ஷோபா சக்தியின் புதிய நாவல்
ஷோபா சக்தியின் புதிய நாவல் ‘இச்சா’ நவம்பரில் வெளியாகவுள்ளது. “தற்கொலை செய்துகொள்வதில், உலகிலேயே இலங்கைக்குத்தான் நீண்டகாலமாக முதல் இடமிருக்கிறது. போருக்கு முன்பும் போரிலும் போருக்குப் பின்பும் இந்த முதலிடத்திலிருந்து இலங்கை கீழிறங்கவேயில்லை. கூட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் ஓர் சமூகத்தின் சுயசாட்சியமே இந்நாவல் என்று சுருக்கமாகச் சொல்லலாம்” என்கிறார் ஷோபா சக்தி. இலங்கையின் கிழக்குப் பகுதியில் கல்லோயா ஆற்றின் கரையில் குடியிருந்த பழங்குடிச் சமூகத்தின் சிறுமியொருத்தி நாவலின் மையம். 1956-ம் ஆண்டு கல்லோயா ஆற்றுப் பள்ளத்தாக்கில் நிகழ்த்தப்பட்ட முதலாவது தமிழினப் படுகொலை தொடங்கி 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைவரையான காலம் நாவலின் பின்புலம். பழங்குடித் தெய்வங்களும் பைசாசங்களும் கீழைத்தேய மாந்திரீகமும் நாவலுக்குத் தூண்டுதலாக இருந்துள்ளதாம். இந்தப் புதிய நாவலை ‘கருப்புப் பிரதிகள்’ வெளியிடவுள்ளது.
வேலூரில் தஸ்தயேவ்ஸ்கி
‘கனலி’ கலை இலக்கிய இணையதளமும், வேலூர் இலக்கிய வாசகர் வட்டமும் இணைந்து நடத்தும் இலக்கியச் சந்திப்பில் இம்முறை ஜே.எம்.கூட்ஸியின் ‘பீட்டர்ஸ்பர்க் நாயகன்’ நாவலை முன்வைத்து தஸ்தயேவ்ஸ்கி குறித்து உரையாற்றுகிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, செகாவ் என்று ரஷ்ய இலக்கிய ஆளுமைகள் குறித்து எஸ்ரா பேசுகிறார் என்றால் நேரம்போவதே தெரியாது. இம்முறை வேலூர் வாசகர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது! இடம்: எஸ்பிஐ வங்கி அருகிலுள்ள பெல்லியப்பா கட்டிடம். நாள்: செப்டம்பர் 14, மாலை 5.30.
திருச்சியில் புத்தகக்காட்சி
ரோட்டரி கிளப் மற்றும் லேண்ட்மார்க் எக்ஸ்போ இணைந்து நடத்தும் 4-ம் ஆண்டு புத்தகக்காட்சி திருச்சி தில்லை நகரிலுள்ள மக்கள் மன்றத்தில் இன்று தொடங்கி செப்டம்பர் 23 வரை நடக்கிறது. திருச்சிவாசிகள் 10% தள்ளுபடியில் புத்தக வேட்டையாடலாம்.
காரைக்குடியில் புத்தகக்காட்சி
காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் நேற்று தொடங்கிய புத்தகக்காட்சி செப்டம்பர் 22 வரை நடக்கிறது. ‘இந்து தமிழ் திசை’ வெளியீடுகளை அரங்கு எண் 1-ல் பெற்றுக்கொள்ளலாம்.