நம்மைத் தாலாட்டி வளர்த்துவரும் பூமித்தாயின் வரலாற்றை எவ்வளவு சுவாரஸ்யமாக எழுதியுள்ளார் மதன்!
நமது பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம், அதில் நமது பால்வெளி மண்டலம் எனும் காலக்ஸி, நமக்கு பக்கத்து வீடு போல இருக்கும் காலக்ஸி, பூமியின் பிறப்பு, அதன் முடிவு, பூமியில் எப்படித் தண்ணீர் உருவானது. வால் நட்சத்திரங்கள் எங்கிருந்து வருகின்றன? என பல ஆழமான விஞ்ஞானக் கருத்துகளை எளிமையாகச் சொல்லும்விதம் மிக அருமை.
மேலை நாடுகளிலும் இந்தியாவிலும் இதுபற்றி புழங்கிய புராணக் கதைகளையும் சுவையோடு அறிமுகப்படுத்துகிறார். ஆனால், மேலைநாட்டு மதப் பிற்போக்கைக் கிண்டல்செய்யும் தொனி நம் ஊர் புராணங்களைப் பேசும்போது மாறுகிறது.
குறிப்பாக, பால்வெளி மண்டலத்தையும் நம்ம ஊர் பாற்கடலையும் ஒட்டுப்போட்டுத் தைக்கிறார். ஞான திருஷ்டியை சிலாகிக்கிறார். வேதங்களில் விஞ்ஞானம் தேடுகிறார். கறாரான விஞ்ஞான அறிவை இளைஞர்களிடம் வளர்க்க, பழம்பெருமையும் சுயதிருப்தியும் எப்படி உதவும்?
இப்படித்தானே, தங்கள் மத நூல்களில் எல்லாமே இருக்கிறது என்று ஒவ்வொரு மதமும் அடம் பிடிக்கிறது?
- த. நீதிராஜன்
பூமித்தாய்
விந்தையான ஓர் உண்மை வரலாறு
ஆசிரியர்: மதன்
வெளியீடு: தங்கத்தாமரை
விலை:ரூ.70