என்றும் காந்தி
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் முன்னெடுக்கும் நூல் மதிப்பாய்வுரைக் கூட்டத்தில் ஆசை எழுதிய ‘என்றும் காந்தி’ நூல் இந்த வாரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் ஆராய்ச்சி உதவியாளர் ஆர்.தேவதாஸ் மதிப்பாய்வுரை வழங்குகிறார். இன்று (நவம்பர் 16) மாலை 5.30 மணியளவில் நடைபெறும் இவ்விழாவில் ‘என்றும் காந்தி’ நூல் 20% தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
ஆத்மாநாம் விருதுகள் - 2019
‘அக்காளின் எலும்புகள்’ கவிதைத் தொகுப்புக்காகக் கவிஞர் வெய்யிலுக்கும், பிராகிருத மொழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்பான ‘காஹா சத்தசஈ’ நூலுக்காக சுந்தர் காளி, பரிமளம் சுந்தர் இணையருக்கும் 2019-க்கான ஆத்மாநாம் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஓட்டல் பிரெசிடென்ட்டில் நவம்பர் 23 அன்று விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. பத்ம விருது பெற்ற சித்தன்சு யஷ்ஷஸ்சந்திராவும், சாகித்ய விருது பெற்ற குளச்சல் யூசுப்பும் விருது வழங்கி சிறப்புரையாற்றுகின்றனர். தமிழ், மலையாளம், குஜராத்தியைச் சேர்ந்த முக்கியமான இலக்கிய ஆளுமைகள் பங்குபெறும் இந்த விழாவுக்கு ஜெயமோகன் தலைமையேற்கிறார்.
க.பஞ்சாங்கம் பெயரில் பரிசு
சங்க கால இலக்கியம் தொடங்கி சமகால நவீன இலக்கியம் வரை திறனாய்வுசெய்த ஆளுமை க.பஞ்சாங்கம். அவர் மீது பற்றுகொண்ட நண்பர்கள் இணைந்து, சமகாலத் திறனாய்வாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாகப் போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறார்கள். க.பஞ்சாங்கத்தின் பிறந்தநாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் பரிசு வழங்கவிருக்கிறார்கள். 2019-ல் திறனாய்வு நூல்களை வெளியிட்டவர்கள் போட்டியில் கலந்துகொள்ளலாம்.
தொடர்புக்கு: nayakarts@gmail.com
அருண்மொழிக்கு நினைவேந்தல்
இயக்கம், ஒளிப்பதிவு, நடிப்பு, திரைமொழி கற்பித்தல், திரைக்கதை என்று திரைத் துறையில் உத்வேகத்தோடு இயங்கிய அருண்மொழி, கடந்த நவம்பர் 9 அன்று காலமானார்.
அவருக்கு இன்று (நவம்பர் 16) மாலை 4 மணியளவில் சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் நினைவேந்தல் கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், செழியன், லிங்குசாமி, அமுதன் உள்ளிட்ட பல்வேறு திரைக் கலைஞர்கள் பங்குகொள்கிறார்கள்.