இலக்கியம்

எம்ஜிஆரின் நாயகர்... சிவாஜியின் முன்மாதிரி...

செய்திப்பிரிவு

தமிழ்த் திரையுலகில் எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித் இணைகளுக்கெல்லாம் முன்னோடி எம்.கே.டி.பாகவதர்-பி.யு.சின்னப்பா. எம்.கே.டி முதல் சூப்பர் ஸ்டார் என்றால், பி.யு.சின்னப்பா முதல் சூப்பர் ஆக்டர். இருவருமே நாடகத் துறையிலிருந்து திரைப்படத் துறைக்கு வந்தவர்கள். பாகவதருக்கு ‘பவளக்கொடி’ நாடகம் மாஸ்டர் பீஸ் என்றால், பி.யு.சின்னப்பாவுக்கு ‘கோவலன்’ நாடகம். காரைக்குடி சண்முகவிலாஸ் தியேட்டரில் நடத்தப்பட்ட பவளக்கொடி நாடகத்தில் எம்.கே.டி, பி.யு.சின்னப்பா இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். பாகவதர் அர்ஜுனன் வேடமேற்க, கிருஷ்ணனாக நடித்தார் பி.யு.சின்னப்பா. பாடல்களில் பாகவதரும் நடிப்பில் பி.யு.சின்னப்பாவும் முத்திரை பதித்தார்கள்.

அந்நாட்களில், பாடல்களை வெளியிட்ட நிறுவனங்கள், பாகவதர் பாடல்களை ‘கோல்டன் வாய்ஸ் ஆஃப் எம்.கே.தியாகராஜ பாகவதர்’ என்றும், பி.யு.சின்னப்பா பாடல்களை ‘ரிங்கிங் வாய்ஸ் ஆஃப் பி.யு.சின்னப்பா’ என்றும் இசைத்தட்டில் அச்சிட்டு விற்பனை செய்தன. பி.யு.சின்னப்பா பாடிய ‘எல்லோரும் நல்லவரே’, ‘மகாராசர்களே’, ‘நாம் வாழ்வெனும் சோலையில் புகுந்தோமே’, ‘நமஸ்தே நமஸ்தே’, ‘நடை அலங்காரம் கண்டேன்’, ‘காதல் கனிரசமே’, ‘தாயைப் பணிவேனே’, ‘ஸர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம்’, ‘சாரசம் வசீகர கண்கள்’, ‘பூவையர் கற்பின் பெருமை’, ‘மானம் எல்லாம் போன பின்னே’ முதலான பல்வேறு பாடல்கள் காலம் கடந்தும் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.

பாரதியின் பாடகன்

1940-ல் வெளிவந்த ‘உத்தமபுத்திரன்’ திரைப்படத்தில் பாரதியின் ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ என்னும் பாடலைத் தனது சொந்தக் குரலில் பாடி நடித்தார். தொடர்ந்து, தன் படங்களில் ‘அச்சமில்லை’, ‘பாரத சமுதாயம் வாழ்கவே’, ‘வெற்றி எட்டுத் திக்கும் எட்ட’ ஆகிய பாடல்களையும் பாடியிருக்கிறார். திரையில் மட்டுமில்லை, மேடைகளிலும் பாரதியின் பாடல்களை முழங்கியவர் சின்னப்பா. பாரதியார் மணி மண்டபம் கட்டுவதற்கு அந்தக் காலத்திலேயே பி.யு.சின்னப்பா ஆயிரம் ரூபாய் நன்கொடையளித்தவர்.

தமிழ்த் திரையுலகில் பல்வேறு பரிசோதனை முயற்சிகளில் பங்கெடுத்துக்கொண்டவர் சின்னப்பா. அவர் நடித்த ‘உத்தமபுத்திரன்’ திரைப்படம்தான் தமிழில் முதன்முதலாக ஒரு நடிகர் இரட்டை வேடங்களில் நடித்து வெளிவந்த திரைப்படம். இப்படத்தில் சிறப்பாக நடித்த சின்னப்பாவை ‘தவ நடிக பூபதி’ என்று கொண்டாடினார்கள் திரை ரசிகர்கள்.

பாட்டும் பாவமும்

எம்ஜிஆரை எம்.கே.டி.யின் கலையுலக வாரிசாகவும், சிவாஜி கணேசனை பி.யு.சின்னப்பாவின் வாரிசாகவும் குறிப்பிடுவதுண்டு. பி.யு.சின்னப்பாவின் ‘ஜகதலப்பிரதாபன்’ (1944) படத்தில் பாடகராக, வயலின் வாசிப்பவராக, மிருதங்கம் வாசிப்பவராக, கடம் வாசிப்பவராக, கொன்னக்கோல் வாசிப்பவராக ஐந்து வேடங்களை ஏற்று நடித்திருப்பார் சின்னப்பா. ஐந்து விதமான வேடங்களை ஏற்று அவர் செய்த இசைக் கச்சேரியைப் போலவே ‘திருவிளையாடல்’ (1965) படத்தில் சிவாஜி கணேசனும் செய்திருப்பார். சின்னப்பாவின் ‘ஆரியமாலா’ (1941), ‘உத்தமபுத்திரன்’ (1940), ‘அரிச்சந்திரா’ (1944) ஆகிய படங்கள் ரீமேக் செய்யப்பட்டபோது, அந்தத் திரைப்படங்களில் சிவாஜி கணேசனே கதாநாயகனாக நடித்திருந்தார்.

‘கண்ணகி’ (1942) படத்தில் பி.யு.சின்னப்பா ஏற்றிருந்த கோவலன் வேடத்தைப் போலவே ‘தங்கப்பதுமை’ படத்தில் சிவாஜி கணேசனும் வேடம் ஏற்றிருந்தார். ‘மங்கையர்க்கரசி’ (1949) படத்தில் சின்னப்பா ஏற்றிருந்த மூன்று வேடங்களைப் போலவே ‘தெய்வமகன்’ (1969) படத்தில் சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் நடித்திருப்பார். டூயட் பாடல்களில் பி.யு.சின்னப்பா ரொமான்ஸ் நடையோடு சிவாஜி கணேசனின் ரொமான்ஸ் நடையையும்கூட ஒப்பிட்டுப்பார்க்கலாம்.

சிவாஜியோடு மட்டுமல்ல எம்ஜிஆரோடும் சின்னாப்பாவுக்கு நெருக்கம் உண்டு. நாடக மேடைகளில் கதாநாயகனாக சின்னப்பாவும் கதாநாயகியாக எம்ஜிஆரும் பெண் வேடமிட்டு ஏற்று நடித்ததும் உண்டு. ‘அரிச்சந்திரா’ (1944) திரைப்படத்தில் சின்னப்பாவுடன் எம்ஜிஆரும் நடித்துள்ளார். எம்ஜிஆர் இடுப்பில் ஒரு கை வைத்து ஒரு காலை மடக்கியபடி ஸ்டைலாக வாள் சுழற்றுகிற பாணிக்குச் சொந்தக்காரர் சின்னப்பாதான். எம்ஜிஆரின் குருநாதர்களில் ஒருவராக சின்னப்பாவும் இருந்துள்ளார்.

சின்னப்பாவின் தசாவதாரம்

பத்து வேடங்களில் ‘ஆரியமாலா’ (1941) படத்திலும் பி.யு.சின்னப்பா தோன்றினார். அந்தக் காலத்தில் தமிழ்த் திரைப்படங்களுக்கும் கிராமங்களுக்கும் பெரிய இடைவெளி இருந்தது. அந்த இடைவெளியைக் குறைத்த படம் ‘ஆரியமாலா’ என்று திரை விமர்சகர்கள் மதிப்பிடுகிறார்கள். பேராசிரியர் சுந்தரம் பிள்ளை எழுதிய ‘நீராரும் கடலுடுத்த…’ என்னும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இடம்பெற்ற மனோன்மணியம் கவிதை நாடகத்தைத் திரைப்படம் ஆக்கியபோது, அதில் கதாநாயகனாக நடித்தவர் சின்னப்பா. 1946-ல் அவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த ‘விகட யோகி’ திரைப்படம் முழு நீள நகைச்சுவைத் திரைப்படமாக வெற்றியடைந்தது.

பி.யு.சின்னப்பா நடித்த கடைசிப்படம் ‘வனசுந்தரி’ (1951). பி.யு.சின்னப்பா நடித்தது சுமார் 26 படங்கள் மட்டுமே. உயிரோடு வாழ்ந்தது 35 ஆண்டுகள் மட்டுமே. ஐந்து வயதில் வீசிய கலைப்புயல் 30 ஆண்டுகள் சுழன்றடித்து விடைபெற்றுக்கொண்டது.

- மா.தாமோதரகண்ணன்

தொடர்புக்கு: postkavi@gmail.com

செப்டம்பர் 23: பி.யு.சின்னப்பாவின் 68-ம் ஆண்டு நினைவு

SCROLL FOR NEXT