இலக்கியம்

வெண்ணிற நினைவுகள்: ஷேக்ஸ்பியரின் குரல் 

செய்திப்பிரிவு

எஸ்.ராமகிருஷ்ணன்

வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்து 455 வருடங்கள் ஆகின்றன. ஷேக்ஸ்பியர் தான் வாழ்ந்த 52 ஆண்டுகளில் 37 நாடகங்களை எழுதியுள்ளார். இன்றும் அவரது நாடகங்கள் சினிமா உலகுக்கு வற்றாத கதைக் களஞ்சியங்களாகவே உள்ளன. நிலவின் வெளிச்சம் உலகுக்குப் பொதுவானது என்பதுபோலத்தான் ஷேக்ஸ்பியரின் படைப்புகளும்.
தமிழில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஷேக்ஸ்பியரின் நாடகங்களைத் தழுவித் திரைப்படமாக்கும் வழக்கம் இருந்தது.

ஆனால், இரண்டாயிரத்துக்குப் பிறகான தமிழ் சினிமாவில் ஷேக்ஸ்பியருக்கு இடமில்லை. புகழ்பெற்ற ஷேக்ஸ்பியரின் கதாபாத்திரங்கள் தமிழ்த் திரையில் தோன்றவில்லை. ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகங்களான ‘மேக்பெத்’, ‘ஒதெல்லோ’, ‘ஹேம்லெட்’ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ‘மக்பூல்’, ‘ஓம்காரா’, ‘ஹைதர்’ என மூன்று வெற்றிப் படங்களைத் தந்திருக்கிறார் பாலிவுட் இயக்குநர் விஷால் பரத்வாஜ். நேரடியாக ஷேக்ஸ்பியர் நாடகத்தை அப்படியே படமாக்காமல், இந்தியச் சூழலுக்கு ஏற்ப அவர் உருமாற்றியுள்ள விதம் பாராட்டுக்குரியது. குறிப்பாக, அவரது ‘ஓம்காரா’வும், ‘ஹைத’ரும் மிகச் சிறப்பான இந்தியத் திரைவடிவங்கள் என்பேன்.

‘ஒதெல்லோ’ நாடகம் மலையாளத்தில் ‘களியாட்டம்’ என்ற பெயரில் ஜெயராஜ் இயக்கத்தில் படமாக்கப்பட்டுள்ளது. அதில் கதகளி நடனக் கலைஞனாக ஒதெல்லோவை உருமாற்றியிருக்கிறார்கள். பைபிளுக்கு அடுத்தபடியாக ஷேக்ஸ்பியரின் நாடகங்களே உலகில் அதிக மொழிகளில் திரைப்படமாக்கப்பட்டிருக்கின்றன.

இதுவரையில் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பல்வேறு மொழிகளில் 250-க்கும் மேலாகத் திரைப்படமாகியுள்ளன. ஜப்பானின் புகழ்பெற்ற இயக்குநரான அகிரா குரசேவா ஷேக்ஸ்பியரின் ‘கிங் லியர்’, ‘மேக்பெத்’தை மிகச் சிறப்பான முறையில் ஜப்பானுக்கு ஏற்ப மாற்றித் திரைப்படமாக்கியிருக்கிறார். இதுபோலவே கிரிகோரி கோசிண்ட்சேவ் இயக்கத்தில் ரஷ்யத் தயாரிப்பில் உருவான ‘ஹேம்லெட்’, ‘கிங் லியர்’ திரைப்படங்கள் காவியம்போல உருவாக்கப்பட்டிருக்கின்றன.

தமிழின் முதல் ‘ஏ’ சான்றிதழ் பெற்ற திரைப்படம் ‘மர்மயோகி’. இது ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கே.ராம்நாத் இயக்கத்தில் 1951-ல் வெளிவந்தது. படத்தில் ஆவி தோன்றி ராணியை மிரட்டுகிறது. ஆவியைக் கண்டு மக்கள் பயந்துவிடக்கூடும் என்பதற்காகவே, தணிக்கைத் துறையினர் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் அளித்தார்கள். ‘மர்மயோகி’யில் எம்.ஜி.ஆர், செருகளத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் கதை ஷேக்ஸ்பியரின் ‘மேக்பெத்’ நாடகத்தைத் தழுவியது. ‘மர்மயோகி’ பற்றிய கட்டுரை ஒன்றில், திரை விமர்சகர் ராண்டர் கை, இப்படம் மேரிகொர்லியின் ‘வெஞ்சென்ஸ்’ நாவலையும் தழுவியது என்ற தகவலைத் தருகிறார். ‘மர்மயோகி’ படத்தின் கதையை எழுதியவர் இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி.

இவரது முழுப் பெயர் அருள் சூசை ஆரோக்கிய சாமி. லண்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பி.ஏ.ஹானர்ஸ் படித்தவர். ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவர். ஆகவே, ஷேக்ஸ்பியரை அவர் தீவிரமாக வாசித்திருந்தார். ‘மேக்பெத்’ நாடகத்திலிருந்து சில முக்கிய நிகழ்வுகளை மட்டுமே ‘மர்மயோகி’யில் பயன்படுத்திக்கொண்டுள்ளார். அத்தோடு, ராபின்ஹுட் கதையை கரிகாலன் கதாபாத்திரமாக உருமாற்றியிருக்கிறார்.

‘மர்மயோகி’ படத்துக்கே முதலில் கரிகாலன் என்றுதான் பெயர் வைத்திருக்கிறார். பின்புதான் படத்தின் தலைப்பு மாற்றப்பட்டிருக்கிறது. ‘மேக்பெத்’ நாடகத்தில் தன்னால் கொல்லப்பட்ட பான்கோவின் ஆவியை விருந்தில் பார்க்கிறான் மேக்பெத். அந்த ஆவி அவனது குற்றத்தின் சாட்சியம்போல அவனைத் துன்புறுத்துகிறது. இதுபோன்ற ஆவி தோன்றும் காட்சி அப்படியே ‘மர்மயோகி’யிலும் இடம்பெற்றுள்ளது.

19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பார்சி தியேட்டரின் நாடகங்கள் மூலம் ஷேக்ஸ்பியர் இந்தியாவில் பரவலாக அறிமுகமானார். ‘ஒதெல்லோ’, ‘மெர்செண்ட் ஆஃப் வெனிஸ்’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘ஹேம்லெட்’ ஆகிய நான்கு நாடகங்களே இந்தியாவில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதற்குக் காரணம், இந்த நாடகங்களின் கதை இந்திய வாழ்க்கைக்கும் அதிகாரப் போட்டிக்கும் நெருக்கமான ஒற்றுமைகளைக் கொண்டிருப்பதே.

கறுப்பு வெள்ளை காலத் தமிழ்த் திரைப்படங்களில் ஷேக்ஸ்பியர் நாடகத்தின் முக்கியக் காட்சி ஒன்றை அப்படியே படத்தில் இடம்பெறச் செய்வார்கள். அது நடிகரின் திறமையை அடையாளம் காட்டுவதற்காக வைக்கப்படும் காட்சியாகும். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இப்படி ‘ஒதெல்லோ’, ‘சீசர்’, ‘ஹேம்லெட்’ என முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார். ‘ரத்த திலகம்’ படத்தில் ‘ஒதெல்லோ’ நாடகம் சிறிய பகுதியாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதில் சிவாஜி ஒதெல்லோவாகவும் சாவித்திரி டெஸ்டிமோனாவாகவும் நடித்திருப்பார். ஷேக்ஸ்பியரின் ஆங்கில வசனங்களை அப்படியே பயன்படுத்தியிருப்பார்கள். ‘மூர்’ எனப்படும் ஆப்பிரிக்கக் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒதெல்லோ தோற்றத்தில் சிவாஜி சிறப்பாக நடித்திருப்பார். இதுபோலவே, ‘சொர்க்கம்’ படத்தில் ஜூலியஸ் சீசரின் கொலை காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் ப்ரூட்டஸாக நடித்திருப்பவர் பாலாஜி. சீசராக நடித்திருப்பவர் சிவாஜி. இதே ‘சீசர்’ நாடகம் ‘ப்ரியா’ படத்திலும் இடம்பெற்றுள்ளது. அதில் ரஜினி சீசராக நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவுக்கு ஷேக்ஸ்பியர் அறிமுகமானது எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்து 1937-ல் வெளியான ‘அம்பிகாபதி’ படத்தின் மூலம் என்கிறார், சினிமா விமர்சகர் தியடோர் பாஸ்கரன். அவரது கட்டுரையில் ஷேக்ஸ்பியரின் ‘ரோமியோ ஜூலியட்’ நாடகத்தின் பால்கனி காட்சியைப் பாகவதர் படத்துக்காக இயக்குநர் எல்லீஸ் ஆர் டங்கன் விரும்பி சேர்த்துக்கொண்டார் எனக் குறிப்பிடுகிறார்.

ஷேக்ஸ்பியரின் ‘ட்வெல்த் நைட்’ நாடகத்தைத் தழுவித் தயாரிக்கப்பட்ட ‘கன்னியின் காதலி’ படத்தில் ஆண், பெண் என இரண்டு வேடங்களில் மாதுரி தேவி நடித்திருக்கிறார். ரோமியோ ஜூலியட்டின் காதல் காட்சி ரஜினி, கமல் இருவரது படத்திலும் இடம்பெற்றிருக்கிறது. இருவரும் ரோமியோவாக நடித்திருக்கிறார்கள். ‘குணசுந்தரி’ என்ற படம் ‘கிங் லியர்’ நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. ‘அறிவாளி’ திரைப்படம் ‘டேமிங் ஆஃப் தி ஸ்க்ரூ’ நாடகத்தை மையமாகக் கொண்டது. இப்படித் தமிழுக்கும் ஷேக்ஸ்பியருக்கும் நீண்ட கால உறவிருந்தது. அந்த உறவு இப்போது துண்டிக்கப்பட்டிருக்கிறது.

உலகெங்கும் இலக்கியத் தரம் கொண்ட திரைப்படங்களை உருவாக்க நினைப்பவர்கள் ஷேக்ஸ்பியரைத்தான் முதலில் தேர்ந்தெடுக்கிறார்கள். தமிழில் நல்ல இலக்கியங்களைத் திரைப்படமாக்கும் முயற்சி குறைவாகவே உள்ளது. விஷால் பரத்வாஜ் போல, ஜெயராஜ் போல ஒரு இயக்குநர் தமிழ் வாழ்வுக்கு ஏற்ப ஷேக்ஸ்பியரை உருமாற்றிப் படம் எடுக்க முடிந்தால் அது பெரும் வரவேற்பைப் பெறும் என்பதே நிஜம்.

- எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: writerramki@gmail.com

SCROLL FOR NEXT