சி.மோகன்
‘மானுடம் வெல்லும்’ என்பதைத் தன் படைப்புக் குரலாகவும், ‘வானம் வசப்படும்’ என்பதைத் தன் கலை நம்பிக்கையாகவும் கொண்டியங்கிய படைப்பு சக்தி. மானுடக் கலை அழகின் பிரபஞ்சக் குரல். வறுமை பிடுங்கித் தின்ற காலங்களிலும் சரி, கொஞ்சம் செளகரியத்தை அனுபவிக்க வாய்த்த காலங்களிலும் சரி, தன் தோற்றத்திலும் எழுத்திலும் ஓர் அலாதியான மிடுக்கைப் பேணியவர். இவ்விரு விஷயங்களிலும் ஏனோதானோவென்று அவர் ஒருபோதும் ஒப்பேற்றியதில்லை. காலத்தில் கனிந்து மெருகேறியப் படைப்பாளுமை பிரபஞ்சன். மனித மனச் சுழிப்புகளின் மாய வசீகரங்களை வசப்படுத்தியவர்.
நான் ‘க்ரியா’ பதிப்பகத்தில் பணிபுரிந்த காலகட்டத்தில், 1984-ல் பிரபஞ்சனை முதன்முதலில் சந்தித்தேன். திருவல்லிக்கேணி மேன்ஷன்களில் உழன்றபடி, வருமானத்துக்கு வகைசெய்யாத எழுத்துப் பணிகளில் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்தார். பசி அவரை வேலைக்குச் செல்ல உந்தும்போது உடனடியாக வேலையில் சேர முனைவார். அப்படியான ஒரு நெருக்கடிநிலையில் அவர் வந்தடைந்த ஒரு இடம்தான் ‘க்ரியா’. என் மனதில் தங்கிவிட்டிருக்கும் அவருடைய முதல் பேச்சு இது: “சாப்பாடு சாப்பிட்டு ஒரு வாரத்துக்கும் மேலாச்சு மோகன். பன்னும் டீயுமாத்தான் சில நாளா ஓடிட்டிருக்கு. சாப்பாடு சாப்பிடணும்னு ஆசையா இருக்கு...”
‘க்ரியா’வில் நான் பணிபுரிய சென்னை வந்ததை அடுத்து, ‘க்ரியா’வின் அச்சுக் கோப்பகத்தில் பிழை திருத்துபவராக, என்னுடைய வேலைப் பளுவைக் குறைக்கும் முகாந்திரத்துடன் பிரபஞ்சனை நியமித்தார் ‘க்ரியா’ ராமகிருஷ்ணன். அச்சுக் கோக்கப்பட்டதன் மெய்ப்பைத் திருத்தும் பணிக்காக அவர் ஒரு பென்சில் பாக்ஸ் எடுத்துவருவார். அதில் ஐந்தாறு பேனாக்கள் விதம் விதமாக இருக்கும். அது பற்றி ஒருநாள் சிரித்தபடி அவரிடம் கேட்டபோது, “ப்ரூப் பாக்கும்போது போரடிச்சுதுனா வேறொரு பேனால திருத்த ஆரம்பிப்பேன். அப்ப கொஞ்சம் உற்சாகமா இருக்கும்” என்றார். ஆனால், அத்தனை பேனாக்களும் அந்தப் பணியில் அவர் மனம் ஒன்றி ஈடுபட உதவவில்லை. அதனால், அவர் திருத்திய மெய்ப்பை இரவில் நான் ஒருமுறை பார்த்துவிடுவேன். இருந்தாலும், அந்தப் பணியில் அவருக்குச் சுத்தமாக நாட்டமில்லை என்பதை உணர முடிந்தது. அது பற்றி அவரிடம் கேட்டபோது, “ஆமாம் மோகன், வேறு வழியில்லாமத்தான் இருக்கேன், கொடுத்த வேலையை விட்டுட்டுப் போனா நல்லா இருக்காதேனுதான்...” என்றார். நான் இது பற்றி ராமிடம் பேசினேன். அப்போது சார்வாகன் கதைகளைச் சேகரிக்கும் பணி இருந்ததால், அவரின் பல கதைகள் ‘தீபம்’ இதழில் பிரசுரமாகியிருந்ததால் ‘தீபம்’ அலுவலகம் சென்று அதைப் பிரதி எடுக்கும் பணி அவருக்குத் தரப்பட்டது. அதை உற்சாகமுடன் செய்துவந்ததாகத்தான் ஞாபகம். அந்தப் பணி முடிந்ததும் விலகிக்கொண்டார்.
இந்தப் பாடு பலப் பல வருடங்களாக அவர் வாழ்வில் நீடித்துக்கொண்டிருந்தது. ஒரு பணியில் சேர்வதும் அது ஸ்திரப்படத் தொடங்கும்போது, ‘என்ன செய்துகொண்டிருக்கிறோம்?’ என்ற எண்ணத்தின் பீடிப்பில் அதிலிருந்து வெளியேறி மீண்டும் தன் மனம் விரும்பும் எழுத்துப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வதுமாக வாழ்நாளெல்லாம் வாழ்ந்தவர். பெரும் வணிக இதழ்களிலும் அவ்வப்போது பணியாற்றியிருக்கிறார். வாழ்வின் குரூரக் கைகள் அவற்றின் நுழைவாயிலுக்குள் அவரைத் தள்ளிவிடுவதும், அவருடைய லட்சியக் கனவுகளின் கைகள் அவரை வெளியே இழுத்து வந்துவிடுவதுமான வாழ்க்கையோடு பல காலம் போராடியவர்.
80-களில் சென்னையிலிருந்து ‘அசைடு’ என்ற ஆங்கில இதழ் வெளிவந்தது. இது, இந்தியாவின் முதல் நகர இதழ் என்று கருதப்பட்டது. ‘தி நியூயார்க்கர்’ இதழின் பாதிப்பில் உருவானது. இந்த இதழ் நிறுவனம் 80-களின் இறுதியில் அல்லது 90-களின் தொடக்கத்தில் தமிழில் ஒரு இதழ் கொண்டுவரும் முடிவில் பிரபஞ்சனை ஆசிரியராக நியமித்து தொடக்கப் பணிகளை மேற்கொண்டது. அக்காலகட்டத்தில், பிரபஞ்சனுக்கு அது வாழ்க்கை காட்டிய புன்னகை என்றுதான் கொள்ள வேண்டும். அச்சமயத்தில், ஒருநாள் அவரைச் சந்திக்க நேர்ந்தபோது, அவர் மகிழ்ச்சியோடும் தன்னம்பிக்கையோடும் மிளிர்ந்தார். புது பேண்ட், புதுச் சட்டையோடு அழகிய ஷூவும் சேர்ந்துகொண்டிருந்தது. ஆனால், ஆயத்தப் பணிகளோடு தொடங்கப்படாமலே அந்த இதழ் முடிந்துவிட்டது.
அவரோடு முதல் முறையாக வெளியூரில் இரண்டு நாட்கள் சேர்ந்திருக்கும் வாய்ப்பு 2005-ன் தொடக்கத்தில் அமைந்தது. இந்நிகழ்வுதான் பரஸ்பர மதிப்பளவில் இருந்த எங்கள் உறவை, நெருக்கமானதாகவும் அந்நியோன்னியம் மிக்கதாகவும் ஆக்கியது. 2005 பிப்ரவரி 6-ம் தேதி ஓசூரில் எழுத்தாளர் எழில்வரதனின் சிறுகதைத் தொகுப்பான ‘ரதிப் பெண்கள் திரியும் அங்காடித் தெரு’ என்ற சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா நடந்தது. சந்தியா பதிப்பக வெளியீடு. அவ்விழாவுக்கு பதிப்பாளராக ‘சந்தியா’ நடராஜனும், வெளியிட்டு சிறப்புரை ஆற்றுபவராக பிரபஞ்சனும், இவ்விருவருடைய விருப்பத்தின் பேரில் நானும் ஓசூர் சென்று பயணியர் விடுதியில் இரண்டு நாள் தங்கினோம். பிரபஞ்சனுடைய நூல் வெளியீட்டுப் பேச்சு, வழக்கம்போல, நம்பிக்கைக்குரிய இளம் எழுத்தாளருக்கு உற்சாகமும் உத்வேகமும் தருவதாக அமைந்தது. ஆனால், அறையில் அவரோடு இருந்த இரண்டு நாட்களும் மிகவும் குதூகலமானவை. தீர்க்கமான உரையாடல் மட்டுமல்ல. கேலி, கிண்டல், நையாண்டி, எல்லாவற்றுக்கும் மேலாக, சரளமாக வெளிப்பட்ட குசும்பு என சகஜம் பேணிக் கலகலப்பாக இருந்த நாட்கள். இரண்டு வேளை இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டபடியும், தொடர்ந்து புகைத்தபடியும், மிக லகுவாகத் தன்னை வெளிப்படுத்தியபடியும் பிரபஞ்சன் களித்திருந்தார்.
அவரோடு விசேஷமாக அமைந்த தருணங்களிலெல்லாம் ‘சந்தியா’ நடராஜன் உடனிருந்திருக்கிறார். மகிழ்ச்சியின் மிதவையில் அவருடைய உரையாடலில் வெளிப்படும் மாயங்கள் அலாதியானவை. அப்படியான சில தருணங்களில் சிலர் கூடியிருந்தாலும், அதன் இறுதிக் கட்டத்தில், மற்றவர்களை மறந்து, நானும் அவரும் மட்டுமே உரையாடியபடி இருந்திருக்கிறோம். இப்படியான தருணங்களில் அவர் மனம் நெகிழ்ந்து தன் தனிப்பட்ட சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டு கண் கலங்கியதும் உண்டு. தன் தவறுகளென்று சில விஷயங்களைச் சொல்லி தன்னைத் தானே நொந்துகொண்டதும் உண்டு.
அவரின் கடைசிப் பேச்சாக என் மனதில் தங்கியிருப்பது, “மோகன், உங்களுக்குனு 5,000 ரூபாய் ஒதுக்கியிருக்கேன். உங்களுக்கு ஒரு நல்ல சட்டை எடுக்கறோம். ஒரு பார்ட்டி வைக்கிறோம். பார்ட்டியை நடராஜன் ஆர்கனைஸ் செய்யட்டும். செலவு என்னுடையது” என்றதுதான். என் நினைவிலிருக்கும் என்னுடனான அவருடைய முதல் பேச்சுக்கும் கடைசிப் பேச்சுக்கும் இடையில், வானத்தை வசப்படுத்த விழைந்த அவருடைய கலை மனதின் இயக்கம், தேர்ந்தெடுத்த வாழ்வின் இடர்களோடும், கலை நம்பிக்கையோடும் சலனித்துக்கொண்டிருந்தது.
- சி.மோகன், எழுத்தாளர்.
தொடர்புக்கு:
kaalamkalaimohan@gmail.com