இலக்கியம்

தொடங்கியது அறிவுக் கொண்டாட்டம்! - 750 + அரங்குகள் | 10,00,000 தலைப்புகள் | 20,00,000 வாசகர்கள் | 100 + இலக்கிய நிகழ்வுகள்

செய்திப்பிரிவு

புத்தாண்டுக் கொண்டாட்டத்தோடு புத்துணர்வுடன் தொடங்கியிருக்கிறது புத்தகக்காட்சி. தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் 43-வது ஆண்டாக நடத்தப்படும் இந்தப் புத்தகக்காட்சி, நேற்று (ஜனவரி 9) மாலை தொடங்கியது. இம்முறை, நந்தனத்திலுள்ள ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் மைதானத்தில் நடத்தப்படுகிறது. 750-க்கும் மேற்பட்ட அரங்குகள், கோடிக்கணக்கான புத்தகங்கள், ஆயிரக்கணக்கான மாணவர்களின் பங்கேற்பு எனப் பிரம்மாண்டமாக வாசகர்களை வரவேற்கத் தயாராகியிருக்கிறது.

எதுவரை நடக்கிறது?

ஜனவரி 9 முதல் 21 வரை இந்த ஆண்டு 13 நாட்கள் புத்தகக்காட்சி நடைபெறுகிறது. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், மற்ற நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெறும். 10% கழிவில் புத்தக வேட்டையாடலாம்.

நிகழ்ச்சிகள்

நேற்று (ஜனவரி 9) மாலை நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புத்தகக்காட்சியைத் தொடங்கிவைத்தார். பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் வரவேற்புரை வழங்கினார். மேனாள் கல்வி அமைச்சர் வைகைச் செல்வன் சிறப்புரையாற்றினார். அமைச்சர்கள் கே.எ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், கே.பாண்டியராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்குகொண்டனர். தொழிலதிபர் நல்லி குப்புசாமி நிகழ்வுக்குத் தலைமை ஏற்றார். பபாசி செயலாளர் எஸ்.கே.முருகன் நன்றியுரை வழங்கினார்.

விருதுகள்

சிறந்த பதிப்பாளருக்கான பதிப்புச் செம்மல் க.கணபதி விருது அறிவு நிலையம் பதிப்பகம் அரு.லெட்சுமணனுக்கும், பபாசி வழங்கும் சிறந்த பதிப்பாளருக்கான விருது உமா பதிப்பகம் இராம லெட்சுமணனுக்கும், சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்பகச் செம்மல் ச.மெய்யப்பன் விருது மீனாட்சி புக் ஷாப் ஆர்.அருணாச்சலத்துக்கும், சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா விருது செ.சுகுமாரனுக்கும், சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது பொற்கோவுக்கும், சிறந்த பெண் எழுத்தாளருக்கான அம்சவேணி பெரியண்ணன் விருது ரமணிசந்திரனுக்கும், சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது என்.எஸ்.சிதம்பரத்துக்கும் வழங்கப்படவுள்ளது.

‘இந்து தமிழ் திசை’ அரங்கு - 133, 134

புத்தகக்காட்சியில் ‘இந்து தமிழ் திசை’ அரங்கு (எண்: 133 & 134) வாசகர்களைப் பெருமகிழ்வுடன் வரவேற்கிறது. இந்து குழுமத்திலிருந்து 2020-க்கான ‘இந்து இயர்புக் - 2020’ வெளிவந்திருக்கிறது. அண்ணாவின் வரலாற்றைப் பேசும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’, ஆசையின் ‘என்றும் காந்தி’, சந்துருவின் ‘பாதி நீதியும் நீதி பாதியும்’, சி.மோகனின் ‘நடைவழி நினைவுகள்’, மருதனின் ‘பாரதியின் பூனைகள்’, முகிலின் ‘திறந்திடு சீசேம்’, கரு.ஆறுமுகத்தமிழனின் ‘உயிர் வளர்க்கும் திருமந்திரம்’, கு.கணேசனின் ‘நலம் நலமறிய ஆவல்’, பாமயனின் ‘தொட்டனைத்து ஊறும் அமிழ்தம்’, விக்ரம் குமாரின் ‘மூலிகையே மருந்து’ உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட புதிய வெளியீடுகள் இடம்பெற்றுள்ளன. வண்ணமயமான பொங்கல் மலரும் கிடைக்கும்.

புத்தகக்காட்சியின் சிறப்பம்சங்கள்

புத்தகக்காட்சி வளாகத்தில் பிரம்மாண்டமான திருவள்ளுவர் மணற்சிற்பம் நிறுவப்பட்டுள்ளது. ஒடிஸாவைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் சுதர்ஸன் பட்நாயக் இதை வடிவமைத்திருக்கிறார். மேலும், பல மொழிகளில் வெளிவந்துள்ள திருக்குறளின் அட்டைப்படம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

‘கீழடி - ஈரடி’ எனும் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மாநில தொல்லியல் துறையின் ஒத்துழைப்புடன் இது நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பபாசியின் இணையதளத்தில் (bapasi.com) புத்தகக்காட்சிக்கான நுழைவுச்சீட்டு வாங்கிக்கொள்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பபாசி இணையதளத்தின் மூலம் நிகழ்வுகள் குறித்த விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி பத்து தினங்களும் நடக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனுமதிக் கட்டணம் ஏதும் செலுத்தாமல் புத்தகக்காட்சியைக் கண்டுகளிக்கலாம்.

வாசகர்கள் - எழுத்தாளர்கள் - பதிப்பாளர்களின் இணைப்புப் பாலமாக ‘எழுத்தாளர் முற்றம்’ நிகழ்வு ஒவ்வொரு நாள் மாலையும் நடைபெறும். 25-க்கும் மேற்பட்ட படைப்பாளிகள் பங்கேற்கிறார்கள். புத்தகக்காட்சி நடைபெறும் அனைத்து நாட்களிலும் வாசகர்களுடன் முன்னணி எழுத்தாளர்கள் உரையாடவிருக்கிறார்கள்.

இரண்டு ஏடிஎம் இயந்திரங்கள். ரொக்கப் பிரச்சினை இருக்காது. 15-க்கும் மேற்பட்ட இடங்களில் கார்டு ஸ்வைப்பிங் செய்துகொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இலவச வைஃபை உண்டு. செல்போனுக்கு சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு.

மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் நுழைவுவாயிலில் வைக்கப்பட்டுள்ளன.

எழுத்தாளர்களைக் கெளரவிக்கும் வகையில், அவர்களுக்கென சிறப்பு அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது.

புதிய புத்தகங்கள் குறித்த தகவல்களும், நூல் குறித்த குறிப்புகளும், அரங்கு விவரங்களும் பபாசியின் பேஸ்புக், இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

போதுமான அளவில் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 108 ஆம்புலன்ஸ் ஒன்றும், மருத்துவக் குழுவினரும்
தயாராக இருப்பார்கள்.

வாசகர்களுக்கு வழிகாட்ட தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரூ.100-க்கு சீசன் டிக்கெட் வாங்கினால், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரோ அல்லது நண்பர்கள் நான்கு பேரோ எப்போது வேண்டுமானாலும் வந்துசெல்லலாம்.

நந்தனம் பிரதான சாலையிலிருந்து புத்தகக்காட்சிக்கு வருவதற்காக வாகன வசதி உள்ளது. நடக்கச் சிரமப்படுபவர்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

SCROLL FOR NEXT