எஸ்.ராமகிருஷ்ணன்
நம் அனைவரது நினைவிலும் ஒரு பகுதி சினிமாவைப் பற்றியதே. எந்தப் படத்தை எங்கே, யாருடன் பார்த்தோம்? எந்த சினிமா பாட்டு பிடித்தமானது? எந்தப் படத்தைத் தீபாவளி அன்று பார்த்தோம்? எவரது நடிப்பு ரொம்பப் பிடிக்கும்? எந்தப் படம் பார்த்து அழுதோம்? எந்தப் படத்தில் எந்தக் காட்சி வருகிறது? இப்படி சினிமாவைப் பற்றிய நமது நினைவுகள் அழிவற்றவை.
திருமணத்துக்குப் பிறகு புது மாப்பிள்ளை - பெண் சினிமா பார்க்கப்போவதை ஒரு சடங்காக மாற்றியது தமிழ்ச் சமூகம். இங்கே சினிமா வெறும் பொழுதுபோக்கில்லை. சினிமா நடிகர், நடிகைகளின் உடைகளைப் போல அணிந்துகொள்வதும் சினிமா வசனங்களை வாழ்க்கையில் பேசி மகிழ்வதும், சினிமா நட்சத்திரங்களைக் கடவுளைப் போல ஆராதிப்பதும் மாறாது தொடரும் விஷயங்கள். சினிமாதான் தமிழகத்தில் அரசியலைத் தீர்மானிக்கிறது. பொது ரசனையை உருவாக்குகிறது. இவ்வளவு ஏன், கடவுள்களேகூட சினிமா வழியாகத்தான் மக்களிடம் பேசத் தொடங்கினார்கள். சினிமா வழியாகச் சமூகப் பிரச்சினைகளை உரத்துப் பேசியது திராவிட இயக்கம். சினிமாவை ரசிப்பதைத் தாண்டி, தானும் சினிமாவில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையில்லாத தமிழர்களே இல்லை.
தமிழ்நாட்டில் சினிமா ஒரு மதம்போல அதற்கான சடங்குகள் சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், புகழ், செல்வம், புனிதம் என அத்தனையும் கொண்டிருக்கிறது. ஒரு திரைப்படம் திரையரங்கில் ஓடி எவ்வளவு சம்பாதித்தது என்பது குறித்துப் படத் தயாரிப்பாளரை விடவும் மக்களே அதிகம் கவலைப்படுகிறார்கள். நூறு கோடி, இருநூறு கோடி வசூல் எனப் பேசி சந்தோஷப்படுகிறார்கள். வேறு எந்தத் தொழில் குறித்தும் மக்கள் இப்படிப் பேசிக்கொள்வதில்லை.
சினிமா நேரடியாகவும் மறைமுகமாகவும் நிறைய கற்றுத்தந்திருக்கிறது. பாதித்திருக்கிறது. தமிழ்நாட்டில் சினிமா நினைவுகள் இல்லாத ஒருவரைக் காண முடியாது. தவறு செய்கிற மனிதனுடன் அவனது மனசாட்சி பேசும், அவனை எச்சரிக்கும் என்பதைத் தமிழ் சினிமாதான் அடையாளம் காட்டியது. நான் படித்த பாடம் எதிலும் மனசாட்சி பற்றிய குறிப்புகள் இல்லை. வரலாற்றில் எந்த மன்னரும் மனசாட்சியோடு நடந்துகொண்டதாகப் படிக்கவுமில்லை. ‘ஒளிவிளக்கு’ படத்தில் எம்ஜிஆரின் மனசாட்சி பல்வேறு விதமாக அவர் முன்னே தோன்றி, ‘தைரியமாகச் சொல்... நீ மனிதன்தானா?’ எனப் பாட்டு பாடும். ‘பாரதவிலாஸ்’ படத்தில் ‘சக்கப்போடு போடு ராஜா உன் காட்டிலே மழை பெய்யுது’ என மனசாட்சி சிவாஜியைக் கேலிசெய்து பாடும். சிவாஜி மனசாட்சியைத் துரத்தியடித்துச் சண்டையிடுவார். இப்படிப் பல படங்களில் மனசாட்சியைக் கண்டிருக்கிறேன்.
பள்ளி வயதில் மனசாட்சி எப்போது என் முன்னே தோன்றும் எனக் காத்துக்கொண்டிருப்பேன். என் வயதை ஒத்த சிறுவர்கள் பலரிடமும் ‘மனசாட்சியைப் பார்த்திருக்கிறார்களா?’ எனக் கேட்டிருக்கிறேன். கிராமத்து விவசாயிகள், ஆடு மேய்க்கிறவர் எனப் பலரிடம் ‘மனசாட்சியைக் கண்டிருக்கிறார்களா?’ என விசாரித்திருக்கிறேன். ஒருவரும் அவரது மனசாட்சியைக் கண்டதேயில்லை. சினிமாவில் எப்போதும் மனசாட்சி தனியாக இருக்கும்போது தோன்றும். அதிலும் நல்லவர்கள் தவறு செய்யும்போதுதான் மனசாட்சி வெளிப்படும். வில்லனுக்கு ஒருபோதும் மனசாட்சி கிடையாது. எந்தத் தமிழ்ப் படத்தில் முதன்முறையாக மனசாட்சி தோன்றியது எனத் தெரியவில்லை. இப்போது எந்தப் படத்திலும் மனசாட்சி வருவது போன்ற காட்சிகளே கிடையாது. நாம் மனசாட்சியைக் குழிதோண்டிப் புதைத்துவிட்ட பிறகு, எப்படி அது வெளியே வரும்?
கே.பாலசந்தர் இயக்கிய ‘மூன்று முடிச்சு’ படத்தில் ரஜினிகாந்தின் மனசாட்சியாக நடித்திருப்பவர் கே.நட்ராஜ். அழுக்கடைந்த உடையும் கோரையான தாடியுள்ள பிச்சைக்கார உருவமுமாக இருப்பார். ரஜினிகாந்தின் மனசாட்சி ரஜினிகாந்தாகத்தானே இருக்க வேண்டும், எப்படி நட்ராஜ் போல வேறு உருவமாக மாறியது எனப் படம் பார்த்தபோது திகைப்பாக இருந்தது. அது நிஜ மனிதரா இல்லை மனசாட்சிதானா என்றும் குழப்பமாக இருந்தது.
அத்தோடு இதுவரை திரையில் பார்த்த அழகான மனசாட்சிபோல் இன்றிக் கோரமான தோற்றம் கொண்டிருக்கிறதே என வியப்பாகவும் இருந்தது. ஒருவரின் மனசாட்சி வேறு உருவத்திலும் இருக்கக்கூடும் என அறிந்த மறுநிமிடம் என் மனசாட்சியாக வேறு எவரோ இருக்கக்கூடும் என்பதைக் கண்டுகொண்டேன். திடீரென நான் யாரோ ஒருவரின் மனசாட்சியாக இருக்கக்கூடும் என்றும் தோன்றியது. உண்மையில், எழுத்தாளர்கள் யாவரும் இந்த உலகின் மனசாட்சிகளே. அவர்கள் மனிதர்கள் வழிதவறும்போது, தீச்செயல் புரியும்போது எச்சரிக்கிறார்கள். நல்வழி காட்டுகிறார்கள்.
‘மூன்று முடிச்சு’ படத்தில் வரும் மனசாட்சி, ஒவ்வொரு தவறுக்கும் ஒரு முடிச்சுப் போடுகிறது. உரத்த சிரிப்புடன் அந்த முடிச்சை நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு தவறும் ஒரு முடிச்சு என்பது எவ்வளவு அழகான உவமை. பெரிய உண்மையை எவ்வளவு எளிதாக சினிமா காட்டிவிடுகிறது. இப்போதும் எங்காவது துணிக் கயிற்றில் முடிச்சு தெரிந்தால் ‘மூன்று முடிச்சு’ திரைப்படம் நினைவில் வந்துபோகிறது.
‘வசந்தகால நதிகளிலே வைர மணி நீரலைகள்’ என்ற ‘மூன்று முடிச்சு’ படத்தில் வரும் பாடல் எவ்வளவு இனிமையானது. சில பாடல்களை வானொலியில் கேட்கும்போது அதன் இனிமை கூடிவிடுகிறது. வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் எனக் காதலுற்ற ஒருவன், மவுத் ஆர்கன் வாசித்தபடியே பாடும்போது மனதில் அத்தனை இதம் நிறைகிறது. அந்தப் பாடலில் ஸ்ரீதேவியின் அழகு ஜொலிக்கிறது. ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் குரல் வழியாக அப்பாடல் நினைவில் ஒலித்தபடியே இருக்கிறது.
சினிமாதான் நம் அனைவருக்கும் மனசாட்சியின் உருவத்தை அடையாளம் காட்டியது. நிஜவாழ்க்கையில் அதை நாம் பொருட்படுத்தவே இல்லை. உண்மையில், நீங்கள் எவருடைய மனசாட்சி என்பதை அறிந்துகொண்டீர்களா, உங்கள் மனசாட்சி எந்த உருவில் இருக்கிறது என்று தெரியுமா?
சமூகத்தின் மனசாட்சி என்பது நாம் அனைவரும்தானே? நாம் மனசாட்சியைப் போல சமூகத்தை எச்சரிக்கிறோமா என்ன?
- எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: writerramki@gmail.com
சினிமாவை வாசித்தல்...
தமிழின் முக்கியமான இலக்கிய ஆளுமைகளை ‘இந்து தமிழ்’ வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய சி.மோகனின் ‘நடைவழி நினைவுகள்’ தொடர் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து இப்போது எஸ்.ராமகிருஷ்ணனின் புதிய தொடர் ஆரம்பமாகிறது. எஸ்.ராமகிருஷ்ணன் தனது முப்பது ஆண்டு கால எழுத்து வாழ்க்கையில் சிறுகதைகள், நாவல்கள், பயணக் கட்டுரைகள், உலக சினிமா கட்டுரைகள், குழந்தை இலக்கியம், மொழிபெயர்ப்புகள், நாடகங்கள், உலக இலக்கிய அறிமுகம், இலக்கியப் பேருரைகள் என்று பல்வேறு முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டாலும், அவர் ஆற்றியிருக்கும் மிகப் பெரிய பணி எண்ணற்ற வெகுஜன வாசகர்களைத் தீவிர இலக்கியத்துடனும் தீவிர வாசிப்புடனும் பிணைத்தது. இதோ புதிய தொடரான ‘வெண்ணிற நினைவுகள்’ வழியே சினிமாவை வாசிக்க புது சாத்தியங்களை உருவாக்கித் தருகிறார்.