தமிழில் எழுதப்படும் தற்கால இலக்கியம் குறித்து அனைத்திந்திய அளவில் போதிய அறிமுகம் இல்லாதது துரதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். தமிழ் மொழிக்கு உள்ள செவ்வியல் பாரம்பரியமே அதற்குச் சுமையாக உள்ளது.
பழந்தமிழ் இலக்கியங்கள்தான் தமிழில் வளமானவை என்ற பொது அபிப்ராயம் எப்படியோ ஏற்பட்டுவிட்டது. தமிழில் பாரதி, புதுமைப்பித்தன் தொடங்கி முன்னெடுக்கப்பட்ட நவீனத்துவப் படைப்புப் போக்கைப் பெரும்பாலோர் இன்னும் அறியவில்லை.
இந்திய அளவில் சாகித்ய அகாடமி போன்ற விருதுகள் வழியாக அறிமுகமாகும் படைப்பாளர்களும் படைப்புகளும் சுமாராக இருப்பதால் தமிழில் எழுதப்படும் சிறந்த படைப்புகள் மற்றும் படைப்பாளிகள் மேல் கவனம் ஏற்படாமல் போனது.
அசோகமித்திரனின் படைப்புகள்தான் தமிழிலிருந்து நிறைய ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஆங்கிலத்தில் அவருக்குப் பெரும் வாசகத்திரள் இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஆனால் ஆங்கில எழுத்தாளர்கள் மத்தியில் அசோகமித்திரனுக்குச் செல்வாக்கு இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அதே நிலைதான் புகழ்பெற்ற ஸ்பானியக் கவிஞரான ஆக்டோவியா பாஸுக்கும் இருக்கிறது.
இந்தியா முழுவதும் பெருநகரங்களில் தலா ஐம்பது பிரதிகள் வைத்தால் ஐநூறு பிரதிகள் விற்கலாம். தீவிர இலக்கிய எழுத்தாளர்களைப் பொறுத்தவரை எப்போதும் அவர்களுக்குக் குறைவான எண்ணிக்கையில் வாசகர்கள் இருந்தாலும் அவர்கள் செல்வாக்கு மிக்கவர்களாகவே உள்ளனர்.
தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் எழுதப்பட்ட தீவிரப் படைப்புகள் ஆங்கிலத்தில் செல்வதற்கு ஆங்கிலக் கல்வித் துறை சார்ந்த பேராசிரியர்கள்தான் முக்கியக் காரணியாக இருக்கிறார்கள். அவர்களைத் தாண்டிப் படைப்பாளிகள் ஆங்கிலத்துக்குப் போய்ச் சேருவது அரிது.