ஈரோடு புத்தகத் திருவிழா பல விதங்களில் ஏனைய ஊர்களுக்கு வழிகாட்டக்கூடியது. இந்தப் புத்தகத் திருவிழாவை நடத்தும் மக்கள் சிந்தனைப் பேரவை அரசியல் சார்பற்ற ஒரு பொதுநல அமைப்பு. ஆரம்பத்தில், 100% தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகளைப் பாராட்டுதல், பாரதி விழா நடத்துவது என்றிருந்த இந்த அமைப்பு, புத்தகத் திருவிழா போன்ற விஷயங்களையும் முன்னெடுத்துக்கொண்டிருக்கிறது.
1 ஒரு லட்சம் உண்டியல்கள்
மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப் படுத்தும் விதத்தில் சுற்றுவட்டாரப் பள்ளிகளுக்கு ஒரு லட்சம் உண்டியல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஓராண்டு முழுவதும் உண்டியலில் பணம் சேர்க்கும் மாணவர்கள், அதனைப் புத்தகத் திருவிழாவுக்குக் கொண்டுவந்தால் உண்டியலில் சேர்ந்த தொகைக்கு வாங்கும் புத்தகங்களுக்கு வழக்கமான 10% தள்ளுபடியோடு கூடுதலாக 10% (சில பதிப்பகங்கள் இன்னும் கூடுதலாகவும்) தள்ளுபடி வழங்கப்படுகிறது.
புத்தக ஆர்வலர் சான்றிதழ்
சுற்றுவட்டாரப் பள்ளிகளிலிருந்து வரும் மாணவர்கள் ரூ.250-க்கு மேல் புத்தகங்களை வாங்கினால் அவர் களுக்கு ‘புத்தக ஆர்வலர்’ என்ற சான்றிதழ் வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறது.
தமிழகமெங்கும் வாசகர் வட்டம்
மக்கள் சிந்தனைப் பேரவை 100 இடங்களில் வாசகர் வட்டங்களைத் தொடங்கியுள்ளது. 20 பேரில் தொடங்கி 50 பேர் வரை ஒரு வாசகர் வட்டத்தில் இருக்கலாம். ஏதாவது ஒரு நூலகத்தில் உறுப்பினராக இருப்பது, வீட்டில் சிறு நூலகமாவது தொடங்கியிருப்பது போன்றவை இந்த வட்டத்தில் இணைவதற்கான அடிப்படைத் தகுதிகள்.
உலகத் தமிழர் படைப்பரங்கம்
இந்த அரங்கில், உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழ்ப் படைப்பாளர்களின் நூல்கள் வைக்கப் பட்டுள்ளன. வரலாறு, இலக்கியம், வாழ்வியல், கவிதை, விஞ்ஞானம் என வெளிநாடுவாழ் தமிழ் எழுத்தாளர் களின் பல்வேறு படைப்புகளைத் தேடித்தேடிப் பெற்று விற்பனைக்கு வைத்துள்ளனர். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் நூல் குறித்தும், பல்வேறு தலைப்புகளிலும் காலை நேரத்தில் உரையாடும் நிகழ்வு நாள்தோறும் நடந்துவருகிறது. தமிழகத்தில் வேறு எந்த புத்தகத் திருவிழாவிலும் இல்லாத தனிச் சிறப்பு இது.
படைப்பாளிகள் அரங்கம்
இந்த அரங்கில் படைப்பாளர்கள் வாசகர்களோடு கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், குறிப்பிட்ட படைப்பை எழுத்தாளரிடம் கொடுத்து, தனக்குப் பிடித்தமான சில பக்கங்களை வாசிக்கச் சொல்லியும் இங்கு கேட்கலாம் என்பது தனிச் சிறப்பு.
வெளியீட்டுக் கலாச்சாரம்
சென்னையைப் போலவே ஈரோடு புத்தகத் திருவிழாவை முன்னிட்டுப் புத்தகங்கள் வெளியிடுவதும் அதிகரித்துவருகிறது. வெளியீட்டு விழாக்களுக்கென்று ஈரோட்டில் தனியாக ஒரு திருமண மண்டபமே ஒதுக்கப்பட்டுள்ளது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில் ஈரோடு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு 125 புதிய நூல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
சிந்தனை அரங்கம்
ஈரோடு புத்தகத் திருவிழாவும், சிந்தனை அரங்கமும் பிரிக்க முடியாதவை. ஈரோடு மாவட்டத்தின் மிகப் பெரிய தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், அதிகாரிகளில் தொடங்கி விவசாயிகள், தொழிலாளிகள் என்று கலவையான பார்வையாளர் கூட்டம் சிந்தனை அரங்கின் சிறப்பு. வாய்ஜாலப் பேச்சாளர்களே மற்ற இடங்களை ஆக்கிரமித்திருக்கும் நிலையில், ஆழமான விஷயங்களைப் பேசக்கூடியவர்களுக்கே இந்தச் சிந்தனை அரங்கில் இடம் என்பது முக்கியமானது.