத்தில் இருப்பவை. இந்தப் போக்குக்கு மாறாக, புராணக் கதையின் மறுகூறலைச் சாத்தியப்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு, ஆம், சாத்தியப்படுத்த முடியும் என்று பதில் கூறுகிறது சமீபத்தில் வெளியான ‘ஆரண்யகா’ கிராஃபிக் நாவல். இந்த நாவலை எழுதியதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் கிராஃபிக் நாவலாசிரியர் என்ற பெருமையைப் பெறுகிறார் அம்ரிதா பட்டீல்.
புகழ்பெற்ற புராண மறுகூறல் எழுத்தாளரான தேவ்தத் பட்டநாயக்கின் சிந்தனையில் விளைந்த இந்தக் கதைக்கு, அம்ரிதா பட்டீல் எழுத்தாலும் வண்ணங்களாலும் உருவம் கொடுத்திருக்கிறார். மகாபாரதத்தில் வரும் சிறிய கிளைக்கதையிலிருந்து இந்த நாவல் உருவாக்கப்பட்டிருக்கிறது. யாக்ஞ்வல்கிய முனிவருக்கு இரண்டு மனைவிகள். ஒருவர் மைத்ரேயி இன்னொருவர் காத்யாயனி. இந்த காத்யாயனிதான் ‘ஆரண்யகா’ நாவலின் கதைநாயகி. “கானகக் கதைகளெல்லாம் பெரும்பாலும் ஆண்களைப் பற்றியவை. என்னைப் போன்ற, கானகத்தைத் தன்னுள் வைத்திருக்கும் கானகிகளின் கதைகளைக் கேட்பார் யாருமில்லை” என்கிறாள் காத்யாயனி.
“சமையலறையில் வேலை முடிந்ததும் கானகத்துக்கு நழுவிச் சென்றுவிடுவேன். அங்கே நான் புத்தம் புதிதாக இன்பத்தைக் கண்டடைந்தேன். கானகத்துக்குச் சென்ற முதல் நாள் இரவு ஒரு விஷயத்தைப் பார்த்தேன். மரங்களின் விதானம்! எத்தனையோ முறை பார்த்ததுதான். ஆனால், மரங்கள் தங்களின் விதானம் ஒன்றுக்கொன்று தொட்டுவிடாமல் இருப்பதற்கு எவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்கின்றன என்பதை முதன்முறையாகப் பார்த்தேன்” என்கிறாள் காத்யாயனி.
கண்டுகொள்ளப்படாத மனைவியாக மகாபாரதத்தில் வரும் காத்யாயனியின் வேட்கைதான் இந்த நாவல். அவளின் வேட்கையை உருவகப்படுத்தும் விதமாகவே இந்த நாவலில் காடு அமைந்திருக்கிறது. கூடவே, பருவநிலை மாற்றத்தின் கொடும் விளைவுகளைச் சந்தித்துக்கொண்டிருக்கும் நமக்குக் காடு இயற்கையின் மிக முக்கியமான அங்கம் என்று உணர்த்தும் விதத்தில் இந்த நாவலில் இடம்பெற்றிருக்கிறது. இருட்டினூடாக காட்டையும் அதன் மரங்கள், செடிகள், விலங்குகள், பறவைகள் போன்றவற்றையும் அம்ருதா பட்டீல் வெகு நுட்பமாக வரைந்திருக்கிறார். காட்டிடம் தன்னை ஒப்படைத்துக்கொண்ட பெண்ணின் தனிமையை இந்த ஓவியங்கள் அழகாக நம்மிடம் உணர்த்துகின்றன. மொத்தத்தில் அழகான, நுட்பமான மறுகூறல் இந்தப் புத்தகம்.