இலக்கியம்

மதுரை மண்ணின் வாசிப்பு வயல்

செய்திப்பிரிவு

ரூ. 7 கோடி இலக்கு!

சென்னைக்கு வெளியே பபாசி நேரடியாக நடத்திய முதல் புத்தகக் காட்சி என்ற பெருமை மதுரைக்கு எப்போதும் உண்டு. ஏடிஎம் வசதி முதல் கடன் அட்டையைப் பயன்படுத்திக்கொள்ளும் வசதி வரையில் பல முன்னுதாரணங்கள் மதுரையில் உண்டு. இந்த ஆண்டு அண்டை மாவட்டங்களிலும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாலும், அரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாலும் விற்பனை இலக்காக ரூ. 7 கோடி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

மதுரைக்காகப் பிறந்த ‘குழந்தைகள்’

மாதம் ஒரு புத்தக வெளியீடு மட்டுமே விழாவாக நடைபெறுகிற மதுரையில், இப்போது வெளியீட்டு விழாக்கள் வரிசை கட்டுகின்றன. திருவிழாவுக்கு முந்தைய நாளே காலச்சுவடு, உயிர்மை, புனைவு என்று பல பதிப்பகங்களின் சார்பில் வரிசையாகப் புத்தக வெளியீட்டு விழாக்கள் நடக்கின்றன. அநேகமாக மிக அதிக புத்தகங்கள் வெளியிடப்பட்ட மதுரை புத்தகத் திருவிழாவாக இது அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

கலாம் கலாம்தான்!

இந்தாண்டு புத்தகக் காட்சிக்கு முன்கூட்டியே ஏ.பி.ஜே.அப்துல் கலாமைச் சிறப்பு விருந்தினராக அழைத்தது பபாசி. ஆனால், விழா நடைபெறும் தேதிகளில் நான் வெளிநாட்டில் இருப்பேனே என்று வருத்தத்துடன் சொன்னாராம் கலாம். அவர் மறைந்துவிட்டாலும், மதுரைப் புத்தகக் காட்சியில் எங்கு பார்த்தாலும் அவரே நீக்கமற நிறைந்திருப்பது போன்று பிரமை ஏற்படுகிறது.

முந்தைய புத்தகக் காட்சிகளில் கிடைத்த வரவேற்பினால் கலாம் பற்றிய புத்தகங்களைக் குவித்து வைத்திருந்தார்கள் விற்பனையாளர்கள். ‘நியு செஞ்சுரி புக் ஹவு’ஸில் மட்டும் கலாமின் 12 புத்தகங்களைக் காட்சிக்கு வைத்திருந்தார்கள். இதேபோல பெரும்பாலான பதிப்பகங்கள் கலாமைப் பற்றி குறைந்தபட்சம் ஒரு புத்தகத்தையாவது விற்பனைக்கு வைத்திருந்தன. ஆனாலும், ‘கண்ணதாசன் பதிப்பக’த்தின் ‘அக்னிச் சிறகுகள்’தான் முன்னணியில் நிற்கிறது.

எழுத்தாளர் வாசகர் சந்திப்பு

எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் புத்தகக் காட்சி நடத்தி புத்தகம் விற்க வேண்டும் என்று கருதும் பபாசி, பிரபலங்களையும், பெரிய எழுத்தாளர்களையும் சென்னைக்கு மட்டுமே அழைக்கிறது என்று சிலர் சொல்வதுண்டு. இந்த முறை இசையமைப்பாளர் இளையராஜாவையும், நா.முத்துக்குமார் உள்ளிட்ட கவிஞர் களையும் அழைத்திருந்தது பபாசி.

இளையராஜாவின் உடல்நலம் குன்றியதால், அவரைத் தொந்தரவு செய்ய பபாசி விரும்பவில்லை. இருப்பினும் இந்த ஆண்டு புதிய முயற்சியாக வாசகர் எழுத்தாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எழுத்தாளர்களின் பட்டியல் நீண்டுள்ளதுடன், அவர்கள் வாசகர்களுடன் குறைந்தது 2 மணி நேரம் ஒதுக்கவிருப்பது மகிழ்ச்சியான விஷயம்.

அமெரிக்கன் கல்லூரி இலக்கிய விழா

புத்தகக் காட்சிக்கென்று மதுரை வருகிற எழுத்தாளர்களை, அப்படியே மதுரையில் வேறு இலக்கிய நிகழ்வுகளுக்கும் அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால் மதுரையில் திரும்பிய திசையெல்லாம் இலக்கிய நிகழ்வுகள் களை கட்டுகின்றன. அமெரிக்கன் கல்லூரியின் தமிழ் உயராய்வு மையம் சார்பில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 4 வரையில் நடைபெறும் இலக்கிய விழாவில் எழுத்தாளர்கள் ச.தமிழ்ச்செல்வன், இமையம், மலர்விழி, சாம்ராஜ், இந்திரா சௌந்திரராஜன், குமாரசெல்வா உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

SCROLL FOR NEXT