இலக்கியம்

360: ஆண்டு முழுவதும் 40% கழிவு

செய்திப்பிரிவு

பெருவெள்ளச் சாட்சியங்கள்

சென்னைப் பெருவெள்ளத்தால் ஏற்பட்ட விளைவுகளை ஆவணமாக்கியிருக்கிறார் இயக்குநர் தயாளன். ‘மழை வெள்ளம் மக்கள்’ என்ற ஆவணப் படத்தை இன்று (ஜனவரி 25) மாலை 5 மணியளவில் கோடம்பாக்கம் எம்.எம்.ப்ரிவியூ திரையரங்கில் திரையிடுகிறார்கள். திரைக் கலைஞர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களும் திரையிடலுக்குப் பின்பாகப் பெருவெள்ளத் தருணங்கள் குறித்து உரையாற்றவும் இருக்கிறார்கள்.

க.ரத்னத்துக்குப் பாராட்டு விழா

பறவைகள் மீது தீராக் காதல் கொண்டவர் க.ரத்னம். இவர் எழுதிய ‘தமிழ்நாட்டுப் பறவைகள்’ புத்தகம் தமிழ்நாட்டில் பறவை ஆர்வலர்களுக்கான ஒரு மிகச் சிறந்த வழிகாட்டியாக இன்றும் திகழ்கிறது. அவருடைய ‘கல்லும் மண்ணும்’, தமிழில் குறிப்பிடத்தக்க நாவல்களுள் ஒன்று. தொடர்ந்து மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டுவருபவர். நேற்று (ஜனவரி 24) அவருக்குப் பாராட்டு விழா நடத்தி கௌரவித்திருக்கிறது கோவை அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த் துறை.

10 கவிதை நூல்கள் வெளியீடு

கவிதைத் தொகுப்புகளெல்லாம் 50 நபர்களுக்கு இடையேதான் சுற்றிக்கொண்டிருக்கும் என்ற வாசகம் பொய்த்துப்போயிருக்கிறது. சென்னைப் புத்தகக்காட்சியில் எக்கச்சக்கமான கவிதைப் புத்தகங்கள் விற்பனையாகியிருக்கின்றன. அந்த உற்சாகத்தோடு இன்று (ஜனவரி 25) மாலை 5 மணியளவில் சேலம் நேஷனல் ஹோட்டலில் வைத்து 10 கவிதை நூல்களை வெளியிடுக்கிறது ‘புது எழுத்து’. கவிதை வெளியீட்டைத் தொடர்ந்து நவீனக் கவிதை குறித்த உரையாடலுக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

ஆண்டு முழுவதும் 40% கழிவு

கீழடி ஆய்வுக்குப் பிறகாகத் தொல்லியல் துறை மீது பொது வெளிச்சம் பாய்ந்துள்ளது என்றால் அது மிகையல்ல. புத்தகக்காட்சியில் கீழடி அரங்குக்குக் கிடைத்த வரவேற்பு ஓர் உதாரணம். மத்திய அரசின் அமைப்பான இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறை (ஏஎஸ்ஐ) சென்னை புத்தகக்காட்சியில் பங்குபெறவில்லை என்றாலும் தம் வெளியீடுகளுக்கு இந்த ஆண்டு முழுவதும் 40% கழிவு தருவதாக அறிவித்துள்ளது. ஏஎஸ்ஐ அலுவலகங்களில் வாங்கிக்கொள்ளலாம்.

SCROLL FOR NEXT