ஷோபா சக்தியின் ‘இச்சா’
இலக்கிய வாசகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஷோபா சக்தியின் புதிய நாவல் ‘இச்சா’, திருவான்மியூரிலுள்ள ‘பனுவல்’ புத்தக நிலையத்தில் நவம்பர் 4 அன்று வெளியாகவுள்ளது. இலங்கையின் கிழக்குப் பகுதியில், கல்லோயா ஆற்றின் கரையில் குடியிருந்த பழங்குடிச் சமூகத்தின் சிறுமி ஒருத்தி நாவலின் மையம். 1956-ம் ஆண்டு கல்லோயா ஆற்றுப் பள்ளத்தாக்கில் நிகழ்த்தப்பட்ட முதலாவது தமிழினப் படுகொலை தொடங்கி 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை வரையான காலம் நாவலின் பின்புலம். வெளியீட்டு விழாவில் ஷோபா சக்தியுடனான உரையாடலுக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
திருமண அழைப்பிதழில் வாசிப்பு விதை
இலக்கிய ஆர்வலரான கடையநல்லூர் முஹம்மது முஸம்மிலுக்கு அவரது சொந்த ஊரில் திருமணம் நடந்தது. திருமண அழைப்பிதழையே புத்தகமாக்கி அசத்தியிருந்தார் முஸம்மில். ஏற்கெனவே அவர் எழுதிய கட்டுரைகளோடு பொய், புறம், வட்டி, லஞ்சம், மது போன்ற சமூகத் தீங்குகளுக்கு எதிராக எழுதப்பட்ட புதிய கட்டுரைகளைச் சேர்த்து புத்தமாக்கி அதில் சில பக்கங்களை மட்டும் அழைப்பிதழாகத் தயாரித்திருந்தார். ஆடம்பர அழைப்பிதழ் மோகத்துக்கு மத்தியில் முஸம்மிலின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது.
2000-க்குப் பின் பிறந்தவர்களின் இலக்கிய ரசனை எப்படி?
2000-க்குப் பிறகு பிறந்தவர்களின் புத்தக வாசிப்பு (ஆங்கிலம்) எப்படிப்பட்டதாக இருக்கிறது என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. படிப்பு, வேலை இரண்டுமே மனஅழுத்தம் சார்ந்ததாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்கள், உணர்ச்சிவசப்பட வைக்கக்கூடிய மற்றும் அன்றாட நிகழ்வுகளுடன் தொடர்புடைய படைப்புகளைத்தான் விரும்பிப் படிப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘அனிமல் ஃபார்ம்’ நாவலை ரசிக்காத இவர்கள் ‘1984’ நாவலை விரும்பிப் படிக்கிறார்கள். தங்களுடைய நிஜ வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகள் இல்லாத உலகையே அவர்கள் புத்தகங்களில் நாடுகிறார்கள். அதேசமயம், தங்களுடன் தொடர்புள்ளவையாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ரூபி கவுர், சாலி ரூனியின் புத்தகங்களை விரும்புகிறார்கள். ரூபி கவுரின் கவிதைகள் தனிநபர் உணர்வுகளையும் மனப்போராட்டங்களையும் விவரிக்கின்றன. இந்தத் தலைமுறை பெரிய பொருளாதாரத் துயரங்களை அனுபவித்தது அல்ல; அத்துடன் நவீனத் தொழில்நுட்பங்களும் சமூக ஊடகங்களும் வளர்ந்துவிட்ட காலத்தில் பிறந்துள்ளனர். சுதந்திரப் போராட்டம், மன்னர்களின் வரலாறு, சமூகப் பிரச்சினைகளெல்லாம் அவர்களுக்குக் காலம் கடந்தவையாகிவிட்டன என்பதை ஆய்வின் மூலம் உணர்ந்திருக்கிறார்கள். நம்மூரிலும் வாசகர்கள் மத்தியில் ஒரு ஆய்வை நடத்திப்பார்க்கலாம். அவை அரசியல்நீக்கம் பெற்றிருந்தால் வாசிப்பை முறைப்படுத்த முயலலாம்.