இலக்கியம்

360: இது கண்மணி முறுக்கு

செய்திப்பிரிவு

கண்மணி குணசேகரன் என்றவுடன் ‘அஞ்சலை’, ‘வந்தாரங்குடி’, ‘நெடுஞ்சாலை’ நாவல்களெல்லாம் ஞாபகத்துக்கு வரும். முழுநேர எழுத்தாளரைப் போல தொடர்ந்து எழுதிவந்தாலும் பணிமனையில் மெக்கானிக், முந்திரிக்காட்டில் விவசாயி, வீட்டு வேலைகளில் சம்சாரி என்று ஓய்வில்லாத உழைப்புக்குச் சொந்தக்காரர். கோரைகளைக் கொண்டு வீட்டுக்கு அவரே கூரை வேய்ந்துவிடுவார். பெண்களோடு கதையளந்தபடியே மல்லாட்டை உடைக்கையில் அவரிடம் கருக்கொண்ட கதைகள் அநேகம். பெண்களின் வாழ்க்கைத் துயரங்களை எழுத்தில் வடிப்பவராகவே கண்மணியை எல்லோருக்கும் தெரியும். சமையல் தொடங்கி துணி துவைப்பது வரை மனைவியின் அன்றாடங்களிலும் சரிபங்கு வகிப்பவர். கண்மணி தீபாவளி முறுக்கு சுடும் இந்தப் புகைப்படத்தைப் பார்த்தால், ‘எண்ணெய் பட்றபோது, தள்ளி உக்காரு’ என்று சொல்வதுபோல இருக்கிறது.

கோடுகளில் அன்பு நெய்யும் ஓவியர்

பார்ப்பவர்களைப் பேச வைக்கும் அழகான மெளனம்தான் ஓவியம். தமிழ் இலக்கிய உலகத்தில் தனது கோடுகளால் புகழ்பெற்று வருபவர் ஓவியர் பச்சமுத்து தில்லைக்கண்ணு. ‘பாட்டினில் அன்பு செய்’ என்றான் பாரதி. இவர் கோட்டினில் அன்பு செய்துகொண்டிருக்கிறார். “திருவள்ளுவர் தொடங்கி நாளைக்கு எழுதப்போகிற இளைஞர் வரை அனைவரது உருவத்தையும் வரைய வேண்டும் என்பதுதான் தனது அடங்காத ஆசை” என்று சொல்லும் பச்சமுத்து, குடந்தை ஓவியக் கல்லூரியில் ஓவியர் சந்ருவிடம் படித்தவர்.

2010-ல் நடைபெற்ற உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலரில் இடம்பெற்று, அனைவராலும் பாராட்டப்பட்ட ‘கால்டுவெல் முதல் கலைஞர் வரை’ எனும் கருப்பொருளில் 100 தமிழறிஞர்களின் உருவ ஓவியங்களை வரைந்திருக்கும் பச்சமுத்து, தனக்குப் பிடித்தமானவர்களை சந்திக்கிறபோது அவர்களது உருவத்தை வரைந்து அன்பளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். கோட்டுச் சித்திர ஓவியங்களுக்காகத் தேசிய அளவில் பரிசுகள் பெற்றிருக்கிற இவர், “குறைவான கோடுக்குள் நிறைவான ஓவியத்தை என்றைக்கு உன்னால் வரைய முடிகிறதோ அன்றைக்குத்தான் நீ முழுமையான ஓவியன் என்கிற ஓவியர் சந்ருவின் தத்துவ மரபைப் பின்பற்றித்தான் என் எல்லா ஓவியங்களையும் வரைந்து வருகிறேன்” என்கிறார். இதையடுத்து ‘கற்பி’ திரைக்களம் என்கிற படைப்புருவாக்க அமைப்பைக் கவிஞர் முத்துவேலுடன் இணைந்து உருவாக்கி, இந்த அமைப்பின் மூலம் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனைக் கௌரவிக்கும் விதமாக மாபெரும் விழா ஒன்றை நடத்தவுள்ளார். இதற்கான மலர் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுவரும் பச்சமுத்துவின் தீராத காதல் திரைப்படம் இயக்குவது. தூரிகைத் தோழனின் கனவு வெற்றிபெறட்டும்!

- மானா பாஸ்கரன்

முதியோருக்கு ஒரு மாத இதழ்

முதியோர் நல மருத்துவத்தில் தமிழ்நாடு முன்மாதிரியாகத் திகழ மெச்சத்தக்க வகையில் பங்களித்தவர் டாக்டர் வி.எஸ்.நடராசன். முதியவர்களுக்கென அறக்கட்டளை தொடங்கி பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்துவருகிறார். முதுமையில் எதிர்கொள்ளும் நோய்கள், மனக்குழப்பம் இதிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் நோக்கத்தோடு ‘முதுமை எனும் பூங்காற்று’ என்றொரு மாத இதழை இப்போது கொண்டுவந்திருக்கிறார் வி.எஸ்.நடராசன். முதியவர்களை அணுகுவதில் இளைய தலைமுறை எதிர்கொள்ளும் தயக்கங்களுக்கும் இந்த இதழில் ஆலோசனைகள் உண்டு.


என்றும் காந்தி

காந்தியின் 150-வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக மதுரை காந்தி மியூசியத்திலுள்ள காந்தி இலக்கியச் சங்கம் நூல் நிலையத்தில் அக்டோபர் மாதம் முழுவதும் 40% வரை தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஆசை எழுதிய ‘என்றும் காந்தி’ புத்தகம் இங்கே 20% தள்ளுபடியில் கிடைக்கும். தொடர்புக்கு: 94440 58898

SCROLL FOR NEXT