இலக்கியம்

தன்பாலின ஈர்ப்பும் இயல்பானதுதான்!

செய்திப்பிரிவு

வாசுதேந்த்ராவின் துணிச்சலை முதலில் பாராட்ட வேண்டும். அந்தரங்கமாகப் பேசும் இந்தப் பத்து சிறுகதைகளையும் தனது சுயசரிதை என்றே அறிவித்திருக்கிறார் அவர். கன்னடத்தில் வெளியான இந்நூல் இதுவரை ஆங்கிலம், ஸ்வீடிஷ் உள்ளிட்ட 10 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது ஆச்சரியம் இல்லைதான். நமது கட்டுப்பெட்டி மதிப்பீடுகளைச் சுக்குநூறாக்கும் இந்த நூலை மொழிபெயர்ப்பு என ஒரு வாசகர் உணராதவண்ணம் இயல்பான நடையில் மொழிபெயர்த்திருக்கிறார் நல்லதம்பி. மோகனசாமி- மயக்கம் தரும் இந்தப் பெயரைத் தவிர வேறெந்த பெயரும் கதைக் களத்தோடு இவ்வளவு இயைந்திருக்காது. நண்பர்களால் அன்போடு ‘மோகனா’ என்றழைக்கப்படும் மோகனசாமி என்னும் கதாபாத்திரத்தின் வழியே தன்பாலினச் சேர்க்கையில் ஈடுபாடுள்ளவர்களின் மனக்கொதிப்பு, அவர்கள் எதிர்கொள்ள நேரும் அவமானங்கள், புறக்கணிப்புகள், தனிமை... யாவற்றையும் மனதைத் தொடும் விதத்தில், மிகையில்லாது எளிய சொற்களில் விரித்து வைக்கின்றன இக்கதைகள். நேர்மையும் பண்பும் உடைய மோகனசாமி, வாழ்க்கையில் போராடி கௌரவ நிலையை அடைகிறான்.

அவன், தான் விரும்பும் ஆண்களோடு ரகசியமான காதல், காம வாழ்க்கையையும் துய்க்கிறான். இத்தகைய உறவில் உள்ள நோய்த்தொற்று அபாயங்களையும் பொறுப்பாகக் கோடிட்டுக் காட்டுகிறார் ஆசிரியர். தத்ரூபமான பாத்திரங்கள் உயிரோடு நடமாடுகின்றன. வாசிப்பின் முடிவில் அலைக்கழிப்பைத் தாண்டி, தன்பாலினச் சேர்க்கை என்பது வெவ்வேறு வாழ்க்கை முறைகளில் அதுவும் ஓர் வகைமையே என்கிற எண்ணம் வருகிறது. இதுவே வாசுதேந்த்ராவின் நோக்கம். அதில் அவர் வெற்றியடைந்துவிட்டார். போலியற்றத் தன்மை வாசுதேந்த்ரா எழுத்தின் பலம். ஒரு கதையைத் தவிர எல்லா கதைகளிலும் மோகனசாமி இருக்கிறான். கதைகளை அதே வரிசையில் படிக்க, வித்தியாசமான அந்த மனிதனின் பரிணாம வளர்ச்சி படிப்படியாகத் தெரிகிறது. ஒரு நாவலைப் படித்த உணர்வு கிடைக்கிறது.

- பா.கண்மணி

மோகனசாமி
வசுதேந்த்ரா
தமிழில்: கே.நல்லதம்பி
ஏகா பதிப்பகம்
விலை: ரூ. 299

SCROLL FOR NEXT